Pages

Saturday, December 26, 2009

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக பறிபோகும் பட்டா நிலங்கள்


அண்மையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் தலைமையில் மக்கள் தணிக்கைக்குழு, தமிழகத்தின் வட மாவட்டங்களில் 6 பகுதிகளில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மக்களை அச்சுறுத்தியும், நிலப்பதிவுகளை நிறுத்தியும், நிலம் கையகப்படுத்துவதில் சரியான செயல்முறைகளை பின்பற்றாமலும், முக்கியமான சாலைகளை மறித்தும், பூதான, பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி உள்ளதையும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சிப்காட், டிட்கோ நிறுவனங்கள் நடத்திய மோசடிகளையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் சென்னைக்கு அருகே சோழிங்கநல்லூர் - செம்மஞ்சேரி சாலையில் திடீரென இரவோடு இரவாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பட்டா உள்ள நான்கு மனைப்பகுதிகளுக்கு (லேஅவுட்) செல்ல முடியாத வகையில் சட்டத்திற்குப் புறம்பாக சுவர் எழுப்பப்பட்டுள்ளது.


தனது பட்டா நிலத்தில் வீடுகட்டச் சென்ற அலமேலுமங்காபுரம், கணபதி சிண்டிகேட், சோழிங்கநல்லூர் (கிராம சர்வே எண் 728, 730, 731, 732, 733, 734, 735, 737, 738, 739, 741 அடங்கிய) மனை உரிமையாளர்களை அங்கேயுள்ள காவலாளி தடுத்து, இது தமிழக அரசால் என்.எஸ்.எல். (NVZIVEEDI SEEDS LTD, HYDRABAD) சிறப்பு பொருளாதார மண்டலம் என அறிவிக்கப்பட்ட இடம். இந்த வழியே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறி தடுத்தார். இந்த நிலத்திற்கு பக்கத்தில் உள்ள தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கம் வைத்துள்ள இடத்தின் வழியாக செல்ல வேண்டும் என்று கூறியது அதிர்ச்சியளித்தது.


இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்க அலுவலகத்தில் சென்று கேட்ட போது, அங்கு அவர்கள் சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சி தந்தது. “அந்த இடம் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஒதுக்கியது. மறு நில அளவையின் போது இந்த பாதை என்.எஸ்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சென்றுவிட்டது. நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்றனர்.


இது குறித்து என்.எஸ்.எல். நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அதில் பேசியவர், “நீங்கள் வேண்டுமானால் அந்த இடத்தில் வீடுகட்ட ஹெலிகாப்டரில் செல்லுங்கள்” என்று கூறி இணைப்பை துண்டித்தார்.


1969ம் ஆண்டு ‘நரசுஸ் காப்பி’ நிறுவனர் நீலகண்ட ஐயர், அலமேலு மங்காபுரம் (3 லேஅவுட்), கணபதி சிண்டிகேட் என 4 மனைப் பிரிவுகளை விற்றார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனைகளை வாங்கி உள்ளனர். இந்த மனைகளுக்கு தாம்பரம் வட்டாட்சியரும் பட்டா வழங்கி உள்ளார்.


இந்த மனைப்பிரிவு களுக்கு, 1955ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வந்த வண்டிப்பாட்டை சாலையே பொதுப்பாதையாக மனைப்பிரிவு பிளானில் காட்டப்பட்டிருந்தது.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டா மனைகளை விழுங்கும் நோக்கத்தோடு, என்.எஸ்.எல். நிறுவனம் மேற்கண்ட பாதையை மறித்து சுவர் எழுப்பி உள்ளது.
ஆக்கிரமிப்பு, மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் என்.எஸ்.எல். நிறுவனம், 2007 ஏப்ரல் 6ம் தேதியன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், சுமார் ரூ.1500 கோடி திட்ட மதிப்பீட்டில் டிட்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.ராமசுந்தரம் மற்றும் என்.எஸ்.எல். நிர்வாக இயக்குநர் பிரபாகர்ராவ் (முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் பேரன்) இடையில் 66 ஏக்கருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டம் 24 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.


ஆக, அந்த ஒப்பந்தத்தின்படி 2009 ஏப்ரலில் திட்டப்பணிகள் முடிந்திருக்க வேண் டும். ஆனால் அந்த இடத்தில் ஒரு புல்லுக்கூட புடுங்காமல் நாலாபுறமும் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்நிறுவனம், அந்த இடத்தில் பெயர் பலகையை கூட வைக்காமல் உள்ளது. ஒதுக்கப்பட்ட 66 ஏக்கர் நிலத்தையும் தாண்டி சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவில் கான்கிரீட் சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள பூர்வீக மக்களை மாடு மேய்க்கக் கூட விடுவதில்லை. இதிலிருந்து தொழில் திட்டம் என்ற பெயரால் அந்நிறுவனம் ஏமாற்றி வருகிறது.


தொழில்நுட்ப நகரம், ஐ.டி. பார்க் என தமிழகத்தில் கவனிக்கத்தக்க பகுதியாக பழைய மகாபலிபுரம் சாலை உள்ளது. இந்த பகுதிகள் வழிகாட்டு மதிப்பை விட, பல மடங்கு விலை போவதால் பெரும் பணக்காரர்களும், ரியல் எஸ்டேட் தாதாக்களும், ஆளுங்கட்சியினரும், அரசு அதிகாரிகளும் நிலங்களை அபகரித்து வருகின்றனர்.


ஒவ்வொரு மனை உரிமையாளனும் தினமும் காலை எழுந்தவுடன், தனது மனை தனது பெயரில்தான் இருக்கிறதா என்பதை அறிய பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒதுங்க ஒரு மனை இல்லையே என ஏங்கும் மக்கள் ஒருபுறம்; காலத்திற்கும் உழைத்து சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய ஒரு மனையைக் கூட நிலக் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லையே என்று அல்லல்படும் மக்கள் மறுபுறம்.

சோழிங்கநல்லூர், அலுமேலுமங்காபுரம் மற்றும் கணபதி சிண்டிகேட் குடியிருப்பு மனை உரிமையாளர்கள் நலச்சங்கம் 22-08-08 அன்று வருவாய்த்துறை செயலாளர், காஞ்சி மாவட்ட ஆட்சியர், நிலநிர்வாக சிறப்பு அலுவலர், தாம்பரம் வட்டாட்சியர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயல் தலைவர், சோழிங்க நல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நில ஆக்கிரமிப்பில் என்.எஸ்.எல். நிறுவனத்திற்கும், டிட்கோவிற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இரண்டாண்டுகளுக்குள் முடிக்க வேண்டிய திட்டப்பணிகள் துவங்காத நிலையிலேயே உள்ளது. எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும். எல்லைக்கற்களை பிடுங்கிப் போடுபவர்கள், பெயர்ப் பலகையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


30 அடி வண்டிப்பாட்டை சாலையை மறித்து கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டு சோழிங்கநல்லூர் பஞ்சாயத்து 30அடி சாலையை அமைத்துத் தர வேண்டும். போலியான நில பத்திரப்பதிவுகளை நிறுத்த வேண்டும்.


மறு நிலஅளவை என்ற பெயரில் தனியாரிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்
கிக் கொண்டு 30 அடி சாலையை காணாமல் செய்த நில அளவையாளர், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மீது நடவடிக்கை வேண்டும்.


அலமேலுமங்காபுரம், கணபதி சிண்டிகேட் மனைபிரிவுகளைச் சுற்றி 2 சதுர கி.மீ பரப்பிற்கு என்.எஸ்.எல். நிறுவனம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கம் எழுப்பியிருக்கும் கான்கிரீட் சுவரை இடிக்க வேண்டும்.


அலமேலுமங்காபுரம், கணபதி சிண்டிகேட் மனைகள் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டல பகுதிகளில் நடைபெறும் மோசடிகள் தொடர்பாக மக்கள் முன்வைத்துள்ள இந்த கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றுவாரா?

No comments: