Pages

Monday, May 31, 2010

நாராய் கிழியும் நார் நெசவாளர் வாழ்க்கை


நெசவுத் தொழிலில் தமிழகத்திற்கு ஒரு தனி இடத்தை உருவாக்கி வரும் அனகாபுத்தூர் நெசவாளர் களுக்கு தனியாக ஒரு இடம் கொடுப்பதாக மத்திய மாநில அமைச்சர், அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டது. இதனால் இயற்கை நார் நெசவுத் தொழில் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சென்னை புறநகர் பகுதியில் உள்ள அனாகபுத்தூர் நகராட்சியில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகள் செயல்பட்டு வந்தன. இடநெருக்கடி, போதுமான வருமானம் இல்லாததால் பலர் வெளியேறியது போன்ற காரணங்களால் தற்போது 350 தறிகள் மட்டுமே செயல்படுகின்றன.

இந்த தறிகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். தறிகளால் எழும் சத்தத்தாலும், நூல்களை பதப்படுத்த வாசல்களை ஆக்கிரமித்துக் கொள்வதாலும் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை காலி செய்ய சொல்கின்றனர்.


இத்தகைய நெருக்கடிகளையும் மீறி கற்றாழை, சணல், வாழை, மூங்கில், பைனாப்பிள் உள்ளிட்ட 25வகையான இயற்கை நார்களைக் கொண்டு நெசவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் கீழ் 50குடும்பங்கள் இப்பணிகளை மேற்கொண்டுள்ளன. புடவை, சட்டை, சுடிதார் வகைகள், திரைச்சீலைகள் என நெசவு செய்கின்றனர்.


இத்தகைய துணி வகைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வெளிநாடுகள், பிரபலமான ஜவுளி நிறுவனங்களில் இருந்தும் கேட்கின்றனர். இருப்பினும், போதிய இடவசதி, புதிய உபகரணங்கள் வாங்க வசதியின்மை காரணமாக குறிப்பிட்ட அளவுக்குமேல் இவர்களால் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளனர்.


இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மதுரை முன்னாள் மக்களவை உறுப்பினர் மறைந்த பி.மோகன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பிரபலமானது. 2007ம் ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய ஜவுளித்துறை அதிகாரிகளை அனகாபுத்தூருக்கே அழைத்து வந்து இத்தொழிலை ஊக்குவிக்க கோரினார். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் அப்போது இத்தொழிலை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

இத்தகைய சூழ்நிலையில் நெசவுத் தொழில் தொடர்ந்து இயங்க முதலமைச்சர் இலவச நிலம் வழங்க கோரி தனிப்பிரிவுக்கு நெசவாளர்கள் மனு அளித்தனர். அதன்பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதீப் யாதவ், கைத்தறித் துறை செயலாளராக இருந்த விஸ்நாத் செகாவத் ஆகியோர் இயற்கை நார் நெசவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலவச நிலம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.பாலபாரதி, அன்றைய கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவிடம் மனு அளித்தார். அதனை பரிசீலித்து வருவதாக செய்தியாளர்களிடம் ராஜா கூறினார். ஆனால், 3ஆண்டுகளாகியும் நெசவாளர்களுக்கு இலவச இடம் கிடைக்கவில்லை. அவர் முன்னாள் அமைச்சராகி விட்டதால் வாக்குறுதியும் முன்னாளாகி விட்டதோ?

இது தொடர்பாக அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவர் சேகர் கூறுகையில், “2007ம் ஆண்டு அனகாபுத்தூருக்கு வருகை தந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் இயற்கை நார் நெசவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலவசமாக வீடுகட்டி வழங்கப்படும் என்றார். மிகுந்த நம்பிக்கையோடு இருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது” என்றார்.


“தற்சமயம் வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை காலிசெய்ய சொல்கின்றனர். புதிதாக வீடுகளை வாடகைக்கு தர மறுக்கின்றனர். ஆகவே, இயற்கை நார் தொழில் தொடர்ந்து நடைபெற முதலமைச்சர் இலவசமாக நிலம் வழங்க வேண்டும். தமிழக அரசு இலவசமாக நிலம் வழங்கும் பட்சத்தில் ஒரு கிளஸ்டர் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.” என்றும் அவர் கூறினார்.


“கற்றாழையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்று இந்திய தொழில்நுட்ப கழகம் சான்றளித்து உள்ளது. இயற்கை நார்களை கொண்டு கேரளாவில் உற்பத்தி செய்கிறவர்களுக்கு அந்த மாநில அரசு 50விழுக்காடு மானியம் வழங்குகிறது. அதேபோன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

“கனடா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், சென்னை நகரின் பிரபலமான ஜவுளி கடைகளில் இருந்தும் ஆர்டர் கொடுக்கிறார்கள். போதிய வசதி இல்லாததால் அவர்களுக்கு துணிகளை வழங்க முடியவில்லை. இலவச நிலம், அரசின் உதவி, மானியம் கிடைத்தால் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தி மேலும் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அன்னிய செலாவணி ஈட்டவும் வாய்ப்பு உள்ளது.” என்கிறார் சேகர்

நெசவு தொழில் பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் புதுப்புது உத்திகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் இயற்கை நார் நெசவாளர்களின் பக்கம் அரசின் கவனம் திரும்புமா?

Sunday, May 30, 2010

சீரழிக்கப்படும் நாற்றாங்கால்

தமிழ் திரையுலகில் துவக்கத்திலிருந்தே இரண்டு நடிகர்களை எதிரெதிர் துருவங்களாக சித்தரிப்பதும், இதனால் ரசிகர்கள் மோதிக் கொள்வதும், அதில் நடிகர்கள் கல்லாக் கட்டுவதும் அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் ரசிகர் மன்றங்கள் ஆலவிருட்சமாக வளருவது எப்படி? இளம் பருவத்தினர் ரசிகர் மன்றம் என்ற சுழலில் சிக்கிக் கொள்வது எதனால்? இதன் சூட்சமம் என்ன?

சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு உந்தி செல்ல வேண்டிய இளைஞர்களில் பெரும்பகுதியினர் ரசிகர் மன்றம் என்ற பெயரால் எவ்வாறு திசை மாறுகின்றனர் என்பதை இந்த நூல் அலசி ஆராய்கிறது. எதார்த்தங்களை யும், மேக்கப் போட்ட நடிகர்களின் நிஜ(கோர)முகத்தையும் தோலுரிக்கிறது.

திரைத்துறை தொடர்பான பல்வேறு தகவல்களைக் கொண்டதாகவும், தமிழக அரசியல்-சினிமா உறவை, சொல்வதாகவும் இந்த நூல், பல்வேறு விவாதங்களையும் எழுப்புகிறது.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற வேட்கை, நற்செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் உள்ள இளைஞர்களை ரசிகர் மன்றம் என்ற தீ பற்றிக் கொள்கிறது. அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் கூட்டு சதி வலையில் லாவகமாக மாட்டிக் கொள்கின்றனர்.

கோடிகள் (ரூபாய்) புரள்வதாலும், நடிகர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தாலும், அவர் களை ஊட கங்கள் சாதனையாளர்களாக சித்தரிக்கின்றன. அவர்களின் பின்னால் இளைஞர்களை திரட்டுகின்றன. இந்தியாவின் நாற்றாங் கால்களான இளைய சமூதாயத்தை சமூக பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பி சீரழிக்கின்றன.

அரசியல் கட்சிகளில் சாதி ஆதிக்கம் நிலவுகிறது. இதனால் குடிசை பகுதி அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. இதனாலும், திட்டமிட்டு செய்யப்படும் ஊடக பிரச்சாரத்தினாலும் அரசியல் மீது அவநம்பிக்கை கொள்ளும் இளைஞர்கள் சினிமா நடிகர்களையே தலைவர்களாக தொழுகின்றனர்.

ரசிகர்மன்றங்களில் பெரும்பகுதி குடிசை பகுதி, ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள் ளன. ரசிகர்களில் 50விழுக்காட்டினர் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ளனர். பொதுவாக, ரசிகர்கள் தங்கள் ரசிப்பை, மன்றமாக பகிரங்கப்படுத்தும்போது அதனை நடிகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படங்களுக்கு வசூலில் குறைந்த பட்ச உத்தரவாதம் கிடைக்கிறது. இதற்கு மாறாக ரசிகர்களுக்கு நடிகர்கள் தரக் கூடிய குறைந்த பட்ச உத்தரவாதம் என்ன?

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டு காலம் கடத்துவது வணிக தந்திரமாக மட்டுமல்ல; அரசியல் எதிர்காலத் திற்காகவும்தான். அதனால் தான் என்னவோ ஆளாளுக்கு வருங்கால முதல்வர் என போஸ்டர் அடித்துக்கொள்கிறார்கள்.

திரைப்படங்கள் இன்று வலுமிக்க பிரச்சார சாதனமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் செய்ய முடியாததை ஒரு திரைப்படம் செய்கிறது. இத்தகைய திரைத்துறையை பயன்படுத்தி அந்தக்கலை மேம்படுத்தப்படுகிறதா?

ஒரு நடிகர் நடித்த படங்களை ஒப்பீட்டளவில், கதாபாத்திரங்களை அலசி ஆராயக்கூடிய ரசிகனை எந்த நடிகரும், ரசிகர் மன்றங்களும் விரும்புவதில்லை. ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகளையும் மீறி ஆற்றல் மிக்க படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும். அதுதான் ஒரு கலைஞனை அளவிடும் அளவுகோல் என்பதை நடிகர்கள் மறந்து விடுகிறார்கள்.

தனிப்பட்ட நடிகர்கள் மீதான மோகத்தை விட திரைப்படங்கள் மீதான ரசனை வளரும் போதுதான் கலையின் வளர்ச்சி, சில அங்குலம் உயர்கிறது. இதற்காக சில முயற்சிகள் நடந்து வருவதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

ரசிகர் மன்றங்கள் ஆராதனை மன்றங்களாக இல்லாமல், மக்களுக்கான கலைப் படைப்புகளை ஆதரிக்கிற சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வு தானாக அதிகரிக்கும் என்ற நூலாசிரியரின் கருத்தை தமிழ் திரையுலகம் ஏற்றுக் கொள்ள துவங்கி இருப்பதாக கருத வேண்டி உள்ளது, நச்சு படைப்புகள் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், நடிகர்களை சார்ந்து இல்லாமல், சமூகத்தின் அவலங்களை, வாழ்வியல் எதார்த்தங்களை சொல்லும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. கட் அவுட்களுக்கு பால், பீர் அபிஷேகம், நடிகனுக்கு கையில் கற்பூரம் காட்டுவது என்பன போன்ற முட்டாள் தனமான நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இன்றுள்ள அரசியல், சமூக சூழலில் இந்த மாற்றம் பாய்ச்சல் வேகத்தில் செல்ல வேண்டி உள்ளது.



உய்... உய்.. ரசிகர்மன்றங்களின் நோக்கும்-போக்கும்

ஆசிரியர்: கோவி.லெனின்

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, சென்னை-14

பக்கம்: 136

விலை: ரூ.80