பிரளயன்
உலகில் உள்ள எல்லா நாடக மரபிலும் ஆடல் பாடல் இருந்தது. அது காலப் போக்கில் மாற்றம் கண்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் நாடகத்திலிருந்த ஆடல் பாடல்களும் மறைந்தன. ஆனால், தமிழ் நாடக மரபில் இருந்த ஆடல், பாடல்களை நீக்கி பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தையே கெடுத்துவிட்டார்; சிறுமைப்படுத்திவிட்டார் என்று சிலர் கூறுகின்றனர். நாடகத்திலிருந்து ஆடல், பாடல்களை நீக்கும் முயற்சி பம்மல் சம்பந்த முதலியார் செய்வதற்கு முன்பே தொடங்கிவிட்டது.
மௌன குரு எழுதிய ‘ஈழத்து தமிழ் நாடக மரபு’ என்ற நூலில், கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்கள் நாடகங்களாக உருவானபோது, புனிதர்களாக சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் ஆடிப்பாடி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந் தனர். ஆகையால் புனிதர்களாக உள்ள பாத்திரங்கள் ஆடல், பாடல்களை தவிர்க்க ஆரம்பித்தன என்று குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நாடகங்களை ‘வாசகப்பா’ என்றழைத்தனர். அது பின்னர் மருவி ‘வாசாப்பூ’ என்றானது. அதாவது சம்பந்த முத லியாருக்கு முன்பே தமிழ்நாடக மரபில் ஆடல் பாடல்களை தவிர்க்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. தொழில்முறை சாராத, கலை ஆர்வம் மிக்கவர்களைக் கொண்டு பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களை நடத்தி வந்தார்.
நகரமயமாக்கல் தொடங்கி நடுத்தர வர்க்கம் உருவான அந்த காலக்கட்டத்தில், அதன் பிரதிநிதியாக பம்மல் சம்பந்த முதலியார் இருந்தார். இதனால்தான் சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியர் என்றால், பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத்தின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.
இதே காலக்கட்டத்தில் கும்பகோணத்தில் பாலாமணி அம்மையார் முழுக்க முழுக்க பெண்களை வைத்தே நாடகம் நடத்தி வந்தார். பாலாமணியின் நாடகத்தை பார்க்க மாயவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் அணி அணியாக வருவார்கள். இதற்காகவே தனியாக ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலுக்கு ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்றே பெயரிட்டிருந்தனர். அத்தகைய பாலாமணி அம்மையார் பற்றி எந்தக் குறிப்பும் பெரிதாக இல்லை. அதனை சென்னை பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.
கூத்து, நாடகம், இசைப்பாடல், கணியன் கூத்து, சபா நாடகம் எல்லாம் சேர்ந்ததுதான் தமிழ் நாடக மரபு. 1977க்கு பிறகு தமிழில் நவீன நாடக முயற்சிகள் தொடங்கின. சென்னையில் கூத்துப்பட்டறை, பரீக்ஷா, சென்னை கலைக்குழு, மவுனக்குறம், மூன்றாம் அரங்கு இப்படி பல குழுக்கள் உருவாகின. பாண்டிச்சேரி, மதுரை என பல இடங்களில் நாடகக்குழுக்கள் இயங்கி வருகின்றன.
ஒரு சில நாடகக்குழுக்களை தவிர பெரும்பாலான குழுக்கள் நவீன நாடக முயற்சியை ஊக்குவிக்க பக்குவமான பார்வையாளர்கள் இல்லை என்று புலம்ப ஆரம்பித்தனர். பார்வையாளர்கள் இல்லை என்பதை பற்றி தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். புதுவை நாடக சங்கம் வெளியிட்ட மலரில் வந்துள்ள நேர் காணலில் கே.எஸ்.ராஜேந்திரன் குறிப்பிடுகையில், “ராமசாமி கந்தசாமியாக நடிக்க முத்துச்சாமி பார்க்கிறார். இதுதான் நாடகம். ஆனால், நவீன நாடகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அதுதான் காரணம்.
ஏற்கெனவே இருந்தது போதாததால், மதிப்பீடுகள் உயர்ந்ததால் நவீனத்துவம் வருகிறது. இதனை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என் பதைப் பரிசீலிக்க வேண்டும். கிராம மதிப்பீட்டிற்கும், நகர மதிப்பீட்டிற்கும் வேறுபாடு உள்ளது.1984ல் சென்னை கலைக்குழு தொடங்கிய போது அது மேடை நாடக குழுவாக்கத்தான் இருந்தது. அதன்பின்னர் திறந்தவெளி அரசியல் நாடகக் குழுவாக மாறியது. மேடைக்குழுவுக்கு ஒரு மதிப்பீடும், தெரு நாடகத்திற்கு ஒரு மதிப்பீடும் உள்ளது. எங்கள் குழுவின் நாடகத்தை புரியாமல் புறக்கணித்தால், அதனை தோல்வியாக கருதுகிறோம். எங்கள் நாடகத்தின் மீது மாறுபட்ட கருத்து இருக்கலாம் ஆனால் புறக் கணிக்க முடியாது.
2002ல் சென்னை கலைக்குழு உருவாக்கிய ‘உபகதை’ 24 முறையும், 2004ல் உருவான ‘பாரி படுகளம்’ 14 முறையும் அரங்கேற்றப்பட்டது. அண்மையில் உருவாக்கப்பட்ட ‘வஞ்சியர் காண்டம்’ 13 முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. மே மாதத்தில் 15 இடங்களில் அரங்கேற்றப்பட இருக்கிறது. நாடகத்தை தொழிலாக செய்ய முடியாது. அன்றைக்கு நாடகங்களுக்கு உயர்ந்த மதிப்பு மரியாதை, வரவேற்பு இருந்தது. ஏனெனில் அன்றைக்கு நாடகமே மையமாக இருந்தது. சினிமா இல்லை; ஒரே பொழுது போக்கு அதுதான். ஆனால் இன்றைக்கு நாடகம் கற்கை நெறியாக மட்டுமே உள்ளது. பண்பாடு குறித்து அரசுக்கு தெளிவான பார்வை இல்லை. அவ்வாறு இருந்தால் பண் பாட்டுத் துறையை சுற்றுலாத்துறை யின் கீழ் கொண்டு சென்றிருக்க மாட் டார்கள். நாடகம் சமூகத்தில் பெற்றி ருந்த இடத்தை மீட்டெடுக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட்டுகளாக அறியப் பட்டவர்களால்தான் 1942-43ல் இந் திய மக்கள் நாடக மன்றம் உருவானது. இவர்கள் மக்கள் பிரச்சனைகளை நாடகமாக மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார்கள். தேசிய நீரோட்டத்தில் இணைந்து இருக்க வேண்டும் என்ப தல்ல. இருக்கிற இடத்தில் என்ன செய்தோம் என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக, இரண்டாம் உலகப்போரின் போது வடகிழக்கு பகுதிகள், வங்காளம், ஒரிசா பகுதியில் விளைந்த தானியங்களை ஆங்கிலேயர்கள் முழுவதுமாக கொள்முதல் செய்து ராணுவ முகாம்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் வங்கப்பஞ்சம் உருவானது. அதனால் கிராமங்களில் இருந்தவர்கள் நகரங்களை நோக்கி வந்தனர். பட்டினியால் துடித்தனர். அதனை மையப்படுத்தி உருவான ‘நாவன்னா’ நாடகம் புகழ்பெற்றது. சத்தீஷ்கர் பழங்குடியின மக்கள் நடித்த ‘காசிராம்’ சர்வதேச அளவில் புகழ்பெற்றது. ஆகவே, நாடகம் மக்கள் கலையாக உள்ளது. ஆனாலும் நாடகத்தை தொழிலாக செய்ய முடியாது. அதில் ஆர்வம் உள்ளவர் கள் செய்யலாம். சமூகத்தை முன்னெடுத் துச் செல்ல, மாற்று நாடகம் உதவும்.
(சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறையில் பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளை சார் பில் ‘நாடகம் இன்று’ எனும் தலைப் பில் நாடக செயற்பாட்டாளர் பிரளயன் பேசியதிலிருந்து. )
No comments:
Post a Comment