Pages

Friday, December 10, 2010

வீட்டு வசதி ஊழல்

எம்எல்ஏ, எம்எல்ஏவின் மனைவி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், முதல்வரின் உதவியாளர், செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, கட்சிப் பிரமுகர், கலைஞர் டிவி ஊழியர் ஆகியோருக்கு முறைகேடாக ஒதுக்கீடு


தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்  மூலம் இந்த முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்துள்ளது.


வீட்டுவசதி வாரியத்தில் உள்ள மனை, வீடுகளில் 15விழுக்காடு வரை அரசு விருப்புரிமை அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்யலாம். இந்த ஒதுக்கீடானது விதவைகள், சமூக சேவகர், சமூகத்தில் பிரபலமானவர்கள் பொது நிர்வாகம், சுதந்திரப்போராட்ட வீரர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும். ஒதுக்கீடு பெறுகிறவர் தனக்கோ அல்லது தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ சொந்த வீடு இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும்.


ஆனால், வாரிய நடைமுறை விதிகளை மீறி முறைகேடாக ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை பெற்றுள்ளவர்கள் யாரும் ஏழை எளிய மக்கள் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.

இவற்றில் சில...


வீடு இருந்தும் மீண்டும் ஒதுக்கீடு பெற்றவர்கள் அரசியல்வாதிகள் டி.யசோதா எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் துணைத் தலைவரான டி.யசோதா, 2006 சட்டமன்ற தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் சமர்ப்பித்த சொத்துக் கணக்கில் 11லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு (எண் 106ஏ, வெள்ளாளத் தெரு, கோடம்பாக்கம், சென்னை) உள்ளதாக கூறியிருக்கிறார். இவருக்கு சமூக சேவகர் என்ற அடிப்படையில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 59.56லட்சம் மதிப்புள்ள மனை (ஏ5) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு சென்னை மாநகராட்சியின் 89வது வட்ட காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் பி.என்.வனஜா, சட்டமன்ற உறுப்பினரான டி.யசோதாவிற்கு சமூக சேவகர் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார், அதை வாரியமும் ஏற்றுக் கொண்டுள்ளது.


எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமோ, அமைப்போ, தாசில்தாரோ, கவுன்சிலரோ, சட்டமன்ற உறுப்பினரோ யாருக்கும் சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினாலும் அதனை அரசு ஏற்றுக் கொள்ளாது.


எஸ்.ராஜலட்சுமி: திமுக சட்டமன்ற கட்சி கொறடா அர.சக்கரபாணியின் (ஒட்டன்சத்திரம் தொகுதி) மனைவி எஸ்.ராஜலட்சுமி. இவருக்கு ரோட்டரி கிளப் சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது. சமூக சேவகர் என்ற அடிப்படையில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உயர் வருவாய் பிரிவில், 79.86லட்சம் ரூபாய் மதிப்புள்ள மனை (எண் 1047)  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2006 சட்டமன்ற தேர்தலில் அர.சக்கரபாணி போட்டியிட்டபோது தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த சொத்துக் கணக்கில், தனது சொந்த கிராமமான கள்ளிமந்தையத்தில் 12லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், தனது மனைவி ராஜலட்சுமிக்கு ஒட்டன்சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 4.50லட்சம் மதிப்புள்ள வீடும் உள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கெனவே வீடு உள்ளவருக்கு வாரியம் ஒதுக்கீடு செய்தது எப்படி? எல்.கணேசன்: மதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எல்.கணேசன் 2009 மார்ச் மாதம் திமுகவில் இணைந்தார். ஆனால் இவருக்கு 7.3.2008 அன்று முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 79.86லட்சம் ரூபாய் மதிப்புள்ள மனை (எண்.1052) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது இவர் தாக்கல் செய்த சொத்துக்கணக்கில் 12லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி இவருக்கும் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



பி.மூர்த்தி எம்எல்ஏ: சோழவந்தான் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி. 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது தனக்கு எந்த சொத்தும் இல்லை என்று கூறியிருக்கிறார். இவருக்கு உயர் வருவாய் பிரிவின் கீழ் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 72.8லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு (ஈ2/6) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் சமூக சேவகர் என்று லயன்ஸ் கிளப் சான்றிதழ் வழங்கியுள்ளது.


பிருந்தா நெடுஞ்செழியன், என்.சூர்யா: வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் மூத்த மருமகள் பிருந்தா நெடுஞ்செழியன். இவரது மகள் மருத்துவர் என்.சூரியா.


பிருந்தா நெடுஞ்செழியனுக்கு சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 23.4.08 அன்று உயர் வருவாய் பிரிவில் 9.82லட்சம் ரூபாய் மதிப்பிலான 983சதுர அடி பரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு (பி3/14) ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் 2007ம் ஆண்டு வருமான வரி கட்டிய விவரங்களில் இருந்து சொந்த வீடு இருப்பது தெரியவருகிறது. என். சூர்யா என்சிசி, கண்சிகிச்சை முகாம், ரத்ததான முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்டும், ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வரும் சமூக சேவகர் என்று சேலம் வட்டாட்சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார். இவருக்கும் பிருந்தா நெடுஞ்செழியனுக்கு வீடு ஒதுக்கப்பட்ட அதே நாளில்,அதே பிளாட்டில் (பி 3/13) 9லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடுகளும் தற்போது வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வட்டாட்சியருக்கு சமூக சேவகர் என்று சான்று அளிக்க அதிகாரம் கிடையாது. அப்படி இருக்கையில் அவர் எப்படி சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்கினார்? ஏற்கெனவே சொந்த வீடு வைத்துள்ள பிருந்தாவிற்கு வீடு ஒதுக்கப்பட்டது எப்படி? முகாம்களில் கலந்து கொள்வதாலேயே ஒருவர் சமூக சேவகராக ஏற்றுக் கொள்ள முடியுமா? சொந்த பயன்பாட்டிற்கு வீட்டை வாங்கி விட்டு வாடகை விட்டு வருமானாம் பார்ப்பது சரியா?

திமுக பிரமுகர்கள்

பூச்சி எஸ்.முருகன்: திமுக பிரமுகரான இவர் வீட்டுவசதி வாரிய தொமுச நிர்வாகியாக உள்ளார். பட்டினப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்ஐஜி (ஐ-1)பிரிவின் கீழ் வீடு பெற்றுள்ளார். இவருக்கு, விதிமுறைகளை மீறி மீண்டும் திருவான்மியூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் (ஏ-11) 58.61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2422சதுர அடி பரப்பளவு கொண்ட மனை ஒதுக்கப்பட்டுள்ளது.


வித்யா: முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியான மருதவிநாயகத்தின் மகளான வித்யாவுக்கு, சமூக சேவகர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டுவசதி வாரியத்தில் உயர் வருவாய் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு (பி3/14) ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 9.82லட்சம் ரூபாய். இவர் சமூக சேவகர் என்று அரிமா சங்க கூட்டமைப்பு சான்றிதழ் பெற்று சமர்ப்பித்துள்ளார்.


முரளிதரன்: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றும் முரளிதரன் முகபேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், நடுத்தர வருவாய் பிரிவினர் இருக்கும் இடத்தில் 35.26லட்சம் மதிப்பிலான மனையை (எண் 1062) ஒதுக்கீடு பெற்றுள்ளார். லயன்ஸ் கிளப் கொடுத்த சமூக சேவகர் என்ற சான்றிதழை கொடுத்து ஒதுக்கீடு பெற்றுள்ளார்.


இளமுகில்: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் ஐடி-மேனேஜராக பணியாற்றுபவர். இவர் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடுத்தர வருவாய் பிரிவினர் இருக்கும் இடத்தில் 35.10லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (எண்: 1060) ஒதுக்கீடாக பெற்றுள்ளார்.


இளந்தென்றல்: இவர் முள்ளிமாநகர் மீனவ பஞ்சாயத்து சபையிடமிருந்து சமூக சேவகர் சான்றிதழ் பெற்று, அதனை கொடுத்து முகப்பேர் உயர் வருவாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் 7.04லட்சம் மதிப்புள்ள வீட்டை (இ2/10) ஒதுக்கீடாக பெற்றுள்ளார். இவர் இளமுகிலின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


கே.அன்பு: கலைஞர் டிவி-யில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறவர். ஸ்ரீ அபி பாஞ்சாலி யோக சங்கத்தில் இருந்து சமூக சேவகர் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்துள்ளார். இவருக்கும் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உயர் வருவாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் 9.55லட்சம் மதிப்பிலான வீடு (பி3/16) ஒதுக்கீடு பெற்றுள்ளார்.


தீபா: முதலமைச்சரின் தனிச்செயலாளர் தேவராஜனின் மகளான சமூக சேவகர் என்ற பெயரில், திருவான்மியூர் காமராஜ் நகரில் 1.08கோடி மதிப்புள்ள 4466சதுர அடி பரப்பு கொண்ட மனையை (எண் 543) ஒதுக்கீடாக பெற்றுள்ளார்.


ஜெயசுதா: நக்கீரன் வார ஏட்டின் இணை ஆசிரியர் காமராஜின் மனைவி ஜெயசுதா. வீட்டோடு இருக்கும் இவருக்கு சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் அரசு விருப்புரிமை அடிப்படையில் திருவான்மியூர் புறநகர் திட்டம், காமராஜ் நகரில் 4764சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.1.15கோடி மதிப்பிலான நிலம் ஒதுக்கீடு பெற்றுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்

ஜபார்சேட் ஐபிஎஸ்: தமிழக காவல்துறையின் உளவுத்துறை தலைவராக பணியாற்றி வருபவர். இவர் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் பிரிவில் திருவான்மியூர் காமராஜர் நகரில் 1.15கோடி ரூபாய் மதிப்பிலான 4,756சதுரஅடி மனை (எண் 540) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2008 ஜூன் 6ம் தேதி இந்த சொத்தை படித்துக் கொண்டிருக்கும் தனது மகள் ஜெனிபர் பெயருக்கு மாற்றுகிறார். மாணவி ஜெனிபர் ரூ.46.03லட்சம், ரூ.1.73லட்சம், 2009 பிப்ரவரி மாதம் ரூ.60லட்சம் என தவணை செலுத்தினார். மனையின் மொத்த தொகையான ஒருகோடியே ஏழு லட்சம் ரூபாய் செலுத்திய பின்னர் அந்த சொத்து ஜெனிபரின் தாயாரான பர்வீன் ஜாபர் பெயருக்கு மாற்றப்படுகிறது.


இதில் சுவாரசியமான விஷயம் என்றால், பர்வீனும் இந்த மனைக்கான முழுத்தொகையை மீண்டும் செலுத்துகிறார். 2009 அக்டோபர் மாதம் ரூ.50.64லட்சத்தையும், நவம்பர் மாதம் ரூ.25லட்சத்தையும் செலுத்துகிறார். மேலும் செலுத்த வேண்டிய 51.5லட்சம் ரூபாயை அதே மாதத்தில் செலுத்தினார்.


வரி ஏய்ப்பு செய்வதற்காக ஜாபர் சேட் குடும்பம் மீண்டும்மீண்டும் பணத்தை செலுத்தியாக கணக்கு காட்ட இவ்வாறு செய்துள்ளார்கள். காரணம் ஜாபர்சேட்டின் மகள் ஜெனிபருக்கு இவ்வளவு வருமானம் எப்படி வந்தது என்ற கேள்வி எழக்கூடும். இதன்பின்னர் ஜெனிபர் செலுத்திய மொத்த தொகையும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அவரிடமே திருப்பி கொடுத்துவிடுகிறது.


துர்கா சங்கர்: முதல்வரின் செயலாளராக உள்ள ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர். தொழிலாதிபரான இவர் சமூக சேவகர் பிரிவின் கீழ், ஜாபர் சேட் மனைக்கு அருகே 1.12கோடி ரூபாய் மதிப்புள்ள 2450சதுர அடி மனை (எண்: 538) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


ஜாபர் சேட் மனைவி பர்வீனும், துர்கா சங்கரும் சொந்த பயன்பாட்டிற்கு வீடு கட்ட ஒதுக்கீடு பெற்றவர்கள், தற்போது இருவரும் சேர்ந்து மனை எண் 538 மற்றும் 540ஐ இணைத்து 12வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளனர். ஒரு குடியிருப்பின் மதிப்பு சுமார் 1.5கோடி ரூபாய் என்று மதிப்பிடப்படுகிறது. இருதரப்பும் சேர்ந்து ரூ.2.85கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு பெற்று 18கோடி ரூபாய் லாபம் அடைகின்றனர்.


கோ.பிரகாஷ் ஐஏஎஸ்: 2008ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அப்பழுக்கற்ற அரசு ஊழியர் பிரிவின் கீழ் திருவான்மியூர் விரிவாக்கம், திருவள்ளுவர் நகரில் 76.58லட்சம் ரூபாய் மதிப்பிலான 3829சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: எஸ்-6) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் தனக்கு தானே அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்து முறைகேடாக ஒதுக்கீடுப் பெற்றுள்ளார்.


ஒரு அரசு ஊழியர் 25வருடம் பணியாற்றி ஊழல் கறை படியாமல், தண்டனை பெறாமல் இருந்தால், அவருக்கு அரசே 500ரூபாய் மதிப்புள்ள கிசான் விகாஸ் பத்திரம் வழங்கி அப்பழுக்கற்ற ஊழியர் என்று சான்று வழங்கும். அதுதான் செல்லும். இதை தெரிந்திருந்தும் ஒரு மாவட்ட ஆட்சியரே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.


சி.கே.கரியாலி ஐஏஎஸ்: ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் கரியாலி திருவான்மியூர் விரிவாக்கப்பகுதியில் 1.20கோடி மதிப்பில் 6023சதுர அடி பரப்பளவிலான மனை (எஸ்4) ஒதுககீடு பெற்றுள்ளார். இவரின் கணவர் டாக்டர் ராஜ்குமாருக்கு சென்னையில் வீடு உள்ளது. அதனை மறைத்துள்ளார்.


டாக்டர் ஜெ.ராதகிருஷ்ணன் ஐஏஎஸ்: 2008ல் தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளராக பணியாற்றிய இவர், தான் அப்பழுக்கற்ற ஊழியர் என்ற பிரிவின் கீழ் திருவான்மியூரில் 59.29லட்சம் ரூபாய் மதிப்பிலான மனையை (எண் ஏ-20) பெற்றுள்ளார். ஆனால் தமிழக அரசு இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற சான்றிதழை வழங்கவில்லை.


கோசலராமன் ஐஏஎஸ்: கோசலராமனுக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற அடிப்படையில் அரசு விருப்புரிமையில், திருவான்மியூர் புறநகர்த் திட்டம் உயர் வருவாய்ப் பிரிவில் 65.76லட்சம் மதிப்பிலான  3288சதுர அடி பரப்பளவு கொண்ட மனை ( ஏ-5) ஒதுக்கப்பட்டுள்ளது. இவருக்கும் அரசு அத்தகைய சான்றிதழை வழங்கவில்லை.


தகவல் உரிமை சட்ட ஆர்வலரான வி.கோபாலகிருஷ்ணன் தமிழக அரசின் கூடுதல்  செயலாளர் எஸ்.சாலமனிடம், யார் யாருக்கு எந்தெந்த அடிப்படையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் சான்றிதழ் கொடுத்துள்ளீர்கள், அவர்களின் விவரத்தை தருமாறு விண்ணப்பித்திருந்தார். அதற்கு பதிலளித்த சாலமன், யாருக்கும் அப்படி சான்றிதழே வழங்காத நிலையில், பட்டியல் தர இயலாது என்று கூறியுள்ளார். ஆக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொடுத்துள்ளது பொய்யான சான்றிதழ் என்று புரிந்து கொள்ள முடிகிறது.


மக்கள் தொடர்பு அதிகாரிகள்
கே.நித்தியானந்தன்: முதலமைச்சரின் தனிப்பட்ட உதவியாளராக இருந்து தற்போது உதவி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சமூக சேவகர் என்ற பிரிவில் திருவான்மியூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 50.82லட்சம் மதிப்புள்ள (2100சஅ) மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருடைய அதிகப்பட்ச சம்பளம் 20ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்காது. ஆனால் மாதமாதம் 76.500 ரூபாய் தவணை தொகை செலுத்தும் வகையில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இது எப்படி சரியாகும்?


கே.மாறன்: முதலமைச்சரின் அலுவலக உதவி மக்கள் தொடர்பு அதிகாரியான இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உயர்வருவாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் ரூ. 9.45லட்சம் மதிப்பிலான குடியிருப்பு (பி3/12) ஒதுக்கப்பட்டுள்ளது. பால.சக்திதாசன்: முதலமைச்சரின் அலுவலக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி. இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உயர்வருவாய் பிரிவினர் வசிக்கும் பகுதியில் ரூ.9.75லட்சம் மதிப்பிலான குடியிருப்பு (பி3/11) ஒதுக்கி பெற்றுள்ளார்.


கே.மாறனுக்கும், பால.சக்திதாசனுக்கும் முதலமைச்சரின் மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.வெங்கட்ராமனிடம் இருந்து சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்துள்ளார். அவரும் கொடுத்துள்ளார். இந்த சான்றிதழை ஏற்று வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.


ஜெ.நவீன் இப்ராஹிம்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜாபர் அலியின் மகனான இவர் லயன்ஸ் கிளப் வழங்கியசமூக சேவகர் சான்றிதழ் கொடுத்து முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உயர்வருவாய் பிரிவின் கீழ் 65லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (ஏ1) ஒதுக்கீடு பெற்றுள்ளார். தமிழ்ப்பணி மற்றும் சமுதாயப்பணி மாமன்றம்: இந்த அமைப்பு சமூக சேவை செய்து வருவதாக கூறி முகப்பேர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உயர்வருவாய் பிரிவில் 43.19லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (எண் 1046) ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.


இதேபோன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ரவிராஜபாண்டியன் உள்ளிட்டோரும் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.


ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், மாஸ் ஆக்ஷன் நெட்வொர்க், சராமிக் டிரஸ்ட், எக்ஸ்னோரா போன்ற அமைப்புகளிடமிருந்து எல்லாம் சமூக சேவகர் சான்றிதழ் பெற்று 300க்கும் மேற்பட்டோர் மனை ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தெரிகிறது.


ஏழை எளிய மக்களின் சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டிய வீடு, மனைகள் அதிகாரிகளின் கொள்ளைக்காடாக மாறியுள்ளது.


கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் முதலமைச்சர்கள் தங்களின் ரத்த உறவுகள், சொந்தக்கார்கள், கட்சிக்காரர்கள், வீட்டு வேலைக்காரர்கள், ஓட்டுநர்கள், அரசு அதிகாரிகள் என தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிலம், மனைகளை ஒதுக்கி கடும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டனர். மகாரஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் தனது பதவியையே இழந்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் கட்சியை மிரட்டி தப்பித்துக் கொண்டார். இதேபோன்று தமிழகத்திலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் தலைவர் முதலமைச்சர்தான். ஊழல்களை பற்றி அதிகம் பேசும்  முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?

1 comment:

Sindhan R said...

இந்தப்பதிவு ஏற்கனவே மாற்றுவில் வெளியாகியுள்ளதே. அப்போ அந்த கவாஸ்கர் யாரு?