Pages

Tuesday, December 10, 2013

பல்லுபோனாலும் சொல்லுபோனதில்லை





அவரது பெண்வேடம் ஊரெல்லாம் பிரபலமானது. முதன்முறை யாக அவரைப் பார்ப்பவர்கள் கிராமத்துக் கிழவியென்றே நினைப்பார்கள். அவர் மேடையேறினால் எள்ளலும், துள்ளலும் மழையாய் பொழியும். பொக்கை வாயிலிருந்து விழும் வார்த்தைகள் சிந்தனை மிக்க சிரிப்பு குண்டுகளாக விழும். குரல் வளத்தில் வாலிபனும் தோற்றுப்போக வேண்டும். பள்ளிப்படிப்பு ஓரளவுதான் என்றாலும் பாட்டு கட்டி பாடுவதும், கதைகளாக வர்ணிப்பதும், இளசுகளையும் சுண்டி இழுத்து உசுப்புவதிலும்  என்றும் அவர் இளைஞராக இருந்தார்.

கலை சிந்தனையைத் தூண்ட வேண்டும், கருத்தைப் பரப்ப வேண்டும், நீதி கேட்க வேண்டும் அதுதான் கலை என்பதை உள்வாங்கிக் கொண்ட பாவலர் ஓம்முத்துமாரி கூத்துக்கலையில் நவீன உத்திகளைக் கையாண்டார். மேடைகளில் தனது கரகரத்த குரலால் பொதுவுடைமை கருத்துக்களை கந்தகத் துகள்களாக வீசினார். 70 ஆண்டுகள் சுழன்று ஆடிய பாவலர் ஓம் முத்துமாரியின் கால்கள்  2013 நவ 14 அன்று 80 ஆவது வயதில் ஆட்டத்தை நிறுத்திக்  கொண்டன. அவரின் கரகரத்த குரலும் காற்றில் கரைந்து போனது...

தமிழக அரசின் கலைமாமணி விருது, நவரசக் கலைஞர், இசை நாடக நகைச்சுவைக் கலைஞர், கிராமியக் கலைச்சக்ரவர்த்தி, கலை முதுமணி, மரகதமணி தமுஎகச-வின் நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது என பல விருதுகளைப் பெற்றபோதும் தனது அரசியல் களத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை.

கிராமிய கலைகளில் நவீனம்...

மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான கலைச்சொத்தான பாவலர் ஓம் முத்து மாரிக்கு அக்கட்சியின் தென்சென்னை மாவட்ட விசேஷ கிளை-4ன் சார்பில் டிச.4 அன்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சிராஜூதின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் அருணன் ஓம் முத்துமாரியிடம் பற்கள் போனாலும் சொற்கள் தெளிவாக வந்தன. நாட்டுப் புறக்கலைகளை சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் பயன்படுத்தினார்கள். வர்க்கப் போராட்டத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்தியது. அதனை முழுமையாக அடையாளம் காணத் தவறிவிட்டோம் என்று பாராட்டு முன்னோட்டம் விமர்சனம் என மாறிய கோணங்களுடன் பேச்சைத் தொடங்கினார்.

கிராமியக் கலைகளை பாதுகாப்பது என்பது ஏதோ, அதன் வடிவத்தை பாதுகாப்பது மட்டுமல்ல. வடிவத்தினூடாக செய்தியையும் சொல்ல வேண்டும். கிராமியக் கலைகளுக்குள் நவீன சிந்தனைகளைப் புகுத்த வேண்டும். அப்போதுதான் கலைகள் பாதுகாக்கப்படும். எந்தக் கலையாக இருந்தாலும் அது மக்களை ஈர்க்கும் செய்திகளைச் சொல்ல வேண்டும். விஞ்ஞான சாதனங்களைக் கொண்டு, விஞ்ஞான சிந்தனைகளை மழுங்க டிக்கும் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சியைப் போன்றதாக இருக்கக்கூடாது.

கூத்தில் பேயாட்டம் என்ற வகை உள்ளது. அந்தக் கூத்தில், விலைவாசிப் பேயை எப்படி விரட்டுவது என்று கூறி, பார்ப்பவர்களிடம் ஓம் முத்து மாரி அரசியலைப் பேசுவார். ஒவ்வொரு கூத்திலும் ஒவ்வொரு ஸ்டெப் உள்ளது. ஸ்டெப்பை மாற்ற விசில் ஊதுகிறார்கள். அதற்கு பதிலாக நல்ல சொற்களை பயன்படுத் தலாமே! பாட்டின் பின்புலத்தோடு தப்பாட்டத்தை இணைக்கலாமே! மரபுக் கலைகளில் புதிய சிந்தனையைப் புகுத்த வேண்டும். மகாபாரதம், ராமாயணத்தை மறுவாசிப்பு செய்து கூத்தாக மாற்றினால், மரபுக் கலைகள் உயிர்பெறும்; பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் கூலி வேலைக்கு செல்கிற நிலை தடுக்கப்படும் என்ற அவரின் மாற்றுயோசனைகள் பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்தன.

தமுஎகச-வில் நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது உருவாக்கப்பட்டது. மாநிலக் குழுவில் வந்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அந்த விருது வாழ்க்கை முழுவதும் நாட்டுப்புறக் கலைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஓம் முத்துமாரிக்கு வழங்கப்பட்டது என நாட்டுப்புறக் கலைஞர்கள் மீதான தமுஎகச-வின் அக்கறையையும் அருணன் பதிவு செய்து உரையை நிறைவு செய்தார்.

அகடவிகடமாக அரசியல்...

கோயில் திருவிழாவையொட்டி நடைபெறும் கூத்தில் மாரியம்மனையும், முருகனையும் சண்டைக்கு இழுப்பதோடு, பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் வேண்டும் என்று பாடிய மகோன்னதமான படைப்பாளி ஓம் முத்துமாரி. மேடையில் மட்டுமல்ல, இக்கட்டான நிலையிலும் எள்ளலோடு பேசி, உற்சாக மூட்டி தன்னம்பிக்கையத் தருவார்.  கோவில் மேடையிலும் அரசியல் கருத்துக்களை அகடவிகடமாகக் கூறிவிடுவார். அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் குறியீடுகளை  பாவலர் பதிவு செய்வார் என  ஓம்முத்துமாரியின் உள்ளக்கிடக்கையை உணர்த்தினார் போராசிரியர் காளீஸ்வரன்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தலித் கலைவிழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகளில் ஒருவர், உங்களில் எத்தனை பேர் தலித் என்று கேட்டுவிட்டார். கோபம் கொண்ட ஓம்முத்துமாரி, "கலைஞனுக்கு ஏதடா சாதி..." என்ற பாடலை பாடிவிட்டு, அப்படின்னு உடுமலைகவி பாடியுள்ளார் என்று பழியை தூக்கி அவர் மீது போட்டுவிட்டார். மேடையில் மட்டுமல்ல, களத்திலும் தைரியத்தோடு, கனபரிமாணத்தோடு பேசுவார் என்கிற கள அனுபவத்தையும் அவர் முன் வைத்தார்.

தமிழக அரசின் கலைமணி, கலைச்சுடர் விருதுகளைப் பெறாமலே நேரடியாக கலைமாமணி விருது பெற்ற ஒரே கலைஞர் ஓம் முத்துமாரி. காந்தியை சுட்டு கொன்றது இஸ்லாமியர் என்று சங்பரிவாரம் புரளி கிளப்பி கலவரத்தைத் தூண்டியது. அப்போது சமூக அமைதி ஏற்படுத்த திருச்சி வானொலியில் பெரியாரைப் பேச அழைத்திருந்தனர். அதற்கு முன்பாக சமூக அமைதியை வலியுறுத்தி ஓம் முத்துமாரி நடத்திய நிகழ்ச்சி 20 நிமிடம் நேரடியாக ஒலிபரப்பானது.  காந்தியைக் கொன்றது இஸ்லாமியர் அல்ல என்று முதன் முதலில் பதிவு செய்தார் ஓம் முத்துமாரி. அந்த நிகழ்ச்சி முழுவதையும் கேட்ட பெரியார், ஓம் முத்துமாரியை வியந்து பாராட்டினார் என்ற தகவலையும் காளீஸ்வரன் தனது உரையில் பதிவு செய் தார்.

நாமக்கல்லை சேர்ந்த ஒரு நாடகக்கலைஞரின் 2 குழந்தைகள் பொறியியல் பட்டம் படித்து வருகின்றனர். அவர்களுக்குக் கடந்த மூன்றரை ஆண்டுகளாக, கூத்து நடத்தி கல்விக் கட்டணம் செலுத்தி வந்தார். அத்தகைய மனித நேயமிக்க ஓம் முத்துமாரி நேசித்த நாட்டுப்புறக் கலைகள் மீது நம்பிக்கை வையுங்கள். பிரச்சனைகளை வீரியமாகப் பதிவு செய்ய நாட்டுப்புற கலைகளால்தான் முடியும் என்றும் காளீஸ்வரன் கூறினார்.

வறுமை நமக்கு மாமன் முறை
சிறுமை நமக்குத் தம்பி முறை
பொறுமை நமக்கு அண்ணன் முறை
பசியும் பட்டினியும் பிள்ளைகள் முறை
எத்தனை சொந்தங்கள் நமக்கிருக்கு பாத்தீகளா ....

என்று ஓம் முத்துமாரி பாடுவது போலவே அவரின் நினைவேந்தல் கூட்டமும் அமைந்திருந்தது...

தீக்கதிர் 9-12-2013

Monday, June 17, 2013

மக்கள் சேவையை மறுக்கும் அரசு மருத்துவமனை

வலியோடும், வேதனையோடும் ஓடி வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனை, அவர்களை தனியார் மருத்துவ மனைகளை நோக்கி விரட்டி அடிக்கிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது கே.கே.நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை.மக்கள் சேவையாக இருந்த மருத்துவம், தற்போது பெரும் வியாபாரமாக் கப்பட்டு, லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.

 மத்திய அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவத்திற்கென்று 2.1 விழுக்காடு தொகை ஒதுக்கியது மாறி, தற்போது 1.3 விழுக்காடு நிதியையே ஒதுக்குகிறது. இதனை மாநில அரசும் பின்பற்றுகிறது.இதன்காரணமாக அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படாமல், திட்ட மிட்டு சீரழிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு துரத்தப்படுகின்றனர்; தேவையற்ற அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அதற்கு ஒரு உதாரணமாக கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனை உள்ளது.

சென்னை மாநகரத்தின் வளர்ச்சியை யொட்டி 1979ம் ஆண்டு கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனை தொடங்கப்பட்டது. மத்திய சென்னை, தென்சென்னை பகுதி மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் புறநகர் மருத்துவமனைக்கு கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், சின்மயா நகர், வடபழனி, மேற்கு மாம்பலம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், ஜாபர்கான்பேட்டை, ராமாபுரம், போரூர் என சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

 இந்த மருத்துவமனை உருவான போது சுமார் 3 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 10 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கேற்ப மருத்துவமனையின் விரிவாக்கமும், தரமும், சிகிச்சையும் மாறவில்லை. மாறாக, அந்தப்பகுதியில் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

11 ஏக்கர் பரப்பளவு கொண்ட மருத்து வமனை இடத்தில், கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தனியார் ஆக்கிரமிப்பு போக தற்போது 5.5 ஏக்கர் நிலம்தான் உள்ளது.இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், இந்த நில ஆக்கிரமிப்பு பற்றி மருத்துவமனை நிர்வாகம் இது வரை புகார் செய்யாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன் என்று புரியவில்லை.?

மருத்துவமனையின் பரப்பளவு சுருங்கியது போன்றே, மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவையும் குறைந்து விட்டது. அவசர சிகிச்சைக்கு வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாறாக, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், சென்ட்ரல் பொது மருத்துவமனைக்கு துரத்திவிடும் வேலையை கே.கே.நகர் மருத்துவமனை செய்கிறது.

இதன் பொருள் என்ன? போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் நீண்ட தூரம் மக்கள் செல்லமாட்டார்கள். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வார்கள் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

மருத்துவமனையின் தற்போதைய நிலை:

இந்த மருத்துவமனையில் 15 மருத்துவர்கள், 20 நர்சுகள், மருந்தாளுனர்கள் என ஏராளமான ஊழியர்கள் உள்ளனர். மகப்பேறு சிகிச்சை பிரிவு, கண் குறைபாடுகளை கண்டறிவதற்கான பிரிவு, பல் சொத்தை மற்றும் அது சார்ந்த நோய்கள் கண்டறியும் பிரிவுகளும், இவற்றிற்கான கருவிகளும் உள்ளன. அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதி, 100 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் படுக்கை வசதி, உள் நோயாளிகளுக்கு உணவு சமைத்து கொடுக்கும் சமையலறை, அதற்கான பணியாளர்களும் உள்ளனர். 

இத்தகைய வசதிகள் இருந்தும், அவற்றை பயன்படுத்தி தரமான சிகிச்சை அளிப்பதில்லை. “வரும் ஆனால் வராது என்பது போல மருத்துவமனை உண்டு ஆனால் சிகிச்சை கிடையாது” என்கிற நிலையில் மருத்துவமனை செயல்படுகிறது. 100 படுக்கைகள் இருந்தாலும் 25க்கு மேற்பட்ட நோயாளிகளை அனு மதிப்பதில்லை.

சிறப்பு மருத்துவமனை: 
சென்னையில் கே.கே.நகரில் உள்ளது போன்றே அண்ணாநகரில் ஒரு புறநகர் மருத்துவமனை உள்ளது. அது குடல் நோய் சம்பந்தமான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. அதுபோன்று, இந்த மருத்துவமனையை எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சைக்கான சிறப்பு மருத்தவமனையாக தரம் உயர்த்த 2009ம் ஆண்டு தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் ஏனோ அத்திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மருத்துவமனையை சுற்றியுள்ள மக்கள் பெரும்பகுதியினர் உடலுழைப்பு தொழி லாளர்களாக உள்ளனர். 

அதிலும், குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்களாக உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த வளாகத்தில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை துவங்க முடியும். காய்ச்சல், சளி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்களுக்கு மட்டும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்குத் தான் இந்த மருத்துவமனை உள்ளது என்ற நிலையை மாற்றி இங்குள்ள உள்ள உபகரணங்களை, வசதிகளை பயன் படுத்தினாலே பலவகை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க இயலும்.

500 படுக்கை வசதி தேவை:
இந்த அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000க்கும் அதிகமானோர் புறநோயாளி களாக வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் உடலு ழைப்பை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 500படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்தினால், சிகிச்சை பெற வருகிற நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரிக்கும். உள்கட்டமைப்பு வசதி பெருகும்.

இதனால் மருத்துவச் செலவு குறையும்.24 மணி நேர சிகிச்சை: காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே புற நோயாளிகளுக்கு ஒருசில டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மதியத்திற்கு மேல்வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இதனால் அவர் கள் தனியார் மருத்துவமனையை நோக்கி செல்கின்றனர். அவர்களுக்கு கூடுதல் செலவாகிறது

.மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு என்று பெயர் பலகை இருந்தாலும், அவசர சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு முதலுதவி கொடுத்து அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்ற னர். இவற்றை மாற்றி, தற்போது உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர் களை சுழற்சி முறையில் (ஷிப்ட்) பணி யாற்ற செயல்வதன் மூலம் 24 மணி நேர மும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலும். மேலும் மருந்து மாத்திரைகளை யும் வழங்க முடியும்.

மகப்பேறு சிகிச்சை:
மாநகராட்சி மருத்துவமனைகளில் வருடத்திற்கு ஆயிரத்திற்கும் அதிகமான பிரசவங்கள் நிகழ்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆண்டுக்கு நூற்றுக்கும் குறையாமல் பிரசவங்கள் நிகழ்கின்றன. ஆனால் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களை மையப்படுத்தி உள்ள இந்த மருத்துவ மனையில் 3 மகப்பேறு மருத்துவர்கள், பிரசவ வார்டு இருந்தும் வருடத்திற்கு 10க்கும் குறைவாகவே பிரசவம் நிகழ்கி றது. இதற்குக் காரணம் மருத்துவர்கள் குறைபாடா? மருத்துவமனையின் குறை பாடா? அதனைக் கண்டறிந்து பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்க நடவ டிக்கை எடுக்க முடியாதா?

குழந்தை சிகிச்சை:
மருத்துவ மனையின் இணையதளத்தில் குழந்தை களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படு வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான சிகிச்சை அளிப்பதில்லை. குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு மருந்துவர்களை நியமிக்கவும், குழந்தை களுக்கான தடுப்பு ஊசிகள் போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாத ஆம்புலன்சுக்கு ஷெட்: கண் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற வற்றிற்காக கருவிகள் இருந்தும் போதிய பணியாளர்கள் இல்லாததால் அவற்றை முறையாக பயன்படுத்தி சிகிச்சை அளிக்க இயலாத நிலை உள்ளது. தற்போது மருத் துவமனையில் உள்ள உபகரணங்களை பயன்படுத்த ஊழியர்களை நியமிப்பதன் மூலம் மக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க இயலும்.உள் நோயாளிகளாக சிகிச்சை பெறு கிறவர்களுக்கு உணவுகளை சமைத்து கொடுக்க போதிய வசதி உள்ளது.

ஆனால், நோயாளிகள் வெளியில் இருந்து உணவு வாங்கி உண்ண வேண்டிய நிலையே உள் ளது. அப்படியானால் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் உணவுப் பொருட்கள் எங்கே போகிறது?மருத்துவமனைக்கென்று தனியாக ஆம்புலன்ஸ் இல்லை. இல்லாத ஆம் புலன்சுக்கு 4 லட்சம் ரூபாய் செலவில் ஷெட் அமைத்துள்ளனர். அதில் காண்ட் ராக்டர்கள் தங்கள் உபகரணங்களை போட்டு வைத்துள்ளனர்.

பெயர் பலகை கூட இல்லை:
கே.கே. நகர் புறநகர் மருத்துவமனையையொட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனையும் செயல் படுகிறது. இங்கு அரசு பொது மருத்துவ மனை உள்ளது என்பது தெரியும் வகை யில் மருத்துவமனை முகப்பில் ஒரு பெயர் பலகை இல்லை.மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்கள், புகார் தெரி விக்கும் எண், லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி எண், உள்ளூர் காவல் நிலைய தொலைபேசி எண் போன்ற விவ ரங்கள் கூட இல்லாத நிலை உள்ளது.மருத்துவமனையின் பராமரிப்பு பணி களுக்காக அரசு ஒதுக்கீடு செய்த பணம், முழுமையாக முறையாக, தேவையான பணி களுக்கு செலவிடப் பட்டுள்ளதா என அரசு விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், இப்பணிகளுக்கான ஒப்பந்தங் கள் வெளிப்படைத் தன்மையுடையதாய் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டால் அது தனியார் மருத் துவமனைகளின் கொள்ளை லாபத்திற்கு வேட்டு வைப்பதாக அமையும். ஆகவே, தனியார் மருத்துவமனை முதலாளிகள் அரசு மருத்துவமனையை மேம்படுத்த விடாமல் நெருக்கடி கொடுத்து வருகின் றனர். அதற்கு இந்த கே.கே.நகர் மருத்துவ மனையும் விதிவிலக்கல்ல.இன்றைக்கு கல்விக்கும், மருத்துவத் திற்கும் மக்கள் பெருமளவில் செலவிடு கின்றனர்.

ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் இவற்றை தனியார்மயமாக்குவதில் போட்டிப்போட்டுக் கொண்டு செயல்படு கின்றன. அதன்விளைவு மக்களின் வாழ்க்கை நிலை மேலும் மேலும் வறு மையை நோக்கி சென்று கொண்டிருக் கிறது. அரசு மருத்துவமனைகளை நம்பித் தான் ஏழை மக்களின் வாழ்க்கை உள் ளது என்பதை அரசு மற்றும் மருத்துவ மனை நிர்வாகமும், மருத்துவர்களும் உணர்ந்து, நோயாளிகளை மனித நேயத் துடன் அணுக வேண்டும்; உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதனை அரசு உத் தரவாதப்படுத்த வேண்டும்
மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும்

சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான  விருது பெற்ற மலர்வதியின் தூப்புக்காரி நாவலையும், கவிஞர் ஆசு-வின் அம்மாக்கள் வாழ்ந்த தெரு என்ற சிறுகதைத் தொகுப்பையும் முன் வைத்து  சென்னையில் ஆய்வரங்கு நடைபெற்றது.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்- கூட்டாஞ்சோறு அரங்கு இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது. தூப்புக்காரி குறித்த ஆய்வை முன்வைத்த இலக்கிய விமர்சகர் எஸ்.வி.வேணுகோபால், நுட்பமான உள்ளடுக்குகள் நிரம்பியதாக இது உள்ளது. குமரி பகுதியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட வேலை என்றில்லாமல் எல்லா வேலைக்கும் செல்வார்கள். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களும் துப்புரவு வேலைக்கு செல்வார்கள் என்றால் சாதி ஆதிக்க மனோநிலை எங்கிருந்து வருகிறது? திருமண உறவின் போதுதான் என்பதை நாவல் பேசுகிறது. மீண்டும் மீண்டும் அழுக்கோடும் மலத்தோடும் வாழும்  தூப்புக்காரி வாழ்க்கையில் குளிப்பதும், சுத்தமாக இருப்பதும் எப்படி சாத்தியம்? என்று கேள்வி எழுப்பினார்.


குடும்ப வறுமை, கடன் தொல்லையில் காதலன் வீட்டிலேயே எச்சில் இலை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் பூவரசி; தாய் மருத்துவமனையில் இருக்கும்போது  காதலின் உச்சத்தில் உணர்ச்சியோடு, முழு உள்ளத்தோடு மனோவுடன் ஒன்று சேர்கிறாள். ஆனால் பின்னால் அவனால் நிராகரிக்கப்படும் போது அவள்   மனநிலை என்னவாக இருந்திருக்கும்? எண்ணிப பார்க்கும் போது மனம்பதைக்கிறது.

பூவரசி மீது காதல் கொண்டிருக்கும் தூப்புக்கார தொழிலாளி மாரி, தனது சாதியின் காரணமாக அவளிடம் அதனை வெளிப்படுத்தாமல் இருக்கிறான். இந்தச் சூழலில் மனோ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனால் உருவான குழந்தையைச் சுமந்து நிற்கும்  பூவரசியிடம், நீ விரும்பினால் குழந்தைக்கு நான் அப்பாவாக இருக்கிறேன். உனது விருப்பமின்றி உன்னை தொடமாட்டேன் என்கிறான் மாரி.  அழுக்கு உடலோடு இருக்கும் வெள்ளை மனம் படைத்த வன் மாரி. இதுதான் எளிய மனிதர்களின் உயர்ந்த வாழக்கை என்றார் வேணுகோபால்.

ஆசு-வின் அம்மாக்கள் வாழுந்த தெரு சிறுகதை தொகுப்பை ஆய்வு செய்த சமூக செயற்பாட்டாளர் ஜி.செல்வா, நகரமயமாதலை பெருமையாகப் பேசும் ஆட்சியாளர்கள், கிராமப்புற விவசாயம் அழிவதை பேசுவதில்லை. அதனை ஒரு சிறுகதை பேசுகிறது. கவித்துவமான மொழி நடையால் வசீகரிக்கும் ஆசு, மலைக்கும் மனது இருக்கிறது என்கிறார். மலையையும், காட்டையும் தாயாக பாவிக்கிறார். ஒரு கதையில் இரண்டு சிறுவர்கள் மீன் பிடிப்பதை வைத்து மனித நேயத்தின் உச்சத்தை காட்டுகிறார். இந்த கதை தொகுப்பு நம்பிக்கை விதை வீசுவதாக உள்ளது என்று கூறினார்.


நாவலாசிரியர் மலர்வதி ஏற்புரையற்றுகையில், எனது நாவல் உயிருள்ள இலக்கியம்; கற்பனை அல்ல. இயற்கையை நேசித்து, மனிதர்களை வாசித்து, தோழிகளின் வலி உஷ்ணத்தை உணர்ந்து எழுதிய நாவல் தூப்புக்காரி. இது என்னுடைய வாழ்க்கை அல்ல. பள்ளியில் தூப்புக்காரியாக எனது அம்மா இருந்த போது உருவான ரணம். எதார்த்த வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அசிங்கம், அருவருப்பு என்று பலர் ஓடும் போது அதுவே சிலருக்கு வாழ்க்கையாக உள்ளது. நமது அழுக்கை மற்றொரு இனம் சுத்தம் செய்வதை உடைக்க வேண்டும். 

எனது நாவலைப் படித்து விட்டு கோவையிலிருந்து ஒரு அம்மா பேசினார், கதையில் பிறக்கும் குழந்தையும் தூப்புக்காரியாகிவிடுமா என்று கேட்டார். அதைத் தடுக்கத்தான் நான் இருக்கிறோமே என்று நான் பதில் சொன்னேன். அந்த நம்பிக்கை தான் எனது எழுத்துக்களுக்கு அடிப்படை என்றார். வரதட்சனை கொடுப்பதும், வாங்குவதும் சமூக கௌரவமாக பார்க்கப்படுகிறது. சில மூடநம்பிக்கைகளை மாற்ற வேண்டும்.  மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்தில் எனதுபடைப்புகள் அமையும் என்றும் அவர் கூறினார்.


கவிஞர் ஆசு ஏற்புரையாற்றும் போது படைப்புகளாக உருவாக்கிய போது இருந்த மனநிலையை விட விமர்சனங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன என்றார். நிகழ்ச்சிக்கு தமுஎகச தென்சென்னை மாவட்டத் தலைவர் சைதை ஜெ தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு வரவேற்க  துணைச் செயலாளர் சிவசெந்தில் நாதன் நன்றி கூறினார்.  

Friday, March 29, 2013

சமூகத்தில் நாடகத்தின் இடத்தை மீட்க வேண்டும்




                                                                           பிரளயன் 

உலகில் உள்ள எல்லா நாடக மரபிலும் ஆடல் பாடல் இருந்தது. அது காலப் போக்கில் மாற்றம் கண்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் நாடகத்திலிருந்த ஆடல் பாடல்களும் மறைந்தன. ஆனால், தமிழ் நாடக மரபில் இருந்த ஆடல், பாடல்களை நீக்கி பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தையே கெடுத்துவிட்டார்; சிறுமைப்படுத்திவிட்டார் என்று சிலர் கூறுகின்றனர். நாடகத்திலிருந்து ஆடல், பாடல்களை நீக்கும் முயற்சி பம்மல் சம்பந்த முதலியார் செய்வதற்கு முன்பே தொடங்கிவிட்டது.


மௌன குரு எழுதிய ‘ஈழத்து தமிழ் நாடக மரபு’ என்ற நூலில், கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்கள் நாடகங்களாக உருவானபோது, புனிதர்களாக சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் ஆடிப்பாடி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந் தனர். ஆகையால் புனிதர்களாக உள்ள பாத்திரங்கள் ஆடல், பாடல்களை தவிர்க்க ஆரம்பித்தன என்று குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நாடகங்களை ‘வாசகப்பா’ என்றழைத்தனர். அது பின்னர் மருவி ‘வாசாப்பூ’ என்றானது. அதாவது சம்பந்த முத லியாருக்கு முன்பே தமிழ்நாடக மரபில் ஆடல் பாடல்களை தவிர்க்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. தொழில்முறை சாராத, கலை ஆர்வம் மிக்கவர்களைக் கொண்டு பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களை நடத்தி வந்தார்.

நகரமயமாக்கல் தொடங்கி நடுத்தர வர்க்கம் உருவான அந்த காலக்கட்டத்தில், அதன் பிரதிநிதியாக பம்மல் சம்பந்த முதலியார் இருந்தார். இதனால்தான் சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியர் என்றால், பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத்தின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.


இதே காலக்கட்டத்தில் கும்பகோணத்தில் பாலாமணி அம்மையார் முழுக்க முழுக்க பெண்களை வைத்தே நாடகம் நடத்தி வந்தார். பாலாமணியின் நாடகத்தை பார்க்க மாயவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் அணி அணியாக வருவார்கள். இதற்காகவே தனியாக ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலுக்கு ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்றே பெயரிட்டிருந்தனர். அத்தகைய பாலாமணி அம்மையார் பற்றி எந்தக் குறிப்பும் பெரிதாக இல்லை. அதனை சென்னை பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.


கூத்து, நாடகம், இசைப்பாடல், கணியன் கூத்து, சபா நாடகம் எல்லாம் சேர்ந்ததுதான் தமிழ் நாடக மரபு. 1977க்கு பிறகு தமிழில் நவீன நாடக முயற்சிகள் தொடங்கின. சென்னையில் கூத்துப்பட்டறை, பரீக்ஷா, சென்னை கலைக்குழு, மவுனக்குறம், மூன்றாம் அரங்கு இப்படி பல குழுக்கள் உருவாகின. பாண்டிச்சேரி, மதுரை என பல இடங்களில் நாடகக்குழுக்கள் இயங்கி வருகின்றன.


ஒரு சில நாடகக்குழுக்களை தவிர பெரும்பாலான குழுக்கள் நவீன நாடக முயற்சியை ஊக்குவிக்க பக்குவமான பார்வையாளர்கள் இல்லை என்று புலம்ப ஆரம்பித்தனர். பார்வையாளர்கள் இல்லை என்பதை பற்றி தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். புதுவை நாடக சங்கம் வெளியிட்ட மலரில் வந்துள்ள நேர் காணலில் கே.எஸ்.ராஜேந்திரன் குறிப்பிடுகையில், “ராமசாமி கந்தசாமியாக நடிக்க முத்துச்சாமி பார்க்கிறார். இதுதான் நாடகம். ஆனால், நவீன நாடகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அதுதான் காரணம்.


ஏற்கெனவே இருந்தது போதாததால், மதிப்பீடுகள் உயர்ந்ததால் நவீனத்துவம் வருகிறது. இதனை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என் பதைப் பரிசீலிக்க வேண்டும். கிராம மதிப்பீட்டிற்கும், நகர மதிப்பீட்டிற்கும் வேறுபாடு உள்ளது.1984ல் சென்னை கலைக்குழு தொடங்கிய போது அது மேடை நாடக குழுவாக்கத்தான் இருந்தது. அதன்பின்னர் திறந்தவெளி அரசியல் நாடகக் குழுவாக மாறியது. மேடைக்குழுவுக்கு ஒரு மதிப்பீடும், தெரு நாடகத்திற்கு ஒரு மதிப்பீடும் உள்ளது. எங்கள் குழுவின் நாடகத்தை புரியாமல் புறக்கணித்தால், அதனை தோல்வியாக கருதுகிறோம். எங்கள் நாடகத்தின் மீது மாறுபட்ட கருத்து இருக்கலாம் ஆனால் புறக் கணிக்க முடியாது.


2002ல் சென்னை கலைக்குழு உருவாக்கிய ‘உபகதை’ 24 முறையும், 2004ல் உருவான ‘பாரி படுகளம்’ 14 முறையும் அரங்கேற்றப்பட்டது. அண்மையில் உருவாக்கப்பட்ட ‘வஞ்சியர் காண்டம்’ 13 முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. மே மாதத்தில் 15 இடங்களில் அரங்கேற்றப்பட இருக்கிறது. நாடகத்தை தொழிலாக செய்ய முடியாது. அன்றைக்கு நாடகங்களுக்கு உயர்ந்த மதிப்பு மரியாதை, வரவேற்பு இருந்தது. ஏனெனில் அன்றைக்கு நாடகமே மையமாக இருந்தது. சினிமா இல்லை; ஒரே பொழுது போக்கு அதுதான். ஆனால் இன்றைக்கு நாடகம் கற்கை நெறியாக மட்டுமே உள்ளது. பண்பாடு குறித்து அரசுக்கு தெளிவான பார்வை இல்லை. அவ்வாறு இருந்தால் பண் பாட்டுத் துறையை சுற்றுலாத்துறை யின் கீழ் கொண்டு சென்றிருக்க மாட் டார்கள். நாடகம் சமூகத்தில் பெற்றி ருந்த இடத்தை மீட்டெடுக்க வேண்டும்.


கம்யூனிஸ்ட்டுகளாக அறியப் பட்டவர்களால்தான் 1942-43ல் இந் திய மக்கள் நாடக மன்றம் உருவானது. இவர்கள் மக்கள் பிரச்சனைகளை நாடகமாக மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார்கள். தேசிய நீரோட்டத்தில் இணைந்து இருக்க வேண்டும் என்ப தல்ல. இருக்கிற இடத்தில் என்ன செய்தோம் என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக, இரண்டாம் உலகப்போரின் போது வடகிழக்கு பகுதிகள், வங்காளம், ஒரிசா பகுதியில் விளைந்த தானியங்களை ஆங்கிலேயர்கள் முழுவதுமாக கொள்முதல் செய்து ராணுவ முகாம்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் வங்கப்பஞ்சம் உருவானது. அதனால் கிராமங்களில் இருந்தவர்கள் நகரங்களை நோக்கி வந்தனர். பட்டினியால் துடித்தனர். அதனை மையப்படுத்தி உருவான ‘நாவன்னா’ நாடகம் புகழ்பெற்றது. சத்தீஷ்கர் பழங்குடியின மக்கள் நடித்த ‘காசிராம்’ சர்வதேச அளவில் புகழ்பெற்றது. ஆகவே, நாடகம் மக்கள் கலையாக உள்ளது. ஆனாலும் நாடகத்தை தொழிலாக செய்ய முடியாது. அதில் ஆர்வம் உள்ளவர் கள் செய்யலாம். சமூகத்தை முன்னெடுத் துச் செல்ல, மாற்று நாடகம் உதவும்.

(சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறையில் பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளை சார் பில் ‘நாடகம் இன்று’ எனும் தலைப் பில் நாடக செயற்பாட்டாளர் பிரளயன் பேசியதிலிருந்து. )

Monday, January 28, 2013


பூட்டு உள்ள இடத்தில்தான் திருடர்களும்




அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் புத்தகங்களை வாங்குகிறார்கள். வாங்கிய புத்தகங்களைக் கொண்டு சென்று அழகாக அலமாரியில் அடுக்கி வைக்காமல் படிக்க வேண்டும். புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு கூடுதலாக சிந்திக்க வேண் டும். ஜப்பானில் உணவகங்களில்  உள்ள மேசைகளில் ட்ராவ் இருக்கும். அதில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உணவு பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கும் சமயத்தில் அந்தப் புத்தகங்களை எடுத்துப் படிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள். சிறிது நேரத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்று அந்த நாட்டு அரசு சிந்திக்கிறது. இங்கு 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் குடித்து நேரத்தை வீணாக்கினாலும் அரசு கவலைப்படுவதே இல்லை. காலை 8 மணிக்கே சினிமா காட்டும் கிரிமினல் குற்றம் இங் குதான் நடைபெறுகிறது.


அமெரிக்காவின் உணவகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம். வீட்டிற்கு எடுத்துச் சென்றும் படிக்கலாம். படித்த பிறகு எடுத்து வந்து வைத்தால் போதும். மாறாக அந்த மக்கள் எடுத்த புத்தகத்துடன் சேர்த்து, தாங்கள் படிக்கும் புத்தகத்தையும் கொண்டு வந்து வைத்து விட்டுச் செல்கிறார்கள். அங்கு புத்தக திருட்டு நடைபெறுவது இல்லை. பூட்டும் சாவியும் எங்கு உள்ளதோ அங்குதான் திருடர்கள் உலாவருகிறார்கள்.

உலகில் குழந்தைகள் பிறக்கிறார்கள். இந்தியாவில்தான் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று பிறக்கிறார்கள். அப்படித்தான் குழந்தைகளை வளர்க்கிறோம். இல்லை யென்றால் பெண் குழந்தைக்கு எவர் சில்வர் பொம்மை கேஸ் அடுப்பும், ஆண் குழந்தைகக்கு பொம்மை துப்பாக்கியும் வாங்கிக் கொடுப்போமா? நரி எந்த ஊரில் உட்கார்ந்து தந்திரம் செய்தது? நம்மிடம் உள்ள இழிவுகளை விலங்குகளின் மீதேற்றி குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறார்கள்.

வீட்டுப்பாடம் கொடுத்து குழந்தைகளின் மாலை நேரத்தை களவாடும் ஆசிரியர்கள் சொர்க்கத்திற்கு (!) போக மாட்டார்கள். வானவில்லை பார்க்காத, மாலை நேரத்து வானத்தை பார்க்காத குழந்தைகள் எப்படி இருக்கும்? அதிகாலை முதல் இரவு வரை படிப்பு பயிற்சி என்று குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். பின்னிரவில் தூங்கி அதிகாலை கனவுக்குள் செல்லும் குழந்தையை கதவை தட்டி எழுப்பி விடுகிறோம். இப்படி வளர்க்கிற குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்குமா? குழந்தைகள் மீது இவ்வாறு நிகழ்த்தப்படும் வன்முறை பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு இணையானது.

ஒன்றோடு ஒன்று கலந்துபேசி, புதுப்புது வார்த்தைகளை கற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து, சமரசமாக, சமமாக பழக வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் என்ன நடக்கிறது? ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என்று பிரித்து வைக்கிறார்கள். ஏனெனில் மொழிக்கு கூட வர்ணாசிரமத்தை கற்றுக் கொடுத்த வர்கள் அல்லவா நாம்?

மனிதனுக்கு மனித நேயத்தை கற்றுக் கொடுப்பதுதான் இலக்கியம். அதிகாரத்தை, ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்வி கேட்பவன்தான் எழுத்தாளன், கலைஞன்.

( சென்னை புத்தகக் காட்சியில்  எழுத்தும் ஆயுதம்/எழுதுகோலும் ஆயுதம் எனும் தலைப்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசியதிலிருந்து...)

பெண்கள் உலாவுகிறார்கள்


கிராமங்களில் பெண்கள் பிரசவித்தவுடன் உறவினர்கள் சுகப்பிரசவமா? இல்லை ஆயுத கேசா? என்பார்கள். அப்போதுதான் ஆயுதம் என்ற சொல் எனக்கு அறிமுகமானது. அப்போது ஆயுதம் என்பது பிரசவம் சம்பந்தப்பட்டது. மருத்துவம் சம்பந்தப்பட்டது என்று புரிந்து கொண்டேன். ஆனால் அந்த ஆயுதத்தை  தற்போது தப்புதப்பாக பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் எழுத்து என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி நம்மை அடிமையாக்கினான். நிலத்திற்கு பட்டா முறையை கொண்டு வந்தான். அதற்கு முன்பு வரை அனுபவ பாத்தியம்தான் இருந்தது. ராணுவத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றேன். எல்லையில் நின்று எதை பாதுகாக்கிறோம்? விவசாயிகள், தொழிலாளிகளின் குழந்தைகள் யாரை? யார் சொத்தை பாதுகாக்கிறார்கள்? நமக்குத்தான் சொத்தே இல்லையே. ஆகவேதான் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு, எழுத்து எனும் ஆயுதத்தை ஏந்தி மக்களோடு பணியாற்றுகிறேன்.

பகத்சிங் வெடிகுண்டுக்கு இணையாக எழுத்தையும் கையாண்டார். காந்தி யங் இந்தியா பத்திரிகையில் நீங்கள் செல்லும் பாதை தவறானது; மக்கள் உங்களோடு இல்லை என்று எழுதினார். உங்களை நேராக மேடைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு நீங்கள் பேசுகிறீர்கள். கூட்டம் முடிந்ததும் சென்று விடுகிறீர்கள். மக்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நாங்கள் மக்களோடு மக்களாக கலந்து இருக்கிறோம். எங்களை தங்கள் வீடுகளில் வைத்து மக்கள்தான் பாதுகாக்கிறார்கள். உங்களை விட எங்களுக்கு மக்களைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று எழுத்தில் பதிலடி கொடுத்தான் பகத்சிங்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு எழுத்தும் தண்டனைதான் எழுதுகோலும் தண்டனைதான். பள்ளியில் படித்து வெளியே வருகிற குழந்தைகள் ஏன் எழுத்தை நேசிப் பதில்லை? அதற்கு நமது கல்வி முறையில் உள்ள கோளாறுதானே காரணம்? இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதிய மெக்காலேதானே இந்திய கல்விச் சட்டத்தையும் உருவாக்கினான். பிறகு அந்தக் கல்வி எப்படி இருக்கும்?

எப்போதும் சதா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்களால் பதில்சொல்லி மாளாது. இது குழந்தைகளின் இயல்பு. அந்தக் குழந்தைகளை கொண்டு சென்று பள்ளியில் விடுகிறார்கள். அதன்பிறகு அந்தக் குழந்தைகள் கேள்வி கேட்க முடியாது. கேள்விக்கு பதில் மட்டும் சொல்கிறவர்களாக மாறுகிறார்கள். கேள்வி கேட்க தூண்டுவதற்கு மாறாக, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறவர்களை உருவாக்கிற இடமாக பள்ளிகள் உள்ளன. இதைவிடப் பெரிய வன்முறை இருக்க முடியுமா?

1947ல் நேரு உள்ளிட்டோர் பங்கேற்ற கல்வி மாநாட்டில் (சிம்போசியம்) எதையெல்லாம் செய்யக் கூடாது என்று பேசினார்களோ, அதையெல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். படிக்காதவர்கள் ஊழலுக்கு துணை போனதாக கேள்விப்பட்டதுண்டா? படித்தவர்கள்தான் அத்தனை ஊழல்களுக்கும் துணை நிற்கிறார்கள்; கோப்புகளில் கையெழுத்து போடுகிறார்கள். அநியாயத்தை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்கள் அப்படியான பள்ளியில் படித்தவர்கள். இங்கே சுரண்டலுக்கான ஆயுதமாக எழுத்து பயன்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகனாக உள்ள அம்பேத்கர் சிலையாகத்தான் இந்திய சமூகத்தில் அறிமுகமாகி உள்ளார்; சிந்தனையாக அல்ல.அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார் என்றுதான் கற்பிக்கிறார்கள். மற்றவற்றை சொல்வதில்லை. இந்தியாவின் தலைசிறந்த அறிவாளி அவர். எல்லா சாதியினருக்கும் சேர்த்தே இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். ஆனால் தலித் தெருக்களில் மட்டும்தான் அவர் சிலையாக இருக்கிறார். அவர் எழுத்தாக, சிந்தனையாக நமக்கு அறிமுகமாகவே இல்லை. அதனால்தான், அவர் சாதி அமைப்பின் தலைவராக மாற்றப்பட்டு இருக்கிறார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு பதிவாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் 10 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு உடையா காரணம்? ஆண் மனம்தானே காரணம்? நமது பண்பாட்டில் ஆணை வீரனாக காட்டுகிறார்கள்; அறிவாளியாக காட்டுவதே இல்லை. ஒரு திரைப்படத்தில் கூட அறிவாளியை பெண் காதலிப்பது போல் காட்டுவதே இல்லை. ஆண் சிந்தனையின் வடிவாகவே பெண் உருவாக்கப்படுகிறாள்.

அறிமுகமே இல்லாத இருவரை திருமணம் முடிந்த அன்று இரவே முதலிரவுக்கு அனுப்புகிறார்கள். இதில்வேறு, அவர் மனம் கோணாதபடி நடந்துகொள் என்று அறிவுரை கூறுகிறார்கள். இதை விட அசிங்கம் எங்காவது நடக்குமா? பெண்களைப் பற்றி ஆண்களின் சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கிறது? தமிழகத்தில் அண்மையில் உருவாகி உள்ள 25 பெண் கவிஞர்கள், படைப்பாளிகள் ஆணாதிக்க சிந்தனைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை நாம் படிப்பதே இல்லை. பெண்ணை வெறும் உடம்பாக பார்க்கிறோம்.

பையன் எப்படி? என்று கேட்டால் பீடி, சிகரெட், தண்ணி, பொண்ணு எதுவும் கிடையாது. நல்ல பையன் என்கிறார்கள். பெண்ணை போதை வஸ்துகளின் வரிசையில் சமூகம் வைத்துள்ளது. ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடமும், ஊழியர்கள் சக பெண் ஊழியர்களிடத்திலும் தவறாக நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கிடையில்தான் பெண்கள் உலாவுகிறார்கள். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சித்திரத்தை குழந்தையிலேயே உணர்த்தி விடுகிறோம். எழுத்தை பெண்கள் கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதனை ஆண்களின் மனதை அறுவை சிகிச்சை செய்யும் ஆயுதமாக மாற்ற முடியும்.

எல்லோரும் சென்று வருகிற கழிப்பிடத்தை ஏன் நாங்கள் மட்டும் அள்ள வேண்டும்? எல்லா சாதியிலும் ஏழை இருக்கும் போது ஏன் அருந்ததியர்கள் மட்டும் மலத்தை அள்ள வேண்டும்? என்று அந்தச் சமூகத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் கேட்கிறார்கள். எழுத்து அச்சமூகத்தை சேரும் போது அவர்கள் அமைப்பாக அணி திரண்டு கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் எழுத்துக்களை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

சமூக வெளியில் சாதி மறுப்பு, காதல் ஒப்புக் கொள்ளப்படுகிறது - நமது வீட்டில் நடக்காமல் அது அடுத்த வீட்டில் நடக்கும் வரை. எந்த எழுத்தும் நுழைய முடியாத கோட்டையாக குடும்பங்கள் உள்ளன. உணர்ச்சிப் பூர்வமாக உள்ள குடும்பங்கள் அறிவுப்பூர்வமாக இல்லை. வாசலுக்கு தண்ணி தெளித்து, கோலம் போட்டு, சமையல் செய்தால் அதை பார்த்து பிற ஆண்களும் செய்வார்கள் என்று நான் செய்கிறேன். மாறாக, சார் விதிவிலக்கா னவர் என்று  சொல்லிவிட்டு மற்ற ஆண்கள் சென்று விடுகிறார்கள்.

இந்த எழுத்து ஆதிக்க சாதிக்கும், ஆளும்வர்க்கத்திற்கும்,உலகமயத்திற்கும் பயன்படும் வரை அது வன்முறை ஆயுதமாக இருக்கும். உழைப்பாளிகள், பெண்கள், தலித் மக்கள், ஒடுக்கப்பட்டோருக்கு பயன்படும் போது அறுவை சிகிச்சை செய்யும் ஆயுதமாக மாறும்.

( சென்னை புத்தகக் காட்சியில்  எழுத்தும் ஆயுதம்/எழுதுகோலும் ஆயுதம் எனும் தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதிலிருந்து...)

விவசாயிகளும், தொழிலாளர்களும் தரும் ஆதரவுதான் மிகச்சிறந்த பாராட்டு
- செல்வராஜ்



இடதுசாரி எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கும் போது வழக்கம்போல் எழும் தரமற்ற விமர்சனங்களுக்கு தோல் நாவலும் தப்பவில்லை. கம்யூனிஸ்ட்டு கள் வர்க்கப் போராட்டத்தையும், சாதிப் போராட்டத்தையும் ஒருசேர நடத்தியதால் கிடைத்த வெற்றி, அதனால் உரு வான சமூக மாற்றத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களின் விமர்சனங்களை புறந்தள்ளி இடதுசாரி இயக்க எழுத்தாளர்கள் புதிய புதிய படைப்புகளை தந்து கொண்டிருக்கின்றனர். இலக்கிய உலகில் புதிய தடம் பதித்து வலம் வருகின்றனர்.


இடதுசாரி எழுத்தாளர்களின் இலக்கிய பங்களிப்பை புறக்கணிக்க முடியாத நிலையிலேயே இத்தகைய விருதுகள் அவர்களை நோக்கி வருகின்றன. இதற்கு மணிமகுடமாக, தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் டி.செல்வராஜின் தோல் நாவல், 2012ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள நூல்களின் வரிசையில் 3வதாக சாகித்ய அகாடமி விருது பெறுகிற நூல் என்பது குறிப்பிட்டத்தக்கது.


இதனையொட்டி 36வது சென்னை புத்தகக்காட்சி வளாகத்தில் டி.செல்வராஜூக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் நூலை அறிமுகம் செய்த மதுரை காந்திகிராம் கிராமியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பா.ஆனந்தகுமார், "38 ஆண்டுகால அரசியல், சமூக, பொருளதார வரலாறு விரிவாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் எத்தகைய இன்னலுக்கும், பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள் என்ப தையும், பரம்பரை அடிமையாக தோல் ஷாப்புகளில் பணியாற்றுவதையும் இது பதிவு செய்துள்ளது" என்றார்.


"கம்யூனிஸ்ட் இயக்கத்தவர் தலைமறைவு காலத்தில் ஆற்றிய பணிகள் குறித்த பதிவு தமிழ் இலக்கியங்களில் மிகக் குறைவாக உள்ளது. அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மக்களோடு மக்களாக கலந்து நின்று, சங்கத்தை ஏற்படுத்தி சிட்டுக்குருவிகளாக இருந்த தொழிலாளர்களை வல்லூறுகளாக மாற்றினார்கள் என்பதை மிகவும் நுட்பமாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சோசலிச எதார்த்த நாவல்" என்றார் அவர்.


"இடதுசாரிகளுக்கு விருது கிடைத்தாலே அது விமர்சனத்திற்குள்ளாகிறது. அதற்கேற்ப இடதுசாரிகள் தொடர்ந்து விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இடதுசாரி அமைப்புகளை தவிர்த்து வேறு அமைப்புகளில் எழுத்தாளர்கள் இல்லை. தேசிய, திராவிட இயக்கங்களுக்கு புதிதாக எழுத்தாளர்களை உருவாக்கும் சக்தி இல்லை; குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கின்ற ஒன்றிரண்டு எழுத்தாளர்களும் பழைய எழுத்தாளர்கள். புதிதாக சில கவிஞர்கள் இருக்கிறார்கள் அவ்வளவுதான். 50 வருட கால தொடர் போராட்டத்தினால் மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் விஞ்சும் வகையில் இடதுசாரி இயக்கம் தமிழகத்தில் புதிய நாவலாசிரியர்களை, சிறுகதை எழுத்தாளர்களை, கவிஞர்களை, படைப்பாளிகளை உருவாக்கி உள்ளது; உருவாக்கி வருகி றது. இதனை நிராகரிக்க முடியாமல் இடதுசாரி எழுத்தாளர்களை நோக்கி விருதுகள் வருகின்றன," என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத் தின் துணைத்தலைவர் சிகரம் ச.செந் தில்நாதன் பெருமிதத்தோடு கூறினார்.


"தோல் நாவல் இலக்கியம் இல்லையென்றால் எது இலக்கியம்? உண்மை களை எழுதினால் அது இலக்கியமில்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ் இலக்கியம் அனைத்துமே பிரச்சார வகை சார்ந்ததுதான். கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவையும் பிரச்சார இலக்கியம்தான். பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை படைப்புகள் பிரச்சார வகை சார்ந்ததுதான். படைப்பு வெறும் பிரச்சாரமாக இல்லாமல், அது கலைவடி வம் பெற்றுள்ளதா?" என்றுதான் பார்க்க வேண்டும், என்றார்.


"வர்க்க அரசியலை பற்றி பேசுகிற இடதுசாரி படைப்பாளிகளுக்கு அழகியல் வேறு, அதனை எதிர்ப்பவர்களுக்கு உள்ள அழகியல் வேறு. நாவலின் முடிவில் பிராமணனான சங்கரன், வேறு சாதிப்பெண்ணான வடிவாம்பாளை திருமணம் செய்து கொள்வதோடு நாவலை முடித்திருக்கலாம். மாறாக, திருமணம் முடிந்த கையோடு சங்கரன் கைது செய்யப்படுகிறான். வடி வாம்பாளை சங்கரனின் தாயார் அணைத்துக் கொள்கிறாள். இதுதான் மார்க்சிய அழகியல். இது ஜெயமோகன் கும்பலுக்கு தெரியாது." என்றார் செந்தில்நாதன்.


சென்னை பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவர் பேரா.வீ.அரசு, "தமிழ்ப் புனைகதை வரலாற்றில் மிகச்சிறந்த நூல்களை டி.செல்வராஜ் படைத்துள் ளார் என்று புகழாரம் சூட்டினார். தமிழ் நாவல்களை பட்டியலிட்டால் அதில் வளமானதாக இடதுசாரி எழுத்தாளர்களின் நாவல்கள் இருக்கும். இடதுசாரி படைப்பாளிகள் உருவாக்கி வரும் புனைகதை மரபு முற்றிலும் வேறானதாக இருக்கிறது. தொ.மு.சி.ரகுநாதன் தனது நாவலுக்கு நெசவு தொழிலாளியை தேர்ந்தெடுத்தது சாதாரண நிகழ்வல்ல. அதே போன்று இடதுசாரிகள் தோல் தொழிலாளர்களுடன் கொண்டிருந்த ஆத்மார்த்தமான உறவு முதன்முதலில் நாவலாக வந்துள்ளது. விவசாய தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்த மலரும் சருகும் நாவலுக்கு சற்றும் குறைவு இல்லாமல் தோல் நாவல் வந்துள்ளது" என்றார்.


"இந்த நாவல் தோல் தொழிலாளர் களை பற்றி மட்டுமே பேசுகிறது. சாதியாக வாழும் மக்கள் வர்க்கமாக திரள்கிறார்கள். மத வேறுபாடுகளை கடந்து நிற் கிறார்கள். ஒடுக்கப்பட்ட பகுதியை சேர்ந்த பெண்களின் வெளிப்பாடுகளை ஆழமாகப் பதிவு செய்துள்ளார். சாதியம் சார்ந்த கருத்து முன் நிற்கிறதா? வர்க்கம் சார்ந்த கருத்து முன் நிற்கிறதா? என்று விவாதிக்க வேண்டும். புதிய புனைவுகளையும், போராளிகளையும் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று உணர்ந்து பதிவு செய்திருக்கிறார்" என்றும் வீ.அரசு கூறி னார்.


"கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கமும் சாதியும் இணைந்த புள்ளியில் நடத்திய போராட்டங்கள்தான் வெற்றியை பெற்றுத் தந்துள்ளன என்று குறிப்பிட்ட ஆய்வாளர் வ.கீதா நாவல் ஏற்படுத்தியுள்ள காத்திரமான விளைவுகளையும், கனமான விமர்சனங்களையும் முன்வைத்தார். "இந்திய சுதந்திரத்தின் மாய்மாலங்களை வெளிப்படுத்துவதாக இந்த நாவலை நாம் பார்க்கலாம். ஹரிஜன சேவாசங்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றை அணைத்துக் கொண்டு சென்ற தன்மையை இதில் காண முடிகிறது. இந்தப் புதினத்தில் வரும் கிருத்தவர்கள் உயிர்த் தெழுதல் தத்துவத்தையும், கம்யூனிச தத்துவத்தையும் இணைத்துக் கொண்டு செல்கிறார்கள். தொழிலாளிகளின் மத உணர்வு வேறு; திருச்சபை பணியாளர்களின் மனநிலை வேறு என்பதை இந்நா வல் தெளிவுபடுத்துகிறது," என்றும் அவர் கூறினார்.


"ஓசேப்பு என்றபாத்திரம் ஒரு கழிப் பறையில் ஒளிந்து கொள்கிறான். அதனை ஒரு பன்றியும் பகிர்ந்து கொள்கிறது என்ற நாவலின் பகுதி மலம், அழுக்கு என்ப தன் மீதான கருத்தியல் என்ன? இவற் றோடு உழலும் மக்களின வாழ்க்கை முறை என்ன என்பதைப் புதினம் கட்டுகிறது. இந்த நாவலின் பெண் பாத்திரங்கள் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டி யவை. ஒருவனால் ஏமாற்றப்பட்டு குழந் தைக்குத் தாயும் ஆன ஒரு பெண் இன் னொருவனோடு வாழ்க்கை நடத்துவது போன்ற பாத்திரப் படைப்பிலும் பெண்க ளின் மாண்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் நாவலாசிரியர் டி. செல்வராஜ்" என்று வ.கீதா புகழ்ந்துரைத்தார்.


"தொழிற்சங்கங்கள் வெறும் கூலி உயர்வுக்காக மட்டும் போராடுபவை அல்ல; சமூக மாற்றத்திற்கான போராட்டத்தையும் நடத்தக் கூடியவை. தோல் நாவலில் வரும் பாத்திரங்கள் கற்பனையானவை அல்ல. உயிரோடு வாழ்ந்து, மக்களோடு இணைந்து நின்ற களப்போராளிகள். தோல் பதனிடும் தொழிலாளர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்தார்கள், எத்தகைய சுரண்டலுக்கு உள்ளானார்கள் என்பதை இந்நாவலின் வழியாக வாசகர்கள் உணர முடியும். இது திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறாக இல்லாமல் தமிழகத்தின் வரலாறாகவும் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உரு வான தொழிலாளர் ஒற்றுமை ஒட்டு மொத்த சமூகத்திலும் மாற்றத்தை உரு வாக்கியது" என்று இந்திய கம்யூனிச இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவருமான ஆர்.நல்லகண்ணு கூறினார்.


"என்ன சாதி, எந்த பிரிவு என்றெல் லாம் கேட்கிறார்கள். இதனை கேட்கவே வெட்கமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டாலும் அதை வெளியே சொல்வதில்லை. பெருமைப்பட்டுக் கொள்வதுமில்லை. அது சமூக மாற்றத்திற்கானது என்று செய்கிறார்கள். தற்போதைய சூழலில் வேறுவழியின்றி சொல்கிறேன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, நான் உட்பட பெரும்பாலானோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வர்கள்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் தேவர் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெண்ணைத்தான், தலித்தான டி.செல்வ ராஜூக்கு பேசி திருமணம் செய்து வைத் தோம். அவர்கள் நன்றாகத்தான் வாழ்கி றார்கள். நாங்களும் நன்றாகத்தான் உள் ளோம்.  கட்டாயப்படுத்தி திருமணம் செய் வது தவறு; காதலிப்பவர்களின் திரும ணத்தைத் தடுத்து நிறுத்த எவருக்கும் உரிமை கிடையாது." என்றும் நல்லகண்ணு கூறினார்.


ஏற்புரை நிகழ்த்திய டி.செல்வராஜ், "60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதுவதை யாரும் பிரசுரிக்க மாட்டார்கள். நவீனத்து வம், பின் நவீனத்துவம் என புதுசுபுதுசாக சொல்கிறார்கள். மக்களுக்கு பயன்படாத அதெல்லாம் சமூகத்தில் நிற்காது, என் றார். தமிழக அரசின் விருதையும், சாகித்ய அகாடமியின் விருதையும் ஒருசேர பெற்ற தோல் நாவல் குறித்து அவர் பேசு கையில், பரிசுக்காக நாவல் எழுத வில்லை. எனது அரசியல் கருத்தை நிலை நாட்டத்தான் எழுதினேன். பரிசு வேண் டுமென்று நினைத்திருந்தால் சாமியார் காலிலோ அல்லது அரசியல்வாதிகளின் காலிலோ சென்று விழுந்திருப்பேன். சமூகத்தை மாற்ற போராடும் விவசாயிகளும், தொழிலாளர்களும் தரும் ஆதரவுதான் மிகச்சிறந்த பரிசு" என்றார்.


"முற்போக்கு எழுத்தாளர்கள் நடத் திய 60ஆண்டு கால போராட்டத்தின் விளைவாகத்தான் தோல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள் ளது. பல இளம் எழுத்தாளர்கள் இடது சாரி முகாமில் எழுதுகின்றனர். ஒடுக்கப் பட்ட இஸ்லாமியர்கள், பெண்கள் பற்றி அதிக அளவில் எழுதுகிறார்கள். அடுத்த டுத்து வரவிருக்கிற விருதுகள் அனைத் தும் முற்போக்கு முகாமை நோக்கியே வரும். அந்த அளவுக்கு சிறந்த படைப்பு கள் வந்து கொண்டிருக்கின்றன" என்றார் செல்வராஜ்.

தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு விரைவாக நகர்த்திச் செல்லும் பணியை இடதுசாரி எழுத்தாளர்கள் தொடங்கி, தற்போது அதனை அதிவேகத்தில் செய்து வருகின்றனர் என்பதையும் இந்நிகழ்வு பறைசாற்றியது.