Pages

Friday, February 26, 2010

தோழர் உ.ரா.வரதராசன் மரணம்:



தோழர் உ.ரா.வரதராசன் 2010 பிப் 11 அன்று வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் சென்று விட்டார். அதன்பின்னர் பிப்.14 அன்று காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.    போரூர் ஏரியில் இருந்து பிப்.13 அன்று கண்டெடுக்கப்பட்ட உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்திருந்த போலீசார் பிப்.21ம் தேதிதான் அடையாளம் காட்ட கட்சியினரையும், குடும்பத்தினரையும் அழைத்தனர்.

திமுக அரசின் திட்டமிட்ட, திசை திருப்பல் நடவடிக்கையால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு அவதூறுகளை கிளப்பி கொச்சைப்படுத்தியது. தோழர் உ.ரா.வரதராசன் மறைவு மார்க்சிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரது இழப்புக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம். உ.ரா.வரதராசனை புகழ்வதுபோல் அவரை களங்கப்படுத்திய ஊடகங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் விட்டுவைக்கவில்லை. எந்த கட்சிக்காக 40வருட காலமாக உ.ரா.வரதராசன் உழைத்தாரோ, அந்தக்கட்சியை அவரைக் கொண்டு களங்கப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சவாலை கட்சி எதிர்கொண்டு முறியடிக்கும். இதன் ஒருபகுதியாக கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட்டுள்ள விளக்க கடிதம் வருமாறு:

தோழர் உ.ரா.வரதராசன் மரணம்


“தோழர் உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந் திருப்பது, ஒட்டுமொத்த கட்சியையும் விரிந்து பரந்த தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டபிள்யுஆர்.வி. என்று பிரபலமாக அறியப்பட்ட, அவர் ஒரு ஆற்றல்மிக்க தொழிற் சங்கத் தலைவர். சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒருவர். பிப்ரவரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் வரையிலும் அவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமுறை உறுப்பினராக பணியாற்றியுள்ள அவர், மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்.


பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் உ.ரா.வரதராசன் மீது கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற முடிவின் அடிப்படையில் கட்சியின் மத்தியக்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்குப் பிறகு உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிப்ரவரி 11ந்தேதி இரவு இது நடந்திருக்கலாம். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் மிக முக்கியமான பங்களிப்பினை செய்த, பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட ஒரு தோழரின் இந்தத் துயரமான முடிவு கட்சிக்குள்ளும், அவரோடு இணைந்து பணியாற்றிய நம் அனைவருக்கும் மிகப்பெரிய துயரத்தை அளித்துள்ளது.


அவர் மரணமடைந்த விதமானது கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது இயல்பான ஒன்றே. ஆனால் இந்த துயரார்ந்த நிகழ்வை ஒரு பகுதி ஊடகத்தினர், உண்மையின் ஒரு பகுதியை மட்டும் கூறுவது, விஷயத்தை திரித்துக் கூறுவது, அடிப்படையற்ற ஊகங்களை எழுப்புவது என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவது மிகவும் துரதிருஷ்ட வசமானது. இந்த நிலையில் உ.ரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை, எப்படி, ஏன் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்களை விளக்குவது அவசியம் என்று கட்சியின் அரசியல் தலைமைக் குழு கருதுகிறது.


உ.ரா.வரதராசன் பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார் என்று பெண் ஒருவரிடமிருந்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவுக்கு புகார் வந்தது. 2009ம் ஆண்டு செப்டம்பரில் இந்த புகார் வந்தது. புகாருக்கு உள்ளாகியிருப்பவர் ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்பதால் கட்சியின் நடைமுறை விதிப்படி, மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பது என மாநிலக்குழு முடிவு செய்தது. இந்த விசாரணைக்குழுவில் இடம்பெற்ற மூவருமே மாநிலக்குழு உறுப்பினர்கள். அவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்த மத்தியக்குழு உறுப்பினர் கன்வீனராக செயல்பட்டார். மற்றொரு உறுப்பினர் மாநில செயற்குழு உறுப்பினர்.


விசாரணைக்குப் பிறகு அந்தக்குழுவின் அறிக்கை 2009 நவம்பர் 25ந் தேதி நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்பட்டது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்த அம்சங்களின் அடிப்படையில், உ.ரா.வரதராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில செயற்குழு பரிந்துரைத்தது. ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்ற அடிப்படை யில், உ.ரா.வரதராசன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கட்சி நடைமுறையின்படி மாநிலக்குழு கூட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு விசாரணைக் குழுவின் கண்டறிதல்களை மாநிலக்குழு ஏற்றுக்கொண்டதோடு உ.ரா.வரதராசன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.


உ.ரா.வரதராசன் கட்சியின் உயர் நிலைக்குழுவான மத்தியக்குழுவில் அங்கம் வகித்த நிலையில், கட்சியின் மாநிலக் குழு முடிவு எடுக்க இயலாது. கட்சி விதிகளின்படி, மாநிலக்குழு தனது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை நடவடிக்கைக்காக மத்தியக்குழுவிற்கு அனுப்பியது.



கொல்கத்தாவில் 2010 பிப்ரவரி 4-6 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் அறிக்கை மற்றும் தீர்மானம், இந்தப் பிரச்சனை தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் உரா.வரதராசன் தனது நிலையை விளக்கி அனுப்பிய கடிதம் ஆகியவை மத்தியக்குழு உறுப்பி னர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது. (உ.ரா.வ.வின் கடிதத்தின் சில பகுதிகள் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன)

இந்த விசயம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உ.ரா.வரதராசன் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு மணி நேர விவாதத்திற்குப்பிறகு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு மாநிலக்குழுவின் பரிந்துரையை அங்கீகரிப்பது என்று மத்தியக்குழு முடிவு செய்தது. கூட்டத்தில் பங்கேற்ற 74 மத்தியக் குழு உறுப்பினர்களில் யாரும் இந்த ஒழுங்கு நடவடிக்கையை ஆட்சேபிக்கவில்லை. வாக்கெடுப்பின்போது ஐந்து உறுப்பினர்கள், வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற தங்கள் கருத்தை பதிவு செய்தனர். மத்தியக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் அதே நேரத்தில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு விற்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்தப்போவதாகவும் உ.ரா.வரதராசன் தெரிவித்தார்.


மேற்கூறப்பட்ட வகையில்தான் உ.ரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கட்சி உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் ஊடகங்களில், திட்டமிட்ட முறையில் பரப்பப்படும் சில செய்திகளால் உண்மை நிலை திரித்துக்கூறப்படுகிறது.


பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் அரைகுறையான உண்மைகள் என்ன? உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து விரட்டப் பட்டார் என்பது அவதூறுகளில் ஒன்று. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளி யேற்றப்படவில்லை. கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற ஒழுங்கு நட வடிக்கையின் பொருள், பொருத்தமான கட்சிக்குழுவில் அவர் இணைக்கப்படுவார் என்பதுதான். இதைப் பொறுத்த வரை பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்ற கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழுவில் உ.ரா.வரதராசனை இணைத்துக் கொள்வது என்றும், தொழிற்சங்க அரங்கில் அவருக்கு பணி ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த குறிப்பிட்ட ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கம், அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது அல்லது வெளியேற்றுவது என்பதல்ல; உ.ரா.வரதராசன், தொடர்ந்து தனக்குள்ள திறனை பயன்படுத்தி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதே. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், தொடர்ந்து கட்சிப்பணியாற்றி தங்களது தவறுகளை சரிசெய்து கொண்டு கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.



கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கை தான் ஒரு கட்சித்தலைவரை தற்கொலை முடிவை நோக்கித் தள்ளியுள்ளது என்று சித்தரிப்பது முற்றிலும் ஆதாரமற்றது மட்டுமல்ல, இந்த துயரமான நிகழ்வை பயன்படுத்தி கட்சியையும் அதன் தலைமையையும் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டதும் ஆகும். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கட்சி நடவடிக்கை எடுக் காமல் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட பெண் தனது குற்றச்சாட்டுகளை வெளிப் படையாக கூறியிருந்தால் அப்போது இதே ஊடகங்கள், தங்களது கட்சித் தலைவர் மீது ஒரு பெண் கொடுத்த பாலியல் தொல்லை தொடர்பான புகாரை கண்டுகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுத்திருக்கும்.



நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்காத நிலையில், கட்சி “புரிந்துகொள்ள முடியாததாக” இருக்கிறது என்றும், இதற்கு முரண்பாடான வகையில் உ.ரா.வரதராசனை “வெளிப்படையாக அவமானப்படுத்தி” விட்டனர் என்றும் கட்சி மீது குற்றம் சாட்டப்படுகிறது. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படாத நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மத்தியக்குழு பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இதற்குக் காரணம் உ.ரா.வரதராசன், கட்சியில் தரப்படும் பொறுப்பை ஏற்று தனது பணியை ஆற்ற வேண்டும் என்பதே. தன்னுடைய ஊழியர்களை “வெளிப்படையாக அவமதிப்பதில்” மார்க்சிஸ்ட் கட்சிக்கு நம்பிக்கையில்லை. உ.ரா.வரதராசன் தன்னுடைய குறைபாடுகளை சரி செய்துகொண்டு தொடர்ந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற வகையிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.



கட்சியின் ஸ்தாபனக்கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவத்தை இழிவுபடுத்துவதற்கும் இந்த நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது. மத்தியத்துவம் மற்றும் எதேச்சதிகார அடிப்படையிலேயே உ.ரா.வரதராசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புனைந்துரைக்கப் படுகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கை யின்போது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளே இந்த கூற்றில் உள்ள முரண் பாட்டை வெளிப்படுத்தும். அவர் நேரடியாக பணியாற்றிய மாநிலக்குழுதான் அவர் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளை துவக்கியது. நடவடிக்கை எடுக்குமாறு மாநிலக் குழு வேண்டுகோள் விடுத்த பிறகுதான் உயர்நிலைக்குழுவான மத்தியக்குழு பிரச்சனையில் தலையிடுகிறது. ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதேச்சதிகாரமாக முடிவெடுக்கக் கூடாது என்ற ஜனநாயக நடைமுறையும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. முறையான விசாரணைக்குப்பிறகு சம்பந்தப்பட்ட தோழரை நேரடியாக அழைத்து அவரது கருத்தையும் நேரடியாக கேட்டபிறகே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்.



உ.ரா.வரதராசனுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கையையும் கட்சி மேற் கொண்டுள்ள நெறிப்படுத்தும் இயக்கத்தையும் முடிச்சுபோடுவதற்கான முயற்சி யும் நடக்கிறது. உ.ரா.வரதராசன் சம்பந்தப்பட்ட விசயத்திற்கும் நெறிப்படுத்தும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் மத்தியக்குழு நெறிப்படுத்தும் ஆவணத்தை இறுதி செய்வதற்கு முன்பே, இந்த விசயம் தொடர்பான புகார் வந்துவிட்டது. நெறிப்படுத்தும் இயக்கத்தின் நோக்கம், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து அதை சரி செய்வதே ஆகும். கட்சி உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நட வடிக்கை எடுப்பது இதன் நோக்கமல்ல.




தன்னுடைய ஊழியர்களுக்கு குறிப்பாக தங்களுடைய முழு நேரத்தையும் வாழ்க்கையையும் கட்சிப்பணிக்காக ஒப்படைத்துள்ள ஊழியர்களுக்கு கம்யூ னிஸ்ட் கட்சி ஸ்தாபனம் அதிகபட்ச முன் னுரிமை அளிக்கிறது. தோழர்கள் தவறான நிர்ணயிப்புகளுக்கு வரும்போது அல்லது தவறிழைக்கும்போது, அவருடைய ஒட்டு மொத்த பங்களிப்பையும் கட்சி கவனத்தில் கொள்கிறது. அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்பது சம்பந்தப்பட்ட தோழர், தன்னுடைய தவறை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற முறையிலேயே அமைந்திருக்கும். இத்தகைய நடைமுறையில் பல்வேறுகட்ட நடவடிக்கை களுக்குப் பிறகு கடைசி கட்ட நடவடிக்கையாகவே கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்பது அமையும். உ.ரா.வரதராசன் விஷயத்தைப் பொறுத்தவரை அவர் தனது பிரச்சனையிலிருந்து மீண்டுவந்து கட்சிக்கும், இயக்கத்திற்கும் முழுமையாக பணியாற்ற வேண்டும் என்றே கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அது நடைபெற வில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.”