Pages

Thursday, April 15, 2010

மறக்கப்பட்ட மறைமலை அடிகள்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கத்தோடு தனித் தமிழ் இயக்கம் கண்டவர் மறைமலை அடிகள். அந்தத் தமிழ் அறிஞர் வாழ்ந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. உடைந்த அவரது உருவ சிலையைக் கூட கண்டுகொள்ள ஆள் இல்லை.


மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். 1876ல் பிறந்த இவர் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். புகழ் பெற்ற தமிழறிஞராகவும் ஆய்வாளராகவும் விளங்கிய மறைமலை அடிகள், தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.

தமிழை, வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். சாதிசமய வேறுபாடின்றிப் சமய சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்தவர்.

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் சாவடி தெருவில் 8ஆண்டுகள் சிரமப்பட்டு வீடு கட்டி வசித்து வந்தார். 1950ல் அவரது மறைவுக்கு பிறகு, அந்த இல்லத்தை 1962 மார்ச் 21 அன்று மறைமலை அடிகளார் கலை மன்றமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 1962, ஜூலை 12 அன்று மதுரை திருஞான சம்பந்தர் ஆதினம் அருட்திரு சோமசுந்தர ஞானசம்பந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்றைய கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்த எம்.பக்தவச்சலம் கலை மன்றத்தை தொடங்கி வைத்தார்.

இந்த கலை மன்றத்திற்கு மத்திய அரசு ரூ.25ஆயிரம், மாநில அரசு ரூ.10ஆயிரம், தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ரூ.5ஆயிரம் என நன்கொடை வழங்கின. இதன் நிர்வாக பராமரிப்பை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ஏற்றுக்கொண்டது.

கடந்த 15ஆண்டுகளாக அந்த கட்டிடத்திற்கு சுண்ணாம்பு கூட அடிக்காமல் உள்ளனர். இதனால் கட்டிடம் பாழடைந்து பொலிவிழந்து கிடக்கிறது என்று பல்லாவரம் ரயில்வே டேசன் ரோடு நடைபாதை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்க செயலாளர் எ.பி.காந்தி கூறுகிறார்.

இந்த கட்டிடத்தில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் கிளை நூலகம் இயங்குகிறது. அதற்கு சைவ சித்தாந்த சங்கம் வாடகையும் வசூலிக்கிறது. இந்தக் கட்டிடம் சிதிலமடைந்து மழைக் காலங்களில் ஒழுகல் ஏற்பட்டு நூலக புத்தகங்கள் நனைகின்றன. கட்டிடத்தின் மேற்பூச்சுக்கள் எல்லாம் பெயர்ந்து விழுந்து உள்ளே இருக்கும் செங்கற்கள் தெரிகின்றன.

கட்டிடத்தின் வாயிலில் மறைமலை அடிகளாரின் மார்பளவு உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பெய்த பெரு மழையால் அந்த பீடம் இடிந்து உருவச் சிலையும் கீழே வீழ்ந்தது.

இதனையடுத்து, இந்த கட்டிடத்தை சரி செய்யப் போவதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை மற்றும் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் என ஒரு வார காலம் மாறி மாறி வந்து முகாமிட்டு ஆய்வு செய்தனர். உடனடியாக நிதி ஒதுக்கி மறைமலை அடிகள் இல்லம் சரி செய்யப்படும். சுற்றுசுவர் கட்டப்படும் என்றெல்லாம் உறுதி அளித்தனர். ஓராண்டாகியும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மறைமலை அடிகள் சிலை கூட மீண்டும் நிறுவப்படாமல் ஓரமாக வைக்கப்படுள்ளது. சிலையை நிறுவவோ, கட்டிடத்தை பராமரிக்கவோ கூட பணம் இல்லை என்று திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் கூறுகிறது.

மறைமலை அடிகளை தமிழக அரசும், அரசு நிர்வாகமும் மறந்துவிட்டது என்றால், சைவ சித்தாந்த சங்கமும் கைகழுவ நினைக்கிறது. சிலையை கூட நிறுவ முடியாதவர்களிடம் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் கலைமன்றத்தை ஒப்படைத்து பாழடைய வைப்பது ஏன்? உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த சூழலிலாவது அந்த இல்லத்தை அரசே ஏற்று தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே!

No comments: