பூட்டு உள்ள இடத்தில்தான் திருடர்களும்
அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் புத்தகங்களை வாங்குகிறார்கள். வாங்கிய புத்தகங்களைக் கொண்டு சென்று அழகாக அலமாரியில் அடுக்கி வைக்காமல் படிக்க வேண்டும். புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு கூடுதலாக சிந்திக்க வேண் டும். ஜப்பானில் உணவகங்களில் உள்ள மேசைகளில் ட்ராவ் இருக்கும். அதில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உணவு பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கும் சமயத்தில் அந்தப் புத்தகங்களை எடுத்துப் படிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள். சிறிது நேரத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்று அந்த நாட்டு அரசு சிந்திக்கிறது. இங்கு 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் குடித்து நேரத்தை வீணாக்கினாலும் அரசு கவலைப்படுவதே இல்லை. காலை 8 மணிக்கே சினிமா காட்டும் கிரிமினல் குற்றம் இங் குதான் நடைபெறுகிறது.
அமெரிக்காவின் உணவகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம். வீட்டிற்கு எடுத்துச் சென்றும் படிக்கலாம். படித்த பிறகு எடுத்து வந்து வைத்தால் போதும். மாறாக அந்த மக்கள் எடுத்த புத்தகத்துடன் சேர்த்து, தாங்கள் படிக்கும் புத்தகத்தையும் கொண்டு வந்து வைத்து விட்டுச் செல்கிறார்கள். அங்கு புத்தக திருட்டு நடைபெறுவது இல்லை. பூட்டும் சாவியும் எங்கு உள்ளதோ அங்குதான் திருடர்கள் உலாவருகிறார்கள்.
உலகில் குழந்தைகள் பிறக்கிறார்கள். இந்தியாவில்தான் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று பிறக்கிறார்கள். அப்படித்தான் குழந்தைகளை வளர்க்கிறோம். இல்லை யென்றால் பெண் குழந்தைக்கு எவர் சில்வர் பொம்மை கேஸ் அடுப்பும், ஆண் குழந்தைகக்கு பொம்மை துப்பாக்கியும் வாங்கிக் கொடுப்போமா? நரி எந்த ஊரில் உட்கார்ந்து தந்திரம் செய்தது? நம்மிடம் உள்ள இழிவுகளை விலங்குகளின் மீதேற்றி குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறார்கள்.
வீட்டுப்பாடம் கொடுத்து குழந்தைகளின் மாலை நேரத்தை களவாடும் ஆசிரியர்கள் சொர்க்கத்திற்கு (!) போக மாட்டார்கள். வானவில்லை பார்க்காத, மாலை நேரத்து வானத்தை பார்க்காத குழந்தைகள் எப்படி இருக்கும்? அதிகாலை முதல் இரவு வரை படிப்பு பயிற்சி என்று குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். பின்னிரவில் தூங்கி அதிகாலை கனவுக்குள் செல்லும் குழந்தையை கதவை தட்டி எழுப்பி விடுகிறோம். இப்படி வளர்க்கிற குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்குமா? குழந்தைகள் மீது இவ்வாறு நிகழ்த்தப்படும் வன்முறை பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு இணையானது.
ஒன்றோடு ஒன்று கலந்துபேசி, புதுப்புது வார்த்தைகளை கற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து, சமரசமாக, சமமாக பழக வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் என்ன நடக்கிறது? ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என்று பிரித்து வைக்கிறார்கள். ஏனெனில் மொழிக்கு கூட வர்ணாசிரமத்தை கற்றுக் கொடுத்த வர்கள் அல்லவா நாம்?
மனிதனுக்கு மனித நேயத்தை கற்றுக் கொடுப்பதுதான் இலக்கியம். அதிகாரத்தை, ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்வி கேட்பவன்தான் எழுத்தாளன், கலைஞன்.
( சென்னை புத்தகக் காட்சியில் எழுத்தும் ஆயுதம்/எழுதுகோலும் ஆயுதம் எனும் தலைப்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசியதிலிருந்து...)
No comments:
Post a Comment