Pages

Monday, January 28, 2013


பெண்கள் உலாவுகிறார்கள்


கிராமங்களில் பெண்கள் பிரசவித்தவுடன் உறவினர்கள் சுகப்பிரசவமா? இல்லை ஆயுத கேசா? என்பார்கள். அப்போதுதான் ஆயுதம் என்ற சொல் எனக்கு அறிமுகமானது. அப்போது ஆயுதம் என்பது பிரசவம் சம்பந்தப்பட்டது. மருத்துவம் சம்பந்தப்பட்டது என்று புரிந்து கொண்டேன். ஆனால் அந்த ஆயுதத்தை  தற்போது தப்புதப்பாக பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் எழுத்து என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி நம்மை அடிமையாக்கினான். நிலத்திற்கு பட்டா முறையை கொண்டு வந்தான். அதற்கு முன்பு வரை அனுபவ பாத்தியம்தான் இருந்தது. ராணுவத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றேன். எல்லையில் நின்று எதை பாதுகாக்கிறோம்? விவசாயிகள், தொழிலாளிகளின் குழந்தைகள் யாரை? யார் சொத்தை பாதுகாக்கிறார்கள்? நமக்குத்தான் சொத்தே இல்லையே. ஆகவேதான் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு, எழுத்து எனும் ஆயுதத்தை ஏந்தி மக்களோடு பணியாற்றுகிறேன்.

பகத்சிங் வெடிகுண்டுக்கு இணையாக எழுத்தையும் கையாண்டார். காந்தி யங் இந்தியா பத்திரிகையில் நீங்கள் செல்லும் பாதை தவறானது; மக்கள் உங்களோடு இல்லை என்று எழுதினார். உங்களை நேராக மேடைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு நீங்கள் பேசுகிறீர்கள். கூட்டம் முடிந்ததும் சென்று விடுகிறீர்கள். மக்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நாங்கள் மக்களோடு மக்களாக கலந்து இருக்கிறோம். எங்களை தங்கள் வீடுகளில் வைத்து மக்கள்தான் பாதுகாக்கிறார்கள். உங்களை விட எங்களுக்கு மக்களைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று எழுத்தில் பதிலடி கொடுத்தான் பகத்சிங்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு எழுத்தும் தண்டனைதான் எழுதுகோலும் தண்டனைதான். பள்ளியில் படித்து வெளியே வருகிற குழந்தைகள் ஏன் எழுத்தை நேசிப் பதில்லை? அதற்கு நமது கல்வி முறையில் உள்ள கோளாறுதானே காரணம்? இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதிய மெக்காலேதானே இந்திய கல்விச் சட்டத்தையும் உருவாக்கினான். பிறகு அந்தக் கல்வி எப்படி இருக்கும்?

எப்போதும் சதா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்களால் பதில்சொல்லி மாளாது. இது குழந்தைகளின் இயல்பு. அந்தக் குழந்தைகளை கொண்டு சென்று பள்ளியில் விடுகிறார்கள். அதன்பிறகு அந்தக் குழந்தைகள் கேள்வி கேட்க முடியாது. கேள்விக்கு பதில் மட்டும் சொல்கிறவர்களாக மாறுகிறார்கள். கேள்வி கேட்க தூண்டுவதற்கு மாறாக, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறவர்களை உருவாக்கிற இடமாக பள்ளிகள் உள்ளன. இதைவிடப் பெரிய வன்முறை இருக்க முடியுமா?

1947ல் நேரு உள்ளிட்டோர் பங்கேற்ற கல்வி மாநாட்டில் (சிம்போசியம்) எதையெல்லாம் செய்யக் கூடாது என்று பேசினார்களோ, அதையெல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். படிக்காதவர்கள் ஊழலுக்கு துணை போனதாக கேள்விப்பட்டதுண்டா? படித்தவர்கள்தான் அத்தனை ஊழல்களுக்கும் துணை நிற்கிறார்கள்; கோப்புகளில் கையெழுத்து போடுகிறார்கள். அநியாயத்தை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்கள் அப்படியான பள்ளியில் படித்தவர்கள். இங்கே சுரண்டலுக்கான ஆயுதமாக எழுத்து பயன்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகனாக உள்ள அம்பேத்கர் சிலையாகத்தான் இந்திய சமூகத்தில் அறிமுகமாகி உள்ளார்; சிந்தனையாக அல்ல.அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார் என்றுதான் கற்பிக்கிறார்கள். மற்றவற்றை சொல்வதில்லை. இந்தியாவின் தலைசிறந்த அறிவாளி அவர். எல்லா சாதியினருக்கும் சேர்த்தே இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். ஆனால் தலித் தெருக்களில் மட்டும்தான் அவர் சிலையாக இருக்கிறார். அவர் எழுத்தாக, சிந்தனையாக நமக்கு அறிமுகமாகவே இல்லை. அதனால்தான், அவர் சாதி அமைப்பின் தலைவராக மாற்றப்பட்டு இருக்கிறார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு பதிவாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் 10 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு உடையா காரணம்? ஆண் மனம்தானே காரணம்? நமது பண்பாட்டில் ஆணை வீரனாக காட்டுகிறார்கள்; அறிவாளியாக காட்டுவதே இல்லை. ஒரு திரைப்படத்தில் கூட அறிவாளியை பெண் காதலிப்பது போல் காட்டுவதே இல்லை. ஆண் சிந்தனையின் வடிவாகவே பெண் உருவாக்கப்படுகிறாள்.

அறிமுகமே இல்லாத இருவரை திருமணம் முடிந்த அன்று இரவே முதலிரவுக்கு அனுப்புகிறார்கள். இதில்வேறு, அவர் மனம் கோணாதபடி நடந்துகொள் என்று அறிவுரை கூறுகிறார்கள். இதை விட அசிங்கம் எங்காவது நடக்குமா? பெண்களைப் பற்றி ஆண்களின் சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கிறது? தமிழகத்தில் அண்மையில் உருவாகி உள்ள 25 பெண் கவிஞர்கள், படைப்பாளிகள் ஆணாதிக்க சிந்தனைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை நாம் படிப்பதே இல்லை. பெண்ணை வெறும் உடம்பாக பார்க்கிறோம்.

பையன் எப்படி? என்று கேட்டால் பீடி, சிகரெட், தண்ணி, பொண்ணு எதுவும் கிடையாது. நல்ல பையன் என்கிறார்கள். பெண்ணை போதை வஸ்துகளின் வரிசையில் சமூகம் வைத்துள்ளது. ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடமும், ஊழியர்கள் சக பெண் ஊழியர்களிடத்திலும் தவறாக நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கிடையில்தான் பெண்கள் உலாவுகிறார்கள். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சித்திரத்தை குழந்தையிலேயே உணர்த்தி விடுகிறோம். எழுத்தை பெண்கள் கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதனை ஆண்களின் மனதை அறுவை சிகிச்சை செய்யும் ஆயுதமாக மாற்ற முடியும்.

எல்லோரும் சென்று வருகிற கழிப்பிடத்தை ஏன் நாங்கள் மட்டும் அள்ள வேண்டும்? எல்லா சாதியிலும் ஏழை இருக்கும் போது ஏன் அருந்ததியர்கள் மட்டும் மலத்தை அள்ள வேண்டும்? என்று அந்தச் சமூகத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் கேட்கிறார்கள். எழுத்து அச்சமூகத்தை சேரும் போது அவர்கள் அமைப்பாக அணி திரண்டு கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் எழுத்துக்களை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

சமூக வெளியில் சாதி மறுப்பு, காதல் ஒப்புக் கொள்ளப்படுகிறது - நமது வீட்டில் நடக்காமல் அது அடுத்த வீட்டில் நடக்கும் வரை. எந்த எழுத்தும் நுழைய முடியாத கோட்டையாக குடும்பங்கள் உள்ளன. உணர்ச்சிப் பூர்வமாக உள்ள குடும்பங்கள் அறிவுப்பூர்வமாக இல்லை. வாசலுக்கு தண்ணி தெளித்து, கோலம் போட்டு, சமையல் செய்தால் அதை பார்த்து பிற ஆண்களும் செய்வார்கள் என்று நான் செய்கிறேன். மாறாக, சார் விதிவிலக்கா னவர் என்று  சொல்லிவிட்டு மற்ற ஆண்கள் சென்று விடுகிறார்கள்.

இந்த எழுத்து ஆதிக்க சாதிக்கும், ஆளும்வர்க்கத்திற்கும்,உலகமயத்திற்கும் பயன்படும் வரை அது வன்முறை ஆயுதமாக இருக்கும். உழைப்பாளிகள், பெண்கள், தலித் மக்கள், ஒடுக்கப்பட்டோருக்கு பயன்படும் போது அறுவை சிகிச்சை செய்யும் ஆயுதமாக மாறும்.

( சென்னை புத்தகக் காட்சியில்  எழுத்தும் ஆயுதம்/எழுதுகோலும் ஆயுதம் எனும் தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதிலிருந்து...)

No comments: