தங்களைப் பற்றி வந்ததை தாங்களே பேசினால்?
இது சுய தம்பட்டம் அல்ல.
உணர்வுகளை மடைமாற்றம் செய்த அரிய நிகழ்வு
புராணங்கள், காவியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள்... இவற்றில் அனைத்திலும் அரவாணிகள் இடம்பெற்றிருக்கின்றனர். அரவாணிகள் குறித்த புரிதலை எந்த அளவிற்கு அவை வெளிப்படுத்தி உள்ளன? அது எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது? அவர்களின் உணர்வுகளை, முழுமையாக வெளிப்படுத்தியுள்ளனவா? என்பதுபற்றியெல்லாம் இரண்டு திருநங்கைகளே ஆய்வு செய்தால்...
சமூக அவலங்களுக்கு எதிரான அதிர்வை உருவாக்கி வரும் தமுஎகச அப்படிபட்டதான ஒரு நிகழ்வை நடத்தியது. தமிழ் இலக்கிய சூழலில் முதன்முறையாக திருநங்கையர் படைப்புலகம் என்ற பொருளில் நடைபெற்ற அந்த ஆய்வரங்கு கன்னிமாரா நூலகம் மட்டுமல்ல தமிழகமும் காணாததுதான். அரவாணிகள் குறித்து வந்த பதிவுகளும், அரவாணிகளே படைத்த படைப்புகளும் மிகக்குறைவு. அதிலும், திருநம்பிகள் குறித்த பதிவுகளே இல்லை என்பதை ஆய்வரங்கு சுட்டிக்காட்டியது.
அரவாணி பற்றிய இலக்கியத்தின் ஆசான் சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி முதல் சமீபத்திய வரவுவரை உள்ள 15நூல்களை இரண்டு திருநங்கைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அசத்தினர்.
இந்த ஆய்வரங்கில் அரங்க கலைஞர் லிவிங் மைல் வித்யா முன் வைத்த கருத்துக்கள் பார்வையாளர்களுக்குப் புதிய சிந்தனையை விதைத்தன.
இலக்கண-இலக்கியங்கள், காவியங்கள்-காப்பியங்கள், குகைஓவியங்களில் திருநங்கையர் பற்றி போகிற போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலக்கியங்களில் அரவாணிகளுக்கான பெயர்களும், பொருள்களும் கிண்டலும், குதர்க்கமும் நிறைந்ததாகவே உள்ளன. கடந்தகால இலக்கியத்தில் பாலியல் சிறுபான்மையினரான அரவாணிகள் பற்றி பதிவுகளை கண்ணாடி வைத்து தேடவேண்டி உள்ளது.
கி.ராஜநாராயணனின் பாலியல் சிறுகதைகள் தொடங்கி, அரவாணிகள் குறித்த புரிதலே இல்லாத காலக்கட்டத்தில் சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி நாவலுக்கு பிறகே அரவாணிகள் குறித்த செய்திகள், கட்டுரைகள், கதைகள், நாவல்கள், பேட்டிகள் வரத்தொடங்கின. தற்போது மெல்ல மெல்ல திருநங்கையர் குறித்த பார்வைகள் மாறி வருகின்றன. அரவாணிகள் குறித்து பல புத்தகங்கள், ஆவண-குறும்படங்கள் வந்திருந்தாலும் அவை அவர்களின் வாழ்நிலையை நுட்பமாக முழுமையாக பதிவு செய்யவில்லை.
சிறுகதைகளில் அரவாணிகள் குறித்த நுட்பமான அரசியல் வெளிப்பட்டுள்ளன. அரவாணிகள் குறித்த நுட்பம், உணர்வு, வேதனை, விம்மல், மகிழ்ச்சி, துன்பம், உளவியல், எழுச்சி போன்றவற்றை சிறுகதைகள் எடுத்துக்கூறியுள்ளன. திருநங்கைகள் குறித்து ஓரளவு திருப்தி படக்கூடியதாக சிறுகதைகளே உள்ளன. திருநங்கைகளும்-திருநம்பிகளும் எழுத்துலக பங்களிப்பை செய்ய வேண்டும். ஆணும் பெண்ணும் சரிசமமாக அமரும் இடத்தில் அரவாணிகள் சலனமின்றி வந்து செல்லும் சூழலும், கல்வியும்-வாசிப்பும் அவர்களுக்கு கிடைக்கும்போதுதான் இது சாத்தியமாகும் என்றார் அரங்க கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா.
ஆய்வரங்கில் பேசிய மற்றொரு எழுத்தாளரான பிரியாபாபு,திருநங்கைகளின் தந்தை சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி திருநங்கை இலக்கியத்தின் தொடக்கம். இந்நாவலில், திருநங்கைகளின் உணர்வில், திருநங்கைகளை விட ஆழ்ந்து சென்று எழுதியுள்ளார். அந்த நூலே என்னைப் போராளியாக மாற்றியது. அரவான் வழிபாடு என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, கிரேக்க புராண கதைகளிலும், உலக நாடுகளில் உள்ள அத்தனை இலக்கியங்களிலும் உள்ளது. நாடக கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமையல் கலைஞர்கள் என பல பரிமாணங்களைக் அரவாணிகள் கொண்டுள்ளனர். சமூக அடித்தளத்தில் உள்ள திருநங்கைகள் மேலெழுந்துவர இலக்கிய பதிவுகள் மேலும்மேலும் வர வேண்டும் என்றார்.
திருநங்கைகள் குறித்த ஒரு ஆய்வரங்கில் முதன்முதலாக கலந்து கொள்வது மகிழ்ச்சிக் குரியதாக உள்ளது. அரவாணிகள் படைத்த படைப்புகளாக 3 நூல்கள் வெளிவந்துள்ளன. அலி, ஒன்பது, அரவாணி என மாறி திருநங்கை என பெயர்மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றம் நேர்கோட்டில் செல்ல வேண்டும். அரவாணிகள் உருவாகும் போது தாய்மார்கள் ஆதரவாக இருந்தாலும் தந்தைகள் பிரச்சனையாக இருக்கிறார்கள். இவற்றை குறும்படங்கள் சித்தரிக்கின்றன. பாலியல் பொருளாக நடத்தும்போது அரவாணிகள் ஆவேசமாக நடந்து கொள்கிறார்கள். உணவுக்காக உரத்து பேசுகிறார்கள்.
அரவாணிகளுக்கென்று கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை உள்ளது. சமூக-சட்ட அங்கீகாரம், சமூக-பொருளாதார விடுதலை தேவை. அவர்கள் சொர்க்கம் கேட்கவில்லை; நரகம் வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் அதனைப் புரிந்து கொள்வோம் என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பேரா.சந்திரா.
திருநங்கைகள் கூட்டுக்குடும்ப வாழ்க்கை நடத்தி வருபவர்கள். சாதி, மதம், மொழி இன்றி மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள். நமது குடும்ப நிகழ்ச்சிகளில் அவர்களை அழைத்து, குடும்ப அங்கத்தினர்களாக மாற்ற வேண்டும். அவர்களின் வலிகளை மடைமாற்றம் செய்வதாக நமது பணி அமையட்டும் என்று தமுஎகச தென்சென்னை மாவட்ட தலைவர் சைதை ஜெ. முன்மொழிந்தபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. அந்த அதிர்வை சமூகத்திலும் உண்டாக்க வேண்டும்.
2 comments:
இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் போது எங்களைப் போன் இதழியல் ஆய்வு மாணவர்களுக்கு தகவல் தாருங்கள் தாருங்கள் தோழர் :-)
நல்ல பதிவு;வாழ்த்துகள்
Post a Comment