Pages

Friday, April 2, 2010

உச்ச நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு

சென்னை மாநகர பேருந்துகளில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (சிஎன்ஜி) இன்னும் பயன்படுத்தாமல், உச்சநீதிமன்ற வழிக்காட்டுதலை தமிழக அரசு தட்டிக் கழித்து வருகிறது.


தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று/சுற்றுசூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று 2002ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனையடுத்து தில்லி அரசு, தனது பேருந்துகளில் சிஎன்ஜி கேஸ் பயன்படுத்தி வருகிறது.


சென்னையில் முதற்கட்டமாக ஆட்டோக்களில் கேஸ் பயன்படுத்தும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. கேஸ் உபகரணங்கள் ஆட்டோக்களில் பொறுத்த அதிக செலாகும் என்பதால் இதற்கு தொழிற்சங்கங்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கொல்கத்தாவில் கேஸ் கிட் பொறுத்த ஒரு ஆட்டோவிற்கு 5ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.


இதனையடுத்து 2ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாக அரசு அறிவித்து ஆணையும் பிறப்பித்தது. இந்த தொகையை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, 3ஆயிரம் ரூபாய் என மானியத் தொகை மாற்றப்பட்டது. ஆனால் அந்த தொகை வழங்கப்படுவதில்லை என்று ஆட்டோ தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சென்னை நகரம், புறநகர் பகுதியில் சுமார் 60ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் சுமார் 25ஆயிரம் ஆட்டோக்கள் கேஸில் இயங்குகின்றன. இந்த ஆட்டோக்களுக்கு தேவையான கேசை நிரப்ப போதுமான மையங்கள் (கேஸ் பங்க்கு) இல்லை.


சென்னை நகருக்குள் அண்ணாசாலை, ராயப்பேட்டை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிண்டி உள்ளிட்ட 7நிரப்பு மையங்களே உள்ளன. இதுபோதுமானதாக இல்லை. அரசின் விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் கேஸ் நிரப்பும் மையங்களை அமைக்க பெட்ரோல் பங்க்குகள் முன்வருவதில்லை. இதன் காரணமாக கேஸ் நிரப்பிக் கொள்ள சாலைகளில் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதை அடிக்கடி பார்க்க நேர்கிறது.


இதனால், கேஸ் கிட் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் கூட பெட்ரோல் டீசலை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சுற்றுசூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் பயனற்று நிற்கிறது.


பேருந்துகளுக்கு கேஸ் எப்போது?

2006ம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, படிப்படியாக அரசு பேருந்துகளில் கேஸ் பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு பேச்சளவிலேயே உள்ளது.


திமுக பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கப்பட்டன (3,207 பேருந்துகள் உள்ளன). 2009ல் கூட கேஸ்கிட் பொருத்தப்படாத பேருந்துகளையே வாங்கியுள்ளனர்.


மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டத்தை அரசே சீர்குலைக்கிறது. உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதலை தட்டிக்கழிக்கிறது. தில்லியில் கேஸ் பொருத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் போது சென்னையில் இயக்க அரசு மறுப்பது ஏன்?


இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், “சென்னை நகரில் கூடுதலாக கேஸ் நிரப்பும் மையங்களை அமைக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் அல்லது தமிழக அரசே போக்குவரத்து பணிமனைகளில் கேஸ் நிரப்பும் மையங்களை அமைத்து ஆட்டோக்களுக்கு கேஸ் வழங்க வேண்டும். அரசு பேருந்துகளை கேஸ் முறைக்கு மாற்றும்போதும் இந்த கேஸ் நிரப்பும் மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

தொழிலாளர்களின் குரல் அரசின் செவிகளுக்கு எட்டுமா?

No comments: