Pages

Sunday, July 29, 2012

அதிகமாய் கொடுத்தால் அபராதம்



மயிலாப்பூர் தொகுதியில் டியுசிஎஸ், அமுதம், மந்தவெளி பாக்கம் கூட்டுறவு பண்டகசாலை, கிழக்கு அபிராமபுரம் மகளிர் நுகர்வோர் பண்டகசாலை, வித்யாபாரதி மகளிர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, பட்டினப்பாக்கம் கூட்டுறவு பண்டகசாலை ஆகியவற்றின் கீழ் 52 ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் செயல்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி குழுக்கள் ஆய்வு செய்தன. அது பல அதிர்ச்சித் தகவல்களைத் தருகிறது.

ரேசன் கடைகளுக்கு தேவையான அரிசி முழுமையாக ஒதுக்கப்படுகிறது. அதேநேரத்தில் 75 விழுக்காடு அட்டைகளுக்கு மேல் இலவச அரிசி விநியோகம் செய்தால், கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அனைத்து ரேசன் கடைகளிலும் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. சித்திரைக் குளம் அருகே நூறாண்டு பழமையான ஒரு கட்டிடத்தில் 5 ரேசன் கடைகள் செயல்படுகின்றன. 6,100 அட்டைகள் உள்ள 5 கடைகளுக்கும் சேர்த்து மொத்தமே 6 ஊழியர்கள்தான் உள்ளனர். இந்தக் கடைக்கு வந்து செல்ல ஒரேஒரு வழிதான் உள்ளது. மயிலாப்பூர் குளம் அருகே டாஸ்மாக் கடைக்கு பக்கத்திலேயே ரேசன் கடை உள்ளது. இதனால் ரேசன் கடைக்கு செல்ல பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்.

ரேசன் கடைகளுக்கு வருகிற பொருட்களின் அளவு குறைவாக உள்ளது. அது குறித்து ஊழியர்கள் கேள்வி எழுப்பினால் பொருட்களை இறக்காமலே சென்று விடுகின்றனர். இதனால் வேறுவழியின்றி ஊழியர்கள் எடை சரியாக இருப்பதாக கையெழுத்திட்டு பொருட்களை இறக்கி வைத்துக் கொள்கின்றனர். அச்சமயங்களில் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், இருப்பு குறைவாக இருந்தால் 1 கிலோ அரிசிக்கு 23.45 ரூபாய், சர்க்கரைக்கு 27 ரூபாய், கோதுமைக்கு 15 ரூபாய் என ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள், என்று ஒரு ஊழியர் குமுறலுடன் கூறியுள்ளார்.

பாமாயில் 10 பாக்கெட்டுகள் இருக்க வேண்டிய ஒரு பெட்டியில் 9 பாக்கெட்டுகள்தான் இருக்கின்றன. அதனை எதிர்த்து ஊழியர்கள் கேள்வி கேட்க முடியாது. பருப்பு போன்ற பொருட்களையும் தேவையான அளவுக்கு ஒதுக்கீடு செய்வதில்லை. கடைகளுக்குத் தேவையான மண்ணெண்ணை ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு கடைக்கும் 30விழுக்காடு அளவு குறைவாகவே வழங்கப்படுகிறது. உதாரணமாக காரணீஸ்வரர் கோயில் பகோடா தெருவில் உள்ள ரேசன் கடைக்கு 4,450லிட்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் 3,300லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 1,150லிட்டர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஊழியர்கள் வேறுவழியின்றி சுழற்சி முறையில் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணை வழங்குகின்றனர்.

பில், எடை போடுவதற்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழுதடைந்த அந்த மின்னணு எந்திரங்களை பழுதுபார்க்காமல், மாற்றாமல் உள்ளனர். இதனால் எடை போடும் எந்திரங்களில் எடைக் குறைவு ஏற்படுகிறது; பில் எந்திரங்களில் பதியப்படும் தகவல்களுக்கு மாறான தகவல்கள் பதிவாகின்றன. தவறான பதிவு ஏற்பட்டால் அதற்கும் ஊழியர்களுக்கே அபராதம் விதிக்கப்படுகிறது. ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுகிறது.

கடையில் எந்த பொருளையும் வாங்க நிர்ப்பந்தம் இல்லை என்று அறிவித்துவிட்டு, அனைத்து பொருட்களையும் விற்க வேண்டும் என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் ஊழியர்கள் வேறுவழியின்றி அனைத்துப் பொருட்களையும் வாங்க வேண்டுமென்று மக்களை நிர்பந்திக்கின்றனர். இது குறித்து நுகர்வோர் புகார் செய்தால், கடை ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

லாரியில் வரும் பொருட்களை இறக்கி வைக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு கடையிலிருந்தும் 250 ரூபாய் தர வேண்டும்; மண்ணெண்ணை ஒரு பேரலை இறக்க 60 ரூபாய் தர வேண்டும். கோணிகளை ஏற்றிச் செல்ல ஒரு பண்டலுக்கு 20 ரூபாய் தர வேண்டும் என்று ஊழியர்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் கடையில் கூடுதலாக ஒரு ஊழியரை நியமித்துக் கொண்டால் அவருக்கு கூலி வழங்க வேண்டும். இப்படியாக மாதத்திற்கு ஒவ்வொரு கடை ஊழியர் தன் கையிலிருந்து 5ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டி உள்ளது.

கூட்டுறவு அமைப்புகளில் இயங்கும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே ஊதியத்தில் பெருத்த முரண்பாடு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஊழியர்கள் தவறு செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலை பகுதிச் செயலாளர் எஸ்.குமார் கூறுகையில், மயிலாப்பூர் தொகுதியில் 52 கடைகளில் 53,505 கார்டுகள் உள்ளன. அரசு கணக்குபடி 800குடும்ப அட்டைக்கு ஒரு கடை என்றால் கூட 67 கடைகள் இருக்க வேண்டும். ஆனால் 52 கடைகள்தான் உள்ளன. எனவே, புதிதாக 15 கடைகளை திறக்க வேண்டும். குறிப்பாக 121வது வட்டம் ரோட்டரி நகர் பகுத மக்கள் சுமார் 2கிமீ தூரம் சென்று விவேகானந்தா கல்லூரி அருகே உள்ள ரேசன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். எனவே, ரோட்டரி நகர் பகுதியிலேயே ஒரு ரேசன் கடை திறக்க வேண்டும் என்றார்.

ரேசன் கடைகளுக்குத் தேவையான அளவு பொருட்களை வழங்காமல், வழங்கியதாகக் கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. அத்தகைய பொருட்கள் கடத்தப்படுகின்றன. கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது. போலி என்று தவறாகப் புரிந்து கொண்டு முகவரி மாறிய குடும்ப அட்டைகளை ரத்து செய்யக்கூடாது. பாக்கெட்டில் பாமாயில் வழங்குவது போல் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும். கடைகளுக்கு தேவையான ஊழியர்களை நியமிப்பதோடு, அவர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று தென்சென்னை மாவட்டத்தில் 15 தொகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஜூலை 30 அன்று மண்டல உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

No comments: