Pages

Monday, October 8, 2012

அரசுத்துறை செயலின்மையால் பழங்குடியினர் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு





சென்னை, நந்தனம் சேமியர்ஸ் சாலையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 கிரவுண்ட் 2234சதுர அடி பரப்பளவு கொண்ட ( மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டம், சர்வே எண் 3888/4ல், பிளாக் எண் 77, விஸ்தீரணம் 4.1324சதுர அடி பரப்பளவு) இந்தப் பள்ளியின் பெரும் பகுதி இப்போது சில சுயநலமிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

1930ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வந்துள்ள இப்பள்ளியை, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக கூறி  1960ல் கொடுங்கையூருக்கு மாற்றினர். அதேசமயம் இந்த இடத்தில் மாணவர் விடுதி ஒன்று தொடங்கப்பட்டது. அது 1980 வரையில் இங்கு செயல்பட்டது.

கொடுங்கையூருக்கு மாற்றப்பட்ட பள்ளி மீண்டும் 1980ல் மீண்டும் இதே இடத்திற்கு (நந்தனம்) கொண்டு வரப்பட்டது. தற்போது மத்திய அரசின் சிறப்பு உதவித்தொகை மூலம் இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி அமைந்துள்ள இடம் ஏ.வி.ராகவராவ் மற்றும் ஒய்.வெங்கன்னா சவுத்திரி ஆகியோர் பெயரில் உள்ளது. இந்த இடத்தை அவர்கள இருவரும் பித்தாபுரம் ராஜா என்பவரிடமிருந்து 1960ம் ஆண்டு வாங்கினர்.

அதன்பின்னர் இடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு பள்ளி நடத்த தானமாகக் கொடுத்தனர். ஆனால் இடத்தை இன்னும்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனது பெயருக்கு மாற்றிக் கொள்ளமல் இருக்கிறது. இதை மோப்பம் பிடித்து அறிந்த சிலர் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த இடம் இத்துறைக்கே சொந்தமானது என்பதற்கு ஆதாரமாக பள்ளியின் பெயரிலேயே மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. பள்ளியின் பராமரிப்பு செலவுகள், அடிப்படை வசதிகள் அனைத்தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் 62 மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களில் 56 பேர் பள்ளியிலேயே தங்கிப் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் மாணவர்கள் விளையாடும் இடத்தை (சுமார் 3 கிரவுண்ட்) தனியார் ஒருவர் வளைத்து தடுப்புச் சுவர் அமைத்துள்ளார். சுமார் 1 கிரவுண்ட் அளவுக்கு பள்ளியின் மற்றொரு பகுதியை இன்னொருவர் ஆக்கிரமித்து எல்லைக்கல் போட்டுள்ளார்.

இந்தச்சூழலில் பள்ளி அமைந்துள்ள மொத்த இடத்திற்கும் 2006ல் எல். இராஜலட்சுமி என்பவர் பட்டா கோரி  வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதனைப் பரிசீலித்த அதிகாரிகள் இந்த இடத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருவதாலும், ராஜலட்சுமியின் அனுபோகத்தில் இல்லை என்பதாலும் பட்டா வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, எம்.கொண்டையா என்பவர், 2013 மே மாதம் வரை அந்த இடத்திற்கான உரிமையைத் தனக்கு இராஜலட்சுமி பவர் பத்திரம் எழுதிக் கொடுத்து ஒப்படைத்துள்ளாதாகக் கூறி பட்டா கேட்டு விண்ணப்பித்தார். அதற்குச் சான்றாக தில்லியில் பதிவு செய்யப்பட்டதாக ஒரு ஆவணத்தைத் தாக்கல் செய்தார். ஆனால், அரசு அதிகாரிகளின் ஆய்வில், 2012 ஆகஸ்ட் மாதம் வரை கொண்டையா பவர் பத்திரம் பெற்றதற்கான சான்றிதழ் எதுவும் இல்லை என தெரியவந்தது.

இந்த விவரங்களை அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், செயலாளர் க. சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் த. நீதிராஜன், சென்னை மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் எஸ்.கே. சிவா ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.

நகரப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அபரிமிதமாக அதிகரித்து விட்டது. இதனால் போலி ஆவணங்கள், தவறான தகவல்கள் கொடுத்து நிலம் வாங்குவது, விற்பது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. அதைப் போல இந்த பள்ளி விவகாரத்தில் நடக்காமல் இருக்க, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியாக அந்த இடத்தை தனது பெயரில் மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், என்று வலியுறுத்துகிறார் சாமுவேல்ராஜ்.

அந்த பள்ளியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசுத்துறையின் கவனக்குறைவால், செயல்பாடின்மையால் இப்படிப்பட்ட சுயநலமிகள் பழங்குடி சமூக மாணவர்களுக்கான பள்ளி நிலத்தை விழுங்க முயல்கின்றனர். இதை அறிந்த பிறகும் சம்பந்தப்பட்ட துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்?

Sunday, July 29, 2012

வேளச்சேரி தொகுதி : புதிதாக 182 ரேசன் கடை தேவை


வேளச்சேரி தொகுதி : புதிதாக 182 ரேசன் கடை தேவை
பாதி குடும்பங்களுக்கு மறுக்கப்படும் மண்ணெண்ணை

முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள் என எல்லோரும தட்டுப்பாடின்றி அனைத்து மக்களுக்கும் ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைக்கிறது என்றுதான் கூறுகிறார்கள். உண்மை நிலை என்னவோ அதற்கு மாறாகவே இருக்கிறது. வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 50 விழுக்காடு குடும்ப அட்டைகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையே மண்ணெண்ணை வழங்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? தமிழக அரசு ரேசன் கடைகளுக்கு தேவையான மண்ணெண்ணை ஒதுக்காததே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உணவு பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் இயக்கம் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கட்சி அந்தக் காரணத்தைக் கண்டறிந்துள்ளது. வேளச்சேரி தொகுதியில் உள்ள 55 கடைகளில் 35 கடைகளில் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

வேளச்சேரி தொகுதியில் 55 ரேசன் கடைகளில் ஒரு லட்சத்து 90ஆயிரத்து 271 குடும்ப அட்டைகள் உள்ளன. சராசரியாக ஒரு கடைக்கு 3,500 குடும்ப அட்டைகள் உள்ளன. கடைக்கு 4 ஊழியர் இருந்த நிலை மாறி தற்போது கடைக்கு ஒரு ஊழியரே உள்ளார். இதனால் பொதுமக்கள் பொருட்களை பெற்றுச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரு கடைக்கு ஒரு ஊழியர் இருப்பதால், உதவிக்கு ஒருவரை அவரே நியமித்துக் கொள்கிறார். அவருக்கு ஊதியம் தர வேண்டி உள்ளது.

ரேசன் கடைகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை, பாமாயில், பருப்பு உள்ளிட்டவை ஒதுக்கப்படுவதில்லை. தேவையில் 60-80விழுக்காடு வரையே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு கடைக்கும் மண்ணெண்ணை 50 விழுக்காடு அளவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையே மண்ணெண்ணை கிடைக்கிறது. பொருட்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாதத்தின் முதல் வாரத்தில் செல்கிறவர்களுக்கு மட்டுமே அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன.

உதாரணத்திற்கு தரமணி ஐசிஓ-15 கடையில் 2,642 குடும்ப அட்டைக்கு 5,300 லிட்டர் மண்ணெண்ணை ஒதுக்கப்படுகிறது. ஐசிஓ-16 என்ற கடையில் 1,621 அட்டைக்கு 3,100லிட்டர் மண்ணெண்ணையே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அபராதம், எடை குறைவாக வழங்குதல், குறைவான பொருட்களை ஒதுக்கீடு செய்தல், ஏற்றுக் கூலி, இறக்குகூலி என ஊழியர்கள் செலவிட வேண்டி இருப்பதால், மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்கின்றனர். பருப்பு வழங்காமலே வழங்கியதாக அட்டையில் பதிவிட்டு முறைகேடு செய்கின்றனர்.

தரமணியில் உள்ள ஒரே வளாகத்தில் இரண்டு கடைகள் உள்ளன. அங்கு 4,263 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த கடைகளை நான்காக பிரித்து புதிய கடை உருவாக்க புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு 6 மாதமாகியும் திறக்கப்படாமல் உள்ளது. மற்றொரு கடை 6 அடி பள்ளத்தில் உள்ளது. அந்த கடைக்கு செல்கிற மக்கள் முட்டிப்போட்டுக் கொண்டுதான் பொருட்களை வாங்க வேண்டும். எனவே இந்தக் கடைக்கு புதிய கட்டிடம் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலை குறித்து  பேசிய சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி வேளச்சேரி பகுதியில் மக்கள் அடர்வு அதிகமாக உள்ளது. இதனால் ஒரு ரேசன் கடையில் 4,000 கார்டுகளுக்கும் அதிகமாக உள்ளன. புதிதாக ரேசன் கடைகள் அமைக்க தேவை இருந்தும் அரசு அதனை செய்ய மறுக்கிறது. 800 குடும்ப அட்டைக்கு ஒரு கடை என்ற அரசின் அறிவிப்புப்படி 237 கடைகள் இருக்க வேண்டும். ஆனால் 55 கடைகள்தான் உள்ளன. எனவே, அரசு மக்களின் சிரமத்தை உணர்ந்து புதிய கடைகளை அமைக்க வேண்டும் என்கிறார்.

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  இலவச அரிசி தரமற்றதாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அளவு குறைவாகவும் வழங்கப்படுகிறது அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மின்தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தி விடுகின்றனர். அவ்வாறு செய்வதை கைவிட வேண்டும். பெசன்ட்நகர் ஆல்காட் குப்பத்தில் உள்ள மக்கள் திருவான்மியூர் வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் நிலையை மாற்றி, ஆல்காட் குப்பத்திலேயே ரேசன் கடை அமைக்க வேண்டும். என்றும் அவர் கூறுகிறார்.

சோழிங்கநல்லூர் தொகுதி: மண்ணெண்ணைக்கு அலைமோதும் மக்கள் கூட்டம்




நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணை தாராளமாகக் கிடைக்கிறது என அரசு வட்டாரங்கள்  சொல்லிக் கொள்கின்றன. சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவி வருகிறது என்பதை ஒரு ஆய்வு அம்பலபடுத்துகிறது.

தகவல் தொழில்நுட்ப பூங்கா எனப்படும் சோழிங்கநல்லூர் தொகுதியில் ரேசன் கடைகளின் நிலைமை குறித்து மார்கசிஸ்ட் கட்சி ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்விலிருந்து தெரியவரும் உண்மைகள் இவை:

சென்னை மாநகராட்சியின் 20 வார்டுகள், 7ஊராட்சிகளை உள்ளடக்கிய சோழிங்கநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களை உள்ளடக்கிய 108 கடைகள் உள்ளன. இவற்றில் 45 கடைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த தொகுதி முழுவதும் 28 விழுக்காடு அளவுக்கு மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழக அரசின் அறிவிப்புப்படி 800 கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை வீதம் 163 கடைகள் இருக்க வேண்டும். ஆனால், 108 கடைகளே உள்ளன. இதனால் ரேசன் கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் அமைக்க தெருத்தெருவாக அலைந்து இடம் கண்டுபிடிக்கும் அதிகாரிகள், மக்கள் விரும்பும் இடங்களில் ரேசன் கடை அமைக்க இடம் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். பெருங்குடி, கண்ணகி நகர் மக்களில் பெரும் பகுதியினர் மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர்.

அப்பகுதிகளில் 7 ரேசன் கடைகள் உள்ளன.  இந்த கடைகளுக்கு தேவையான மண்ணெண்ணையில் 72விழுக்காடு அளவிற்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் 28விழுக்காடு கார்டுகளுக்கு மண்ணெண்ணை கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட இதே நிலைதான் அனைத்து பகுதிகளிலும்.
தொகுதியில் தேவையான எண்ணிக்கையில் ரேசன் கடைகள் இல்லாததும், தற்போதுள்ள கடைகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பதன் காரணமாகும்.

துரைப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்டு தொகுதி முழுவதுமே ரேசன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை, கிடைத்தாலும் எடை குறைவாக உள்ளது என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் டி.ராமன், தமிழக அரசு ரேசன் கடைகளில் உள்ள கார்டுகளுக்கு தேவையான அளவு மண்ணெண்ணையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். எடை குறைவாக ரேசன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் ஊழியர்களும் எடை குறைவாகவே பொருட்களை வழங்குகின்றனர். ஊழியர் பற்றாக்குறையையும் நிலவுகிறது. இவற்றை சரி செய்ய வேண்டும். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிதாக 55 ரேசன் கடைகளை திறக்க வேண்டும், என்றார்.

ஒக்கியம் பேட்டையில் 1200 கார்டுகள் உள்ளன. அங்குள்ள மக்கள் ராஜீவ்காந்தி சாலையை கடந்து சென்று பொருட்களை வாங்கி வர வேண்டி உள்ளது. எனவே, மூட்டைக்காரன் சாவடியில் (நேருநகர்) புதிய கடை அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் இரண்டு கடைகள் அருகருகே உள்ளன. அவற்றை கிழக்கு பகுதிக்கு ஒன்று, மேற்கு பகுதிக்கு ஒன்று என பிரித்து அமைக்க வேண்டும், என்றார் அவர்.

பெருங்குடியில் உள்ள 6 கடைகளில் 5 கடைகளை கல்லுகுட்டை பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த கடைகளுக்கு செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே, திருவள்ளுவர் நகரில் புதிதாக ஒரு கடை அமைக்க வேண்டும். மேடவாக்கம் ஊராட்சி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் 15 கடைகள் உள்ளன. இந்தப்பகுதியில் உடனடியாக 800 கார்டுக்கு ஒரு ரேசன் கடை அமைக்க வேண்டும் என்றும் ராமன் வலியுறுத்துகிறார்.

4000 பேருக்கு ரேசன் கார்டு இல்லை

சென்னை நகர குடிசை பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கண்ணகிநகரில் குடியமர்த்தப்படுகின்றனர். தற்போது கண்ணகி நகரில் 17 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் 7 உள்ள கடைகளில்  13,000 குடும்ப அட்டைகள் உள்ளன. அதேநேரத்தில், 4,000 குடும்பங்கன் ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தும் ஏனோ அதிகாரிகள் இன்னமும் வழங்காமல் உள்ளனர்.

அதிகமாய் கொடுத்தால் அபராதம்



மயிலாப்பூர் தொகுதியில் டியுசிஎஸ், அமுதம், மந்தவெளி பாக்கம் கூட்டுறவு பண்டகசாலை, கிழக்கு அபிராமபுரம் மகளிர் நுகர்வோர் பண்டகசாலை, வித்யாபாரதி மகளிர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, பட்டினப்பாக்கம் கூட்டுறவு பண்டகசாலை ஆகியவற்றின் கீழ் 52 ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் செயல்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி குழுக்கள் ஆய்வு செய்தன. அது பல அதிர்ச்சித் தகவல்களைத் தருகிறது.

ரேசன் கடைகளுக்கு தேவையான அரிசி முழுமையாக ஒதுக்கப்படுகிறது. அதேநேரத்தில் 75 விழுக்காடு அட்டைகளுக்கு மேல் இலவச அரிசி விநியோகம் செய்தால், கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அனைத்து ரேசன் கடைகளிலும் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. சித்திரைக் குளம் அருகே நூறாண்டு பழமையான ஒரு கட்டிடத்தில் 5 ரேசன் கடைகள் செயல்படுகின்றன. 6,100 அட்டைகள் உள்ள 5 கடைகளுக்கும் சேர்த்து மொத்தமே 6 ஊழியர்கள்தான் உள்ளனர். இந்தக் கடைக்கு வந்து செல்ல ஒரேஒரு வழிதான் உள்ளது. மயிலாப்பூர் குளம் அருகே டாஸ்மாக் கடைக்கு பக்கத்திலேயே ரேசன் கடை உள்ளது. இதனால் ரேசன் கடைக்கு செல்ல பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்.

ரேசன் கடைகளுக்கு வருகிற பொருட்களின் அளவு குறைவாக உள்ளது. அது குறித்து ஊழியர்கள் கேள்வி எழுப்பினால் பொருட்களை இறக்காமலே சென்று விடுகின்றனர். இதனால் வேறுவழியின்றி ஊழியர்கள் எடை சரியாக இருப்பதாக கையெழுத்திட்டு பொருட்களை இறக்கி வைத்துக் கொள்கின்றனர். அச்சமயங்களில் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், இருப்பு குறைவாக இருந்தால் 1 கிலோ அரிசிக்கு 23.45 ரூபாய், சர்க்கரைக்கு 27 ரூபாய், கோதுமைக்கு 15 ரூபாய் என ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள், என்று ஒரு ஊழியர் குமுறலுடன் கூறியுள்ளார்.

பாமாயில் 10 பாக்கெட்டுகள் இருக்க வேண்டிய ஒரு பெட்டியில் 9 பாக்கெட்டுகள்தான் இருக்கின்றன. அதனை எதிர்த்து ஊழியர்கள் கேள்வி கேட்க முடியாது. பருப்பு போன்ற பொருட்களையும் தேவையான அளவுக்கு ஒதுக்கீடு செய்வதில்லை. கடைகளுக்குத் தேவையான மண்ணெண்ணை ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு கடைக்கும் 30விழுக்காடு அளவு குறைவாகவே வழங்கப்படுகிறது. உதாரணமாக காரணீஸ்வரர் கோயில் பகோடா தெருவில் உள்ள ரேசன் கடைக்கு 4,450லிட்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் 3,300லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 1,150லிட்டர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஊழியர்கள் வேறுவழியின்றி சுழற்சி முறையில் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணை வழங்குகின்றனர்.

பில், எடை போடுவதற்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழுதடைந்த அந்த மின்னணு எந்திரங்களை பழுதுபார்க்காமல், மாற்றாமல் உள்ளனர். இதனால் எடை போடும் எந்திரங்களில் எடைக் குறைவு ஏற்படுகிறது; பில் எந்திரங்களில் பதியப்படும் தகவல்களுக்கு மாறான தகவல்கள் பதிவாகின்றன. தவறான பதிவு ஏற்பட்டால் அதற்கும் ஊழியர்களுக்கே அபராதம் விதிக்கப்படுகிறது. ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுகிறது.

கடையில் எந்த பொருளையும் வாங்க நிர்ப்பந்தம் இல்லை என்று அறிவித்துவிட்டு, அனைத்து பொருட்களையும் விற்க வேண்டும் என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் ஊழியர்கள் வேறுவழியின்றி அனைத்துப் பொருட்களையும் வாங்க வேண்டுமென்று மக்களை நிர்பந்திக்கின்றனர். இது குறித்து நுகர்வோர் புகார் செய்தால், கடை ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

லாரியில் வரும் பொருட்களை இறக்கி வைக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு கடையிலிருந்தும் 250 ரூபாய் தர வேண்டும்; மண்ணெண்ணை ஒரு பேரலை இறக்க 60 ரூபாய் தர வேண்டும். கோணிகளை ஏற்றிச் செல்ல ஒரு பண்டலுக்கு 20 ரூபாய் தர வேண்டும் என்று ஊழியர்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் கடையில் கூடுதலாக ஒரு ஊழியரை நியமித்துக் கொண்டால் அவருக்கு கூலி வழங்க வேண்டும். இப்படியாக மாதத்திற்கு ஒவ்வொரு கடை ஊழியர் தன் கையிலிருந்து 5ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டி உள்ளது.

கூட்டுறவு அமைப்புகளில் இயங்கும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே ஊதியத்தில் பெருத்த முரண்பாடு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஊழியர்கள் தவறு செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலை பகுதிச் செயலாளர் எஸ்.குமார் கூறுகையில், மயிலாப்பூர் தொகுதியில் 52 கடைகளில் 53,505 கார்டுகள் உள்ளன. அரசு கணக்குபடி 800குடும்ப அட்டைக்கு ஒரு கடை என்றால் கூட 67 கடைகள் இருக்க வேண்டும். ஆனால் 52 கடைகள்தான் உள்ளன. எனவே, புதிதாக 15 கடைகளை திறக்க வேண்டும். குறிப்பாக 121வது வட்டம் ரோட்டரி நகர் பகுத மக்கள் சுமார் 2கிமீ தூரம் சென்று விவேகானந்தா கல்லூரி அருகே உள்ள ரேசன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். எனவே, ரோட்டரி நகர் பகுதியிலேயே ஒரு ரேசன் கடை திறக்க வேண்டும் என்றார்.

ரேசன் கடைகளுக்குத் தேவையான அளவு பொருட்களை வழங்காமல், வழங்கியதாகக் கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. அத்தகைய பொருட்கள் கடத்தப்படுகின்றன. கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது. போலி என்று தவறாகப் புரிந்து கொண்டு முகவரி மாறிய குடும்ப அட்டைகளை ரத்து செய்யக்கூடாது. பாக்கெட்டில் பாமாயில் வழங்குவது போல் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும். கடைகளுக்கு தேவையான ஊழியர்களை நியமிப்பதோடு, அவர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று தென்சென்னை மாவட்டத்தில் 15 தொகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஜூலை 30 அன்று மண்டல உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.