Pages

Tuesday, April 20, 2010

மறைமலை அடிகள் நினைவு இல்லம் ரூ.15லட்சம் செலவில் புதுப்பிப்பு

புறக்கணிக்கப்பட்டிருந்த மறைமலையடிகள் நினைவில்லத்தை புதுப்பிக்க, தீக்கதிர் செய்தியையடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


சென்னையடுத்த பல்லாவரத்தில் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம், மறைமலை அடிகளார் கலை மன்றமாக செயல்பட்டு வருகிறது, இதன் நிர்வாக பராமரிப்பை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது குறித்தும், கடந்த 15ஆண்டுகளாக அந்த கட்டிடத்திற்கு சுண்ணாம்பு கூட அடிக்காமல் இருப்பது குறித்தும், இதனால் கட்டிடம் பாழடைந்து கிடப்பது பற்றியும் தீக்கதிர் ஏப்.12 இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த சூழலிலாவது அந்த இல்லத்தை அரசே ஏற்று தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே என்ற கருத்தும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியின் பின்னணியில் காஞ்சி மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அந்த நினைவில்லத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு திங்களன்று (ஏப்.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மறைமலை அடிகளார் நினைவு இல்லம் தற்போது தென்னிந்திய தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பில் உள்ளது. இக்கட்டிடம் 1914ம் ஆண்டில் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பாழடைந்தநிலையில் உள்ளதாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மறைமலை அடிகள் நினைவு இல்லத்தை பழுதுபார்ப்பதற்கு தென்னிந்திய தமிழ்ச்சங்கம் என்ற நிறுவனத்திற்கு 15லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். அத்தொகையை பொதுப்பணித்துறைக்கு அளித்து, அத்துறை மூலம் வைப்புத் தொகைப் பணியாக மறைமலை அடிகளார் நினைவு இல்லம் பழுதுபார்த்து சீரமைத்து தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். பழுதுபார்ப்புப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, April 15, 2010

மறக்கப்பட்ட மறைமலை அடிகள்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கத்தோடு தனித் தமிழ் இயக்கம் கண்டவர் மறைமலை அடிகள். அந்தத் தமிழ் அறிஞர் வாழ்ந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. உடைந்த அவரது உருவ சிலையைக் கூட கண்டுகொள்ள ஆள் இல்லை.


மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். 1876ல் பிறந்த இவர் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். புகழ் பெற்ற தமிழறிஞராகவும் ஆய்வாளராகவும் விளங்கிய மறைமலை அடிகள், தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.

தமிழை, வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். சாதிசமய வேறுபாடின்றிப் சமய சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்தவர்.

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் சாவடி தெருவில் 8ஆண்டுகள் சிரமப்பட்டு வீடு கட்டி வசித்து வந்தார். 1950ல் அவரது மறைவுக்கு பிறகு, அந்த இல்லத்தை 1962 மார்ச் 21 அன்று மறைமலை அடிகளார் கலை மன்றமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 1962, ஜூலை 12 அன்று மதுரை திருஞான சம்பந்தர் ஆதினம் அருட்திரு சோமசுந்தர ஞானசம்பந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்றைய கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்த எம்.பக்தவச்சலம் கலை மன்றத்தை தொடங்கி வைத்தார்.

இந்த கலை மன்றத்திற்கு மத்திய அரசு ரூ.25ஆயிரம், மாநில அரசு ரூ.10ஆயிரம், தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ரூ.5ஆயிரம் என நன்கொடை வழங்கின. இதன் நிர்வாக பராமரிப்பை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ஏற்றுக்கொண்டது.

கடந்த 15ஆண்டுகளாக அந்த கட்டிடத்திற்கு சுண்ணாம்பு கூட அடிக்காமல் உள்ளனர். இதனால் கட்டிடம் பாழடைந்து பொலிவிழந்து கிடக்கிறது என்று பல்லாவரம் ரயில்வே டேசன் ரோடு நடைபாதை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்க செயலாளர் எ.பி.காந்தி கூறுகிறார்.

இந்த கட்டிடத்தில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் கிளை நூலகம் இயங்குகிறது. அதற்கு சைவ சித்தாந்த சங்கம் வாடகையும் வசூலிக்கிறது. இந்தக் கட்டிடம் சிதிலமடைந்து மழைக் காலங்களில் ஒழுகல் ஏற்பட்டு நூலக புத்தகங்கள் நனைகின்றன. கட்டிடத்தின் மேற்பூச்சுக்கள் எல்லாம் பெயர்ந்து விழுந்து உள்ளே இருக்கும் செங்கற்கள் தெரிகின்றன.

கட்டிடத்தின் வாயிலில் மறைமலை அடிகளாரின் மார்பளவு உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பெய்த பெரு மழையால் அந்த பீடம் இடிந்து உருவச் சிலையும் கீழே வீழ்ந்தது.

இதனையடுத்து, இந்த கட்டிடத்தை சரி செய்யப் போவதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை மற்றும் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் என ஒரு வார காலம் மாறி மாறி வந்து முகாமிட்டு ஆய்வு செய்தனர். உடனடியாக நிதி ஒதுக்கி மறைமலை அடிகள் இல்லம் சரி செய்யப்படும். சுற்றுசுவர் கட்டப்படும் என்றெல்லாம் உறுதி அளித்தனர். ஓராண்டாகியும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மறைமலை அடிகள் சிலை கூட மீண்டும் நிறுவப்படாமல் ஓரமாக வைக்கப்படுள்ளது. சிலையை நிறுவவோ, கட்டிடத்தை பராமரிக்கவோ கூட பணம் இல்லை என்று திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் கூறுகிறது.

மறைமலை அடிகளை தமிழக அரசும், அரசு நிர்வாகமும் மறந்துவிட்டது என்றால், சைவ சித்தாந்த சங்கமும் கைகழுவ நினைக்கிறது. சிலையை கூட நிறுவ முடியாதவர்களிடம் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் கலைமன்றத்தை ஒப்படைத்து பாழடைய வைப்பது ஏன்? உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த சூழலிலாவது அந்த இல்லத்தை அரசே ஏற்று தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே!

Monday, April 12, 2010

அம்மணக்குண்டி சுதந்திரம்-----

அவள் சொல்கிறாள்

அம்மணமாக திரிவது

என் பிறப்புரிமை

நான் சீட்டியடித்துச் சொல்கிறேன்

அம்மணக்குண்டி

அதோ பாரு அம்மணக்குண்டி



அவள் சொல்லுகிறாள்

என் உரிமையில் தலையிடுகிறாய்

நான் சொல்லுகிறேன்

அம்மணமாய்த் திரிவது உன் உரிமை

அம்மணக்குண்டி என்று சொல்லுவது

என் உரிமை

இதில் எங்கே இருக்கிறது

சுதந்திர மீறல்



இந்த அரட்டையில் இடை புகுந்த

ஒரு பெருசு சொன்னது

அம்மணக்குண்டி ராஜ்ஜியத்தில்

கோவணம் கட்டியவன்

பைத்தியக்காரன்





(எனக்கு இ-மெயில் வந்த கவிதை)

Saturday, April 3, 2010

பேருந்து கட்டணம்-பெருங்கட்டணம்



சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தடுக்க அரசு திண்டாடி வருகிறது. பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலமே அதனை செய்ய முடியும். தமிழக மக்களின் தேவையை உணர்ந்து சில நூறு பேருந்துகளை வாங்கி உள்ளது. அந்த பேருந்துகளை ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியாதபடிஅதிக கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

சாதாரண பேருந்துகளில் (வெள்ளை போர்டு) 2ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரணப் பேருந்துகளை விட எல்எஸ்எஸ் பேருந்துகளில் 50பைசாவும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஒன்றரை மடங்கும், டீலக்ஸ் பேருந்துகளில் எல்எஸ்எஸ் பேருந்துகளை விட இரண்டு மடங்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எம் சர்வீஸ் பேருந்துகளில் ஒரு விதமாகவும், ஏசி பேருந்துகளில் ஒரு விதமாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆட்டோக் கட்டணத்தை விட ஏசி பேருந்து கட்டணம் குறைவு என்றாலும் கூட, சாதாரண பேருந்துகளை கூட பயன்படுத்த முடியாதவர்கள் சென்னையிலும், அதனை சுற்றியுள்ளவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதை அரசு உணர வேண்டும்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 3000க்கும் அதிகமான பேருந்துகளில் குறைந்தபட்சம் 2ஆயிரம் பேருந்துகளையாவது சாதாரணக் கட்டணத்தில் இயக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை பலப்படுத்துவதின் மூலமே சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.

சென்னையில் உள்ள பேருந்துகளில் 5ல் ஒரு பகுதி மட்டுமே சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகிறது. இதனால் சாதாரண பேருந்துகளுக்காக சாலையோரங்களில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். இதுவும் போக்குவரத்து நெரிசலக்கு ஒரு காரணமாக அமைகிறது. சாதாரண பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருப்பதால், படிகளில் தொங்கிச் செல்வதும், விபத்து ஏற்படுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

பாலங்கள் கட்டுவதாலும், சாலைகள் விரிவாக்கம் செய்வதாலும் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியாது. பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் பேருந்துகளின் பெயர்களை மாற்றி கட்டணக் கொள்கை நிகழ்த்துவதையும் கைவிட வேண்டும்.

இரவு நேரப் பேருந்துகள் அதிகரிக்கப்படுமா?

சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரப் பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 3,207 பேருந்துகள் 288 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவற்றில் 625பேருந்துகள் சாதாரண கட்டணத்திலும், 2402 பேருந்துகள் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், எம் சர்வீஸ் என்ற பெயர்களில் அதிக கட்டணத்திலும் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் நாள்தோறும் சராசரியாக 43.55 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம், பிராட்வே, தாம்பரம் உள்ளிட்ட முக்கியமான வழித்தடங்களில் இரவு 10.30 மணிக்கு மேல் 48 பேருந்துகள் மட்டுமே இரவு நேரப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அதிகாலையிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அண்ணா சாலை போன்ற முக்கியமான வழித்தடங்களில் மட்டுமே, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. சென்னையின் உட்புறப் பகுதிகளில் இரவு 10.45 மணிக்கு மேல் பேருந்துகளே இயக்கப்படுவதில்லை.

இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவு நேரத்தில் பணியை முடித்து செல்கிறவர்களும், இரவு பணியாற்றுகிறவர்களும் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சென்னை புறநகர் ரயில்கள் சேவை இரவு 12 மணி வரை இருந்தாலும், ரயிலில் இருந்து வரும் பயணிகளும் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இரவில் மணிக் கணக்கில் லாரிக்காக காத்து கிடந்து, பாதுகாப்பில்லாத பயணத்தையும் சிலர் மேற்கொள்கின்றனர்.

பண வசதி உள்ளவர்கள் ஆட்டோ, ஆம்னி கார்களில் சென்று விடுகின்றனர். மற்றவர்களோ, அதிகாலைவரை பேருந்துக்காக காத்திருந்து நிலைதான் உள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளுக்கு பகலில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஏராளமானோர் தினந்தோறும் சென்னைக்கு வந்து செல்கின்றனர்..

பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மின்வெட்டு காரணமாக இரவு நேரப்பணி ஆகியவற்றால் தொழிலாளர்களின் பணிக் கலாச்சாரம் மாறிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது இரவு நேர பணி கலாச்சாரத்தையே கடைபிடிக்கின்றன. ஆகவே, பகல் நேரத்தில் அளிக்கப்படும் பேருந்து வசதி இரவிலும் வழங்க வேண்டும். இரவு நேரத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்தை இயக்க வேண்டும்.

Friday, April 2, 2010

உச்ச நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு

சென்னை மாநகர பேருந்துகளில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (சிஎன்ஜி) இன்னும் பயன்படுத்தாமல், உச்சநீதிமன்ற வழிக்காட்டுதலை தமிழக அரசு தட்டிக் கழித்து வருகிறது.


தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று/சுற்றுசூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று 2002ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனையடுத்து தில்லி அரசு, தனது பேருந்துகளில் சிஎன்ஜி கேஸ் பயன்படுத்தி வருகிறது.


சென்னையில் முதற்கட்டமாக ஆட்டோக்களில் கேஸ் பயன்படுத்தும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. கேஸ் உபகரணங்கள் ஆட்டோக்களில் பொறுத்த அதிக செலாகும் என்பதால் இதற்கு தொழிற்சங்கங்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கொல்கத்தாவில் கேஸ் கிட் பொறுத்த ஒரு ஆட்டோவிற்கு 5ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.


இதனையடுத்து 2ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாக அரசு அறிவித்து ஆணையும் பிறப்பித்தது. இந்த தொகையை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, 3ஆயிரம் ரூபாய் என மானியத் தொகை மாற்றப்பட்டது. ஆனால் அந்த தொகை வழங்கப்படுவதில்லை என்று ஆட்டோ தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சென்னை நகரம், புறநகர் பகுதியில் சுமார் 60ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் சுமார் 25ஆயிரம் ஆட்டோக்கள் கேஸில் இயங்குகின்றன. இந்த ஆட்டோக்களுக்கு தேவையான கேசை நிரப்ப போதுமான மையங்கள் (கேஸ் பங்க்கு) இல்லை.


சென்னை நகருக்குள் அண்ணாசாலை, ராயப்பேட்டை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிண்டி உள்ளிட்ட 7நிரப்பு மையங்களே உள்ளன. இதுபோதுமானதாக இல்லை. அரசின் விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் கேஸ் நிரப்பும் மையங்களை அமைக்க பெட்ரோல் பங்க்குகள் முன்வருவதில்லை. இதன் காரணமாக கேஸ் நிரப்பிக் கொள்ள சாலைகளில் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதை அடிக்கடி பார்க்க நேர்கிறது.


இதனால், கேஸ் கிட் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் கூட பெட்ரோல் டீசலை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சுற்றுசூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் பயனற்று நிற்கிறது.


பேருந்துகளுக்கு கேஸ் எப்போது?

2006ம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, படிப்படியாக அரசு பேருந்துகளில் கேஸ் பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு பேச்சளவிலேயே உள்ளது.


திமுக பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கப்பட்டன (3,207 பேருந்துகள் உள்ளன). 2009ல் கூட கேஸ்கிட் பொருத்தப்படாத பேருந்துகளையே வாங்கியுள்ளனர்.


மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டத்தை அரசே சீர்குலைக்கிறது. உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதலை தட்டிக்கழிக்கிறது. தில்லியில் கேஸ் பொருத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் போது சென்னையில் இயக்க அரசு மறுப்பது ஏன்?


இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், “சென்னை நகரில் கூடுதலாக கேஸ் நிரப்பும் மையங்களை அமைக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் அல்லது தமிழக அரசே போக்குவரத்து பணிமனைகளில் கேஸ் நிரப்பும் மையங்களை அமைத்து ஆட்டோக்களுக்கு கேஸ் வழங்க வேண்டும். அரசு பேருந்துகளை கேஸ் முறைக்கு மாற்றும்போதும் இந்த கேஸ் நிரப்பும் மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

தொழிலாளர்களின் குரல் அரசின் செவிகளுக்கு எட்டுமா?