மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும்
சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான விருது பெற்ற மலர்வதியின் தூப்புக்காரி நாவலையும், கவிஞர் ஆசு-வின் அம்மாக்கள் வாழ்ந்த தெரு என்ற சிறுகதைத் தொகுப்பையும் முன் வைத்து சென்னையில் ஆய்வரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்- கூட்டாஞ்சோறு அரங்கு இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது. தூப்புக்காரி குறித்த ஆய்வை முன்வைத்த இலக்கிய விமர்சகர் எஸ்.வி.வேணுகோபால், நுட்பமான உள்ளடுக்குகள் நிரம்பியதாக இது உள்ளது. குமரி பகுதியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட வேலை என்றில்லாமல் எல்லா வேலைக்கும் செல்வார்கள். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களும் துப்புரவு வேலைக்கு செல்வார்கள் என்றால் சாதி ஆதிக்க மனோநிலை எங்கிருந்து வருகிறது? திருமண உறவின் போதுதான் என்பதை நாவல் பேசுகிறது. மீண்டும் மீண்டும் அழுக்கோடும் மலத்தோடும் வாழும் தூப்புக்காரி வாழ்க்கையில் குளிப்பதும், சுத்தமாக இருப்பதும் எப்படி சாத்தியம்? என்று கேள்வி எழுப்பினார்.
குடும்ப வறுமை, கடன் தொல்லையில் காதலன் வீட்டிலேயே எச்சில் இலை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் பூவரசி; தாய் மருத்துவமனையில் இருக்கும்போது காதலின் உச்சத்தில் உணர்ச்சியோடு, முழு உள்ளத்தோடு மனோவுடன் ஒன்று சேர்கிறாள். ஆனால் பின்னால் அவனால் நிராகரிக்கப்படும் போது அவள் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? எண்ணிப பார்க்கும் போது மனம்பதைக்கிறது.
பூவரசி மீது காதல் கொண்டிருக்கும் தூப்புக்கார தொழிலாளி மாரி, தனது சாதியின் காரணமாக அவளிடம் அதனை வெளிப்படுத்தாமல் இருக்கிறான். இந்தச் சூழலில் மனோ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனால் உருவான குழந்தையைச் சுமந்து நிற்கும் பூவரசியிடம், நீ விரும்பினால் குழந்தைக்கு நான் அப்பாவாக இருக்கிறேன். உனது விருப்பமின்றி உன்னை தொடமாட்டேன் என்கிறான் மாரி. அழுக்கு உடலோடு இருக்கும் வெள்ளை மனம் படைத்த வன் மாரி. இதுதான் எளிய மனிதர்களின் உயர்ந்த வாழக்கை என்றார் வேணுகோபால்.
ஆசு-வின் அம்மாக்கள் வாழுந்த தெரு சிறுகதை தொகுப்பை ஆய்வு செய்த சமூக செயற்பாட்டாளர் ஜி.செல்வா, நகரமயமாதலை பெருமையாகப் பேசும் ஆட்சியாளர்கள், கிராமப்புற விவசாயம் அழிவதை பேசுவதில்லை. அதனை ஒரு சிறுகதை பேசுகிறது. கவித்துவமான மொழி நடையால் வசீகரிக்கும் ஆசு, மலைக்கும் மனது இருக்கிறது என்கிறார். மலையையும், காட்டையும் தாயாக பாவிக்கிறார். ஒரு கதையில் இரண்டு சிறுவர்கள் மீன் பிடிப்பதை வைத்து மனித நேயத்தின் உச்சத்தை காட்டுகிறார். இந்த கதை தொகுப்பு நம்பிக்கை விதை வீசுவதாக உள்ளது என்று கூறினார்.
நாவலாசிரியர் மலர்வதி ஏற்புரையற்றுகையில், எனது நாவல் உயிருள்ள இலக்கியம்; கற்பனை அல்ல. இயற்கையை நேசித்து, மனிதர்களை வாசித்து, தோழிகளின் வலி உஷ்ணத்தை உணர்ந்து எழுதிய நாவல் தூப்புக்காரி. இது என்னுடைய வாழ்க்கை அல்ல. பள்ளியில் தூப்புக்காரியாக எனது அம்மா இருந்த போது உருவான ரணம். எதார்த்த வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அசிங்கம், அருவருப்பு என்று பலர் ஓடும் போது அதுவே சிலருக்கு வாழ்க்கையாக உள்ளது. நமது அழுக்கை மற்றொரு இனம் சுத்தம் செய்வதை உடைக்க வேண்டும்.
எனது நாவலைப் படித்து விட்டு கோவையிலிருந்து ஒரு அம்மா பேசினார், கதையில் பிறக்கும் குழந்தையும் தூப்புக்காரியாகிவிடுமா என்று கேட்டார். அதைத் தடுக்கத்தான் நான் இருக்கிறோமே என்று நான் பதில் சொன்னேன். அந்த நம்பிக்கை தான் எனது எழுத்துக்களுக்கு அடிப்படை என்றார். வரதட்சனை கொடுப்பதும், வாங்குவதும் சமூக கௌரவமாக பார்க்கப்படுகிறது. சில மூடநம்பிக்கைகளை மாற்ற வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்தில் எனதுபடைப்புகள் அமையும் என்றும் அவர் கூறினார்.
கவிஞர் ஆசு ஏற்புரையாற்றும் போது படைப்புகளாக உருவாக்கிய போது இருந்த மனநிலையை விட விமர்சனங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன என்றார். நிகழ்ச்சிக்கு தமுஎகச தென்சென்னை மாவட்டத் தலைவர் சைதை ஜெ தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு வரவேற்க துணைச் செயலாளர் சிவசெந்தில் நாதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment