Pages

Saturday, April 3, 2010

இரவு நேரப் பேருந்துகள் அதிகரிக்கப்படுமா?

சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரப் பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 3,207 பேருந்துகள் 288 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவற்றில் 625பேருந்துகள் சாதாரண கட்டணத்திலும், 2402 பேருந்துகள் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், எம் சர்வீஸ் என்ற பெயர்களில் அதிக கட்டணத்திலும் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் நாள்தோறும் சராசரியாக 43.55 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம், பிராட்வே, தாம்பரம் உள்ளிட்ட முக்கியமான வழித்தடங்களில் இரவு 10.30 மணிக்கு மேல் 48 பேருந்துகள் மட்டுமே இரவு நேரப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அதிகாலையிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அண்ணா சாலை போன்ற முக்கியமான வழித்தடங்களில் மட்டுமே, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. சென்னையின் உட்புறப் பகுதிகளில் இரவு 10.45 மணிக்கு மேல் பேருந்துகளே இயக்கப்படுவதில்லை.

இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவு நேரத்தில் பணியை முடித்து செல்கிறவர்களும், இரவு பணியாற்றுகிறவர்களும் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சென்னை புறநகர் ரயில்கள் சேவை இரவு 12 மணி வரை இருந்தாலும், ரயிலில் இருந்து வரும் பயணிகளும் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இரவில் மணிக் கணக்கில் லாரிக்காக காத்து கிடந்து, பாதுகாப்பில்லாத பயணத்தையும் சிலர் மேற்கொள்கின்றனர்.

பண வசதி உள்ளவர்கள் ஆட்டோ, ஆம்னி கார்களில் சென்று விடுகின்றனர். மற்றவர்களோ, அதிகாலைவரை பேருந்துக்காக காத்திருந்து நிலைதான் உள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளுக்கு பகலில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஏராளமானோர் தினந்தோறும் சென்னைக்கு வந்து செல்கின்றனர்..

பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மின்வெட்டு காரணமாக இரவு நேரப்பணி ஆகியவற்றால் தொழிலாளர்களின் பணிக் கலாச்சாரம் மாறிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது இரவு நேர பணி கலாச்சாரத்தையே கடைபிடிக்கின்றன. ஆகவே, பகல் நேரத்தில் அளிக்கப்படும் பேருந்து வசதி இரவிலும் வழங்க வேண்டும். இரவு நேரத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்தை இயக்க வேண்டும்.

No comments: