Pages

Monday, November 1, 2010

பன்னாட்டு நிறுவனங்களில் உச்சகட்ட சட்டமீறல்!

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் உச்சகட்ட சட்டமீறல்கள் நடந்து வருவதை இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் வன்மையாக கண்டித்துள்ளார்.
தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


நோக்கியா நிறுவனத்தில் பாதுகாப்பு விதிமீறல்கள் காரணமாக தொடர் விபத்துக்கள் நடக்கின்றன. 31.10.2010 அன்று நடந்த விபத்தில் அம்பிகா என்கிற பெண் கொடூரமாக மரணமடைந்துள்ளார். எந்திரத்தில் அகப்பட்ட பிறகு, எந்திரத்தின் சேதத்தைப்பற்றி கவலைப்படாமல் உடைத்திருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்க முடியும் என்று சக ஊழியர்கள் கண்ணீர் மல்க கூறுகிறார்கள். அதிகாரிகள் ஒரு உயிரின்மீது எவ்வளவு அக்கறையற்று கல்மனதோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான உதாரணம் இது.


தொழிற்சாலை ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள்? இதேபோல் பி.ஒய்.டி. (க்ஷரடைன லடிரச னுசநயஅள) என்ற எலக்ட்ரானிக் கம்பெனியில் 4 ஆயிரம் பேர் பணியாற்றினாலும் 800 பேர்தான் நிரந்தரத் தொழிலாளிகள். அத்தனை பேரும் நிரந்தர தன்மையுள்ள தொழிலில்தான் ஈடுபடுகிறார்கள். இங்கே பணிநிரந்தரச் சட்டம், கான்ட்ராக்ட் ஒழிப்புச்சட்டம் எல்லாம் காற்றில் பறக்கிறது.


இந்த நிறுவனத்தில் 12 மணி நேர ஷிப்ட்தான் ஆண்டுக்கணக்கில் அமலாகிறது.  இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது உச்சகட்ட சட்டமீறல். இதைத்தெரியாமல் அந்தப் பகுதியின் தொழிற்சாலை ஆய்வக அதிகாரி இருக்கவே முடியாது. இதைத் தெரிந்தும், அனுமதித்த அந்த அதிகாரிகள் பதவியில் தொடரக்கூடாது. அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் அரசின் நேர்மையை நம்ப முடியும். இந்த நிறுவனத்தில் உள்ள பெண்கள் மிகவும் கேவலமாக நடத்தப்படுகிறார்கள்.


 இந்தத் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க விரும்பியதற்காக கடுமையான பழிவாங்கலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பிரேம் என்கிற ஒரு தொழிலாளியை அதிகாரிகள் கடுமையாக மிரட்டியதால் மனம் உடைந்து ஒரு ரசாயனத்தைக் குடித்து 4 தினங்களுக்கு முன்னால் அவர் தற்கொலை முயற்சியில்  ஈடுபட்டார். சட்டத்தின் ஆட்சி என்பதின் பொருள்தான் என்ன? இதற்குக் காரணமான அந்த அதிகாரிகளைத் தண்டிக்காமல் விடக்கூடாது.


ஃபாக்கான் நிறுவனத்தில் 40 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தொ.மு.ச.உடன் செய்து கொண்ட இரு தரப்பு ஒப்பந்தத்தை எல்லோர் தலையிலும் திணிப்பதற்கு நிர்வாகம்  மிரட்டல்களில் ஈடுபடுகிறது.  தொழிலாளர் துறை நடுநிலையோடு நடக்க வேண்டும்.  பெரும்பான்மையைத் தீர்மானிக்க  ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்று நிர்வாகமே கடிதம் கொடுத்தது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் சிஐடியு வெற்றிபெறும் என்பதால் தொழிலாளர் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.


 உயர்நீதிமன்றம் இதுகுறித்து நோட்டீ அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் பதிலளித்து நீதிமன்ற தீர்ப்பிற்காவது தொழிலாளர் துறையும் நிர்வாகமும் கட்டுப்பட வேண்டும். ஹுண்டாய், ஃபோர்டு, லூமாக், ஹவாசின், சான்மினா போன்ற ஏராளமான நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்கு தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிற்சங்க அங்கீகாரச்சட்டம் அவசியம். வரும் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதாவை அரசு சமர்ப்பிக்க வலியுறுத்துகிறோம்.

No comments: