Monday, October 8, 2012
அரசுத்துறை செயலின்மையால் பழங்குடியினர் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு
சென்னை, நந்தனம் சேமியர்ஸ் சாலையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 கிரவுண்ட் 2234சதுர அடி பரப்பளவு கொண்ட ( மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டம், சர்வே எண் 3888/4ல், பிளாக் எண் 77, விஸ்தீரணம் 4.1324சதுர அடி பரப்பளவு) இந்தப் பள்ளியின் பெரும் பகுதி இப்போது சில சுயநலமிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
1930ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வந்துள்ள இப்பள்ளியை, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக கூறி 1960ல் கொடுங்கையூருக்கு மாற்றினர். அதேசமயம் இந்த இடத்தில் மாணவர் விடுதி ஒன்று தொடங்கப்பட்டது. அது 1980 வரையில் இங்கு செயல்பட்டது.
கொடுங்கையூருக்கு மாற்றப்பட்ட பள்ளி மீண்டும் 1980ல் மீண்டும் இதே இடத்திற்கு (நந்தனம்) கொண்டு வரப்பட்டது. தற்போது மத்திய அரசின் சிறப்பு உதவித்தொகை மூலம் இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி அமைந்துள்ள இடம் ஏ.வி.ராகவராவ் மற்றும் ஒய்.வெங்கன்னா சவுத்திரி ஆகியோர் பெயரில் உள்ளது. இந்த இடத்தை அவர்கள இருவரும் பித்தாபுரம் ராஜா என்பவரிடமிருந்து 1960ம் ஆண்டு வாங்கினர்.
அதன்பின்னர் இடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு பள்ளி நடத்த தானமாகக் கொடுத்தனர். ஆனால் இடத்தை இன்னும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனது பெயருக்கு மாற்றிக் கொள்ளமல் இருக்கிறது. இதை மோப்பம் பிடித்து அறிந்த சிலர் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த இடம் இத்துறைக்கே சொந்தமானது என்பதற்கு ஆதாரமாக பள்ளியின் பெயரிலேயே மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. பள்ளியின் பராமரிப்பு செலவுகள், அடிப்படை வசதிகள் அனைத்தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 62 மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களில் 56 பேர் பள்ளியிலேயே தங்கிப் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் மாணவர்கள் விளையாடும் இடத்தை (சுமார் 3 கிரவுண்ட்) தனியார் ஒருவர் வளைத்து தடுப்புச் சுவர் அமைத்துள்ளார். சுமார் 1 கிரவுண்ட் அளவுக்கு பள்ளியின் மற்றொரு பகுதியை இன்னொருவர் ஆக்கிரமித்து எல்லைக்கல் போட்டுள்ளார்.
இந்தச்சூழலில் பள்ளி அமைந்துள்ள மொத்த இடத்திற்கும் 2006ல் எல். இராஜலட்சுமி என்பவர் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதனைப் பரிசீலித்த அதிகாரிகள் இந்த இடத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருவதாலும், ராஜலட்சுமியின் அனுபோகத்தில் இல்லை என்பதாலும் பட்டா வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, எம்.கொண்டையா என்பவர், 2013 மே மாதம் வரை அந்த இடத்திற்கான உரிமையைத் தனக்கு இராஜலட்சுமி பவர் பத்திரம் எழுதிக் கொடுத்து ஒப்படைத்துள்ளாதாகக் கூறி பட்டா கேட்டு விண்ணப்பித்தார். அதற்குச் சான்றாக தில்லியில் பதிவு செய்யப்பட்டதாக ஒரு ஆவணத்தைத் தாக்கல் செய்தார். ஆனால், அரசு அதிகாரிகளின் ஆய்வில், 2012 ஆகஸ்ட் மாதம் வரை கொண்டையா பவர் பத்திரம் பெற்றதற்கான சான்றிதழ் எதுவும் இல்லை என தெரியவந்தது.
இந்த விவரங்களை அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், செயலாளர் க. சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் த. நீதிராஜன், சென்னை மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் எஸ்.கே. சிவா ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.
நகரப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அபரிமிதமாக அதிகரித்து விட்டது. இதனால் போலி ஆவணங்கள், தவறான தகவல்கள் கொடுத்து நிலம் வாங்குவது, விற்பது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. அதைப் போல இந்த பள்ளி விவகாரத்தில் நடக்காமல் இருக்க, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியாக அந்த இடத்தை தனது பெயரில் மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், என்று வலியுறுத்துகிறார் சாமுவேல்ராஜ்.
அந்த பள்ளியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசுத்துறையின் கவனக்குறைவால், செயல்பாடின்மையால் இப்படிப்பட்ட சுயநலமிகள் பழங்குடி சமூக மாணவர்களுக்கான பள்ளி நிலத்தை விழுங்க முயல்கின்றனர். இதை அறிந்த பிறகும் சம்பந்தப்பட்ட துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment