Pages

Tuesday, September 14, 2010

துணைமுதல்வர் தொகுதியில் சிறுநீர் சட்டி சுமக்கும் அவலம்

முன்பெல்லம் சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளுக்கு ஒரு சட்டி கொடுப்பார்கள். அதில்தான் மலமும் சிறுநீரும் கழிக்க வேண்டும். பின்பு அதனை தலையில் தூக்கிச் சென்று கொட்டிவிட்டு வரவேண்டும். அந்த சட்டியோடுதான் இருக்க வேண்டும். அந்த நிலை தற்போதுள்ள சிறைகளில் இல்லை. ஆனால் சென்னை நகரில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் இன்றும் சிறுநீர் சட்டியை சுமக்கும் நிலை உள்ளது. அதுவும் ஆளும் கட்சியான திமுக அலுவலத்திற்கு அருகில், துணை முதலமைச்சரின் ஆயிரம்விளக்கு தொகுதியில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.




1970களில் தேனாம்பேட்டை வெங்கட்ராமன் தெரு குடிசையில் இருந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுப்பதாக அரசு அறிவித்தது. குடியிருப்பு கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக எல்டாம் சாலை ராமலிங்கேவரர் கோவில் அருகே இருந்த காலி இடத்தில் குடிசை அமைத்து குடியிருக்க அனுமதித்தனர். வீடுகள் கட்டிய பிறகு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை. ஆகையால் அந்த மக்கள் அங்கேயே வசித்து வருகின்றனர்.



115வது வட்டத்திற்கு உட்பட்ட இந்த ராமலிங்கேவரர் கோவில் குடிசைபகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள இங்குள்ள மக்கள் வசிக்கும் குடிசை பெரும்பாலும் 80சதுரஅடி அகலம் கொண்டவைதான். இங்குள்ள எந்த குடிசையிலும் கழிப்பிட வசதி இல்லை. இந்தப்பகுதியில் கழிப்பிடம், பாதாள சாக்கடை, குடிநீர்வசதி என எந்த வசதியையும் மாநகராட்சி செய்து கொடுக்காமல் உள்ளது.


ஆகவே, மலம் கழிக்க அரைகிலோமீட்டர் தூரத்தில் உள்ள 113வது வட்டம் போய தெரு பொதுக் கழிப்பிடத்திற்கு செல்கின்றனர். அந்த கழிப்பிடமும் திமுக பிரமுகர் ஒருவரின் வசூல் வேட்டைக்கு உள்ளாகி உள்ளது. அந்த கழிப்பிடத்தையும் காலை 10மணிக்கே மூடிவிட்டு சென்று விடுகிறார்.


கழிப்பிட வசதி இல்லாததால், வீட்டில் உள்ள பக்கெட்டுகளில் சிறுநீர் மற்றும் கழிவு நீரை பிடித்துவந்து பிரதானசாலையில் உள்ள பாதாள சாக்கடையில் ஊற்றிவிட்டு செல்கின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ப சிறைகள் மாறியிருக்கின்றன. ஏழை உழைப்பாளி மக்கள் இன்றும் சிறுநீரை சுமக்கும் கொடுமை இங்கு தொடர்கிறது.


நூறு ரூபாய் செலுத்தினால் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்ததைதொடர்ந்து இப்பகுதியில் உள்ள சிலர் பணம் கட்டினர். ஆனால் இதுவரை இணைப்பு வழங்காமல் உள்ளனர்.



இந்த பகுதி மக்களுக்கு குழாய் அல்லது தொட்டி மூலமாக குடிநீர் வழங்காமல் உள்ளனர். இதனால் எல்டாம் சாலையில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் அடித்து எடுத்து செல்கின்றனர். பட்டாக்கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பட்டா கிடைத்தபாடில்லை.



இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதி மக்கள் 1999ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. அதன்பின்னரும் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.



அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி 8வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் 115வது வட்டகிளை செயலாளர் மோகனரங்கன் கூறியுள்ளார்.




இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலை பகுதி பொருளாளர் ரவி கூறுகையில்,இந்த பகுதியின் நுழைவு வாயிலில் திரௌபதி அம்மன் கோவில், பெருமாள் கோவில், ஆஞ்நேயர் கோவில் இருந்தாலும் இந்த மக்களுக்கு அருள் கிடைக்கவில்லை. இங்குள்ளவர்களை 25கிமீ தூரத்தில் உள்ள செம்மஞ்சேரிக்கு துரத்திவிட்டு இந்த இடத்தை திமுகவினர் சிலர் அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். அதற்காக எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் உள்ளனர். என்றார்



சூத்திரன் ஆட்சியில் பிரதான சாலைகளில் மட்டும் ஜொலித்தால் போதாது.ஏழை எளிய மக்களின் வாழ்க்கையும் பிரகாசிக்க வேண்டாமா? மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் எல்லா வசதி வாய்ப்புக்களையும் பெற்று வாழ்ந்திட தேவைப்படும் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றையும் அளிப்பதே அரசின் குறிக்கோள் என்று முதலமைச்சர் பேசினால் மட்டும்போதுமா?

2 comments:

Saravanan's blogs said...

Nalla Story officer. Kindly do the followup as your story (xerox copy) was with the Chennai Corporation officials this morning.

உங்களுடன் said...

thank you officer