Pages

Monday, August 1, 2011

108



விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட எந்த அவசர சிகிச்சையாக இருந்தாலும் இப்போதெல்லாம் 108-க்கு பொதுமக்கள் தொடர்பு கொள்கின்றனர். அவர்களும் விரைந்து வந்து உயிரை காப்பாற்றுகின்றனர். 108-அவசர ஊர்தியில் உள்ள ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியால் சுமார் 10லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். ஆனால், இதில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது.

108-அவசர ஊர்தி திட்டம் 2008ம் ஆண்டு ஆகட் மாதம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.  ஜி.வி. கிருஷ்ணா ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஜிவிகே-இம்ஆர்ஐ என்ற இந்த நிறுவனம் 108அவசர ஊர்தி திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 91விழுக்காடு நிதியை அளிக்கிறது.

108 அவசர ஊர்தி திட்டத்தின் தமிழக தலைமை அலுவலகம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் அலுவலக கணினி ஊழியர்களாக 218பேரும், அலுவலக உதவியாளர்களாக 158பேரும், பைலட்டுகளாக (1115+32ஓட்டுநர்கள்) 1147பேரும், மருத்துவ உதவியாளர்களாக 1142பேரும், மருத்துவர்களாக 11பேரும், நர்சுககளாக 37பேரும் பணியாற்றுகின்றனர். தமிழகம் முழுவதும் 445 அவசர ஊர்தி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

தகவல்கிடைத்த 13 முதல் 19 நிமிடங்களில் அழைப்பு வந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். அதற்கேற்றார் போல் வாகனங்கள் தரமானதாக இல்லை. இதனால் அவ்வப்போது அவசர ஊர்தி வாகனங்களே விபத்துக்குள்ளாகின்றன. நாள்தோறும் 12 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும போது புகார் செய்தால் அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனையும் மீறி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஊழியர்களுக்கு உடலை காக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்குவதில்லை என்பது வேதனையானது. பல நோயாளிகளை கையாளும் இவர்களுக்கு 3மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்ற விதி இருந்தும் அது அமலாகாமல் உள்ளது. ஊழியர்கள் பணியாற்றும் இடத்தில் குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் என எந்த அடிப்படை வசதியும் இல்லை.இது போன்ற குறைகளை சுட்டிக் காட்டினால் அவர்களை இடமாற்றம் அல்லது பணி நீக்கம் செய்கின்றனர். இதுவரை 200 ஊழியர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். பெரும்பாலன ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்குவதில்லை. அடிப்படை சட்ட சலுகைகள், மருத்துவ உதவிகள் அறவே மறுக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பணி புரியும் ஊழியர்கள் விபத்துக்குள்ளாகி உயிர் இழந்தாலும், பொதுமக்களால் தாக்கப்பட்டாலும் நிவாரணம் கிடையாது.

அவசர ஊர்தி திட்டத்தில் பணியாற்றுகின்ற ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் அனைவருக்கும் 1965ம் ஆண்டு மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர் சட்ட விதிகளை அமலாக்க வேண்டும்.

240 நாட்கள் பணியாற்றிய அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வீட்டு வாடகைப் படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்புகளும், 10 நாட்கள் தற்செயல் விடுப்புகளும், 12 நாட்கள் மருத்துவ விடுப்புகளும்,  12 நாட்கள் தேசிய பண்டிகை விடுப்புகளும் சம்பளத்துடன் வழங்க வேண்டும். 5லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீட்டு தொழிலாளர் பெயரில் செய்ய வேண்டும்.

இஎஐ, பிஎப்  மற்றும் மிகைப்பணிக்கான இரட்டிப்பு ஊதியம், விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்க இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, முழுச்சம்பளத்தையும் வழங்க வேண்டும்.  பணி இடமாற்றம் செய்வதை தவிர்த்து ஊழியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுடைய அதாவது, அவசர ஊர்தி ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) மாநாட்டு 2011 ஜூலை 31 தொடங்கி வைத்து க.பீம்ராவ் எம்எல்ஏ, பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் 108 அவசர ஊர்தி திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அங்கு உள்ளவர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு உள்ள அனைத்து சலுகைளையும் இவர்களுக்கும் வழங்க வேண்டும். ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் எழுப்புவோம் என்றார்.

இவர்கள் வாழ்க்கையில் விடியல் பிறக்குமா?

No comments: