மடிப்பாக்கம் ஏரி விஷமாக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பருகும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியான மடிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது மடிப்பாக்கம் ஏரி. 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது 56ஏக்கராக உள்ளது. மீனம்பாக்கம், நங்கநல்லூர், மூவரசன்பேட்டை, பழைய பல்லாவரம், கீழ்க்கட்டளை போன்ற பகுதிகளில் இருந்து ஏரிக்கு நீர் வருகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை ஏரிக்கு செல்கிறது. தென்மேற்கு பகுதியில் நீர்வெளியேறும் கால்வாய் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பல்லாவரம் நகராட்சி திட்டமிட்டது. இதனால் ஏரி மாசுபடும் என்று குடியிருப்போர் நலச்சங்கங்கள் தடுத்து நிறுத்தின. நீர் வெளியேறும் கால்வாய் 40 அடியிலிருந்து 10அடியாக சுருங்கி விட்டது. வடகிழக்கு பகுதியும் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்த ஏரியில்21 இடங்களில் ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டு 24 நீர் தேக்க தொட்டிகள் மூலமாக ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஏரியை சுற்றி 1.41கோடி செலவில் 18அடி அகல சாலை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டது. பின்னர் அது கைவிடப்பட்டது.
ஏரி ஆக்கிரமிக்கப்படு வதையும், நீர் மாசுபடுவதை தடுக்கவும் 2008ம் ஆண்டு 12லட்சம் ரூபாய் செலவில் ஏரியை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கரையோரம் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த வேலிகள் முற்றிலுமாக சிதைந்து விட்டன.
மடிப்பாக்கம் ஏரிக்கு அருகே உள்ள சபரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மழை நீர் கால்வாயாக கட்டப்படுகிறது. கழிவு நீர்கால்வாய் தனியாக இல்லாததால், அப்பகுதி மக்கள் மழை நீர் கால்வாயில் கழிவு நீரை விடுகின்றனர். மேலும் வேறுசில தெருக்களில் இருந்து வரும் கழிவு நீரும் இந்த மழைநீர் கால்வாயில் கலக்கிறது. மழைநீர் கால்வாய் என்ற பெயரில் கழிவு நீரை ஏரிக்குள் விட திட்டமிட்டனர். ஏரியை அப்பட்டமாக மாசுபடுத்தும் இந்த முயற்சியை அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் தடுத்து நிறுத்தி உள்ளன.
ஏரியை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், ஏரியில் கழிவு நீர் கலப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும், அந்த அறிவிப்பு பலகையின் கீழே பழைய பல்லாவரத்தில் இருந்து வரும் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது.
இதுதொடர்பாக ஏரிக்கு அருகே உள்ள மடிப்பாக்கம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் அன்பழகன் கூறுகையில், பல்லாவரம் நகராட்சியில் மடிப்பாக்கம் ஏரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீரை விடுகின்றனர். இதனால் ஏரி விஷமாக மாறி வருகிறது. இந்த நீரை பருகும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின் றன. இதனை தடுக்க வேண் டிய தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. ஊராட்சியில் இருந்து கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லை. ஆகவே பாதாள சாக்கடை அமைப்பதன் மூலமே ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியும். என்கிறார்.
மக்கள் மன்றம் அமைப் பின் அமைப்பாளர் நெ. இல.சீதரன் கூறுகையில், ஏரியை பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டு நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைபாதையும் அமைக்க வில்லை, பூங்காவையும் அமைக்க வில்லை. அமைக்கப்பட்ட வேலியும் உடைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டிய அவர், 2007ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் துணை முதலமைச்சர் மடிப்பாக்கம் ஊராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படும் என்றார். ஆனால் இதுவரை அதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஏரி மாசுபடுவதை தடுக்க 25.03.2010 அன்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக் கொடுத்தும் பணிகள் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் சீதரன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment