Pages

Thursday, September 16, 2010

தீயில் கருகிய குழந்தைகளுக்கு என்ன செய்தார்கள்?

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டானு ஒரு திரைப்பட காமெடி வரும். அதுபோல எவ்வளவு மிரட்டி கேட்டாலும் மனம் கோணம கொடுத்துடுறானுங்க-னு சொல்லும் அளவுக்கு தனியார் பள்ளி முதலாளிகளால் கட்டணக் கொள்ளை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். முழுஅளவிலான சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் போராடின.

இந்த நெருக்கடியால் சமச்சீர்கல்வியையும், கட்டணத்தை முறைப்படுத்த கோவிந்தராஜன் தலைமையிலான ஒரு குழுவையும் அரசு அமைத்து. அந்தக்குழு தனியார் பள்ளிகளை தீர விசாரித்து, ஆராய்ந்து அதன் பிறகு கட்டணத்தை நிர்ணயித்தது. இந்த கட்டணமும் அதிகமாக உள்ளது என்று சகல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசு நிர்ணயித்த கட்டணம் கட்டுபடியாகாது என்று கூறி தற்போதும் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வசூல் வேட்டையே நடத்தி வருகின்றன. இதற்கெதிராக ஆங்காங்க பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணம் போதுமானதாக இல்லையென்றால் பள்ளி நிர்வாகம் என்ன செய்திருக்க வேண்டும்?

அ. கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை தகவல் பலகையில் ஒட்டிவிட்டு, அதற்கு அருகில் இந்தக் கட்டணம் போதவில்லை. ஆகவே, இந்த வகுப்புக்கு இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று நேர்மையாக எழுதி போட்டிருக்க்க வேண்டும்.

ஆ. பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கூட்டி, கடந்த ஆண்டு இவ்வளவு செலவாகி உள்ளது. தற்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்தால், இவ்வளவு தொகை பற்றாக்குறை ஏற்படும். ஆகவே, பெற்றோர்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

இ. அரசு நிர்ணயித்த கட்டணம் கட்டுபடியாகவில்லை என்றால் பள்ளியை அரசிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது இழுத்து மூடியிருக்க வேண்டும்.

கல்வி நிலையங்களை கோவிலாக நினைத்த பெற்றோர்கள் பள்ளிகள் வியாபார தலமாக மாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்டு, பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை தற்காலிகமாக சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் நீதிமன்றங்கள் தனியார்மயத்திற்கு துணையாகத்தான் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அரசும் வாய்மூடி மவுனியாக தனியார் பள்ளி முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது.

டாமாக் ஊழியர்கள் போராடியபோது மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர், தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று கூற துணிவில்லாமல் போனது ஏன்? முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பள்ளிகள் நடத்தும் போது அவர் அப்படி கூற முடியாதுதான்.

இந்தநிலையில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை நடத்துவதை எதிர்த்து பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளி முன்பு போராட்டம் நடத்துவதை கண்டித்தும், போச்சம்பள்ளியில் உள்ள தனியார்பள்ளி மாணவர் சுரேஷ் விபத்தில் இறந்ததையடுத்து ஏற்பட்ட வன்முறையை கண்டித்தும் மாநிலம் முழுவதும் செப்.17அன்று தனியார் பள்ளிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

தனியார் பள்ளிகளின் வசூல் வெறியால் கும்பகோணத்தில் 100குழந்தைகள் நெருப்பில் வெந்து கருகிய போது இவர்கள் எந்த போராட்டத்தை நடத்தினார்கள். தங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்றவுடன் இந்த கல்விமான்களும், நியாயவான்களும் தெருவில் இறங்குகிறார்கள். இந்த போராட்டத்தில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

சமூகத்தில் யார் தங்கள் நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினாலும் அடக்குமுறையை ஏவும் தமிழக அரசு, பள்ளிகளை மூடும் இவர்களை விட்டுவைப்பதன் மர்மம் என்ன?

No comments: