மேற்கு வங்கத்தில் 1967ம் ஆண்டு சிபிஎம் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு 356சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்கப்பட்டது. 1969ல் 40 இடங்களை கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கட்சி 70ல் 80இடங்களையும், 1971ல் 110 இடங்களையும் கைப்பற்றியது.
1972 தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரை பாசிச வன்முறை கட்டவிழ்த்து விட்டது. 1973-76வரை சட்டமன்றத்தை மார்க்சிஸ்ட் கட்சி புறக்கணித்தது. இந்த காலக்கட்டத்தில் 1400 சிபிஎம் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 20ஆயிரம் குடும்பங்கள் சொந்த இடத்தை விரட்டப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்க அலுவலகங்களை கைப்பற்றப்பட்டன. 70ஆயிரம் வழக்குள் போடப்பட்டன.
1977ல் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையோடு ஆட்சி அதிகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி வந்தது. 7முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றும், 32ஆண்டுகால ஆட்சிக்கு பிறகும் ஏன் இத்தகைய கொடூரமான வன்முறை சம்பவங்கள் நிகழ்கிறது? இடது அதிதீவிரவாத குழுக்கள் முதல், வலதுசாரி குழுக்கள் வரை ஒன்று சேர்ந்து, சிபிஎம் ஊழியர்களை படுகொலை செய்வது ஏன்? அப்பாவி மக்களை கொன்று குவிப்பது ஏன்? மம்தா-மாவேயிஸ்ட்டு கூட்டணி அமைத்து சீர்குலைவு சக்திகள் செய்து வருவது எதற்காக? 2009 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு ஏன் இவ்வளவு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன?
இதற்கு விடைகாண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், அம்மாநில குடும்பம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சூர்ய காந்த் மிஸ்ராவுடன் பேசியதிலிருந்து (நாள் 2009 டிச.17)
1977ல் இடது முன்னணி ஆட்சியை கைப்பற்றிய முதலே, அந்த ஆட்சியை கலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 32வருட காலமாக பல்வேறு சதிகள் செய்தும் அவை பலனளிக்காததால், தற்சமயம் புதிய தந்திரத்தை கடைபிடிக்கிறார்கள்.
மாவோயிஸ்ட்-திரிணாமூல் வன்முறைக்கு 2009ம் ஆண்டு டிச.11 வரை 159தோழர்களை பலி கொடுத்துள்ளோம். 2009 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு 120தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 54தோழர்களை பலி கொடுத்துள்ளோம்.
2004ல் 61 இடதுசாரி எம்பிக்களின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தனியார்மய, தாரளமய கொள்கைகளையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் கடுமையாக மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தது.
மார்க்சிஸ்ட் கட்சி எம்பி, எம்எல்ஏ, மந்திரி பதவிக்காக உருவாக வில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் நம்புகிறோம். உழைக்கும் வர்க்க மக்களுக்காக, வர்க்கமற்ற சமூகத்தை படைக்க நாங்கள் போராடுகிறோம். அது தொடர்ந்து சமரசமின்றி நடைபெறும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய சக்திகளை எதிர்க்கும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தை செய்தாலும், தொய்வின்றி போராட்டம் தொடரும்.
திரிணாமூல் கட்சியினர் தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ள வலதுசாரி, இடதுசாரி சக்திகளை சேர்த்து ஒரு மகா கூட்டணி, அதாவது வானவில் கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள். வானவில் பார்க்க அழகாக இருக்கும்; பின்பு காணாமல் போய்விடும். அதேபோல், இந்த கூட்டணியும் நீடித்து இருக்காது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி ஏ முதல் இசட் வரையிலான பல கட்சிகளாக சிதறுண்டன. இவற்றில் எதுவும் தீர்மானிக்க கூடிய சக்தியாக இல்லை. இப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டு சேர்ந்துள்ளது. அறிவுஜீவிகளும் இவர்களோடு சேர்ந்துள்ளனர். மூன்று ‘எம்’ (மணி, மசில், மீடியா) துணையோடு, தற்போது நான்காவதாக ஒரு ‘எம்’ (மாவோயிட்டுகள்) சேர்த்துக் கொண்டு மார்க்சிஸ்ட் ஊழியர்களை தாக்குகிறார்கள்.
மாவோயிசம் என்று ஒன்று இல்லை. சீனாவில் கூட மாவோயிசம் என்ற கொள்கை கிடையாது. தேர்தல் பாதையை நம்பாத, தேர்தலை புறக்கணிக்க கூடிய மாவோயிட்டுகளின் தலைவர், முக்காடு போட்டுக் கொண்டு, “அந்த பெண்மணி (மம்தா பானர்ஜி) முதலமைச்சராக வர வேண்டும்” என்று பேட்டிக் கொடுகிறார்.
ஆனால், அந்த பெண்மணியோ, மாவோயிஸ்ட்டுகள் யார்? எங்கு இருக்கிறார்கள்? அவர்களை பார்க்க முடியவில்லையே என்று கபட நாடகம் ஆடுகிறார்.
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை தடுத்து நிறுத்தியது யார்? ஒரிசா, ஜார்க்கண்ட் பகுதியில் ரயில் நிலையங்களை தகர்த்தது யார்? மேற்கு வங்க முதலமைச்சருக்கு கண்ணி வெடி வைத்தது யார்? லால்கர் பகுதியில் அரசு நிர்வாகத்தை செயல்பட விடாமல் தடுத்தது யார்?
மாவோயிஸ்ட்களின் வன்முறையால் 2000ம் ஆண்டுக்கு பிறகு 4ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரதமரும், உள்துறை அமைச்சரும், மாவோயிஸ்ட்டுகள்தான் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து என்று கூறுகின்றனர். ஆனால், அந்த அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக உள்ள அந்த அம்மையார், அவர்களுக்கு பாதுகாவலாக உள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளுடன் அவர் வைத்திருந்த ரகசிய கூட்டணி வெட்ட வெளிச்சமாகி விட்டது. இந்த ரகசிய கூட்டணி நந்திகிராமத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. சிங்கூரில் சீர்குலைவு செய்தது. லார்கர் பகுதியில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகிறது. இடதுசாரிகளை வீழ்த்த வேண்டுமென்பது ஒன்றுதான் அவர்களது நோக்கமாக உள்ளது.
“மாற்றம் தேவை” என்கிறார்கள். நாமும் மாற்றம் தேவை என்கிறோம். மாற்றம் முற்போக்கானதாக இருக்க வேண்டும், பிற்போக்காக இருக்க கூடாது.
32வருட கால இடதுமுன்னணி ஆட்சியில் 84சதவீத நிலங்களை விளிம்பு நிலை மனிதர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம். இந்த நிலங்களை மீண்டும் நிலப்பிரபுக்களுக்கு பிடுங்கி கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?
மேற்கு வங்கத்தில் மொத்த நில விநியோகத்தில் 54சதவீத இடத்தை 28சதவீதம் உள்ள மலைவாழ், தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உதாரணத்தை வேறு எந்த மாநிலத்திலாவது காட்ட முடியுமா? பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மலைவாழ் மக்களுக்கும், தலித் மக்களுக்கும் மேற்கு வங்கத்தில்தான் அதிக அளவில் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி துறை கூறுகிறது.
இவற்றையெல்லாம் மறுத்து, குறிப்பாக மேற்கு மிட்னாப்பூர், புருலியா, பஞ்ச்குரா ஆகிய மாவட்டங்களில் தாக்குதல் நடத்துகின்றனர். ஜார்க்கண்ட் எல்லையை யொட்டி உள்ள மலைப் பகுதியான இந்த மாவட்டங்களில் ‘தாக்கி விட்டு ஓடுவது’ என்ற முறையை பின்பற்றுக்கிறார்கள்.
இந்த 3மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி மிகப்பெரிய சக்தியாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் 59சதவீத வாக்குகளை பெற்று 3லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் சிபிஎம் வெற்றி பெற்றது. லால்கர் பகுதியில் 18ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சிபிஎம் ஊழியர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது. ஆகவே தாக்குகிறார்கள். மலைவாழ் மக்களுக்கும், பெண்களுக்கும், கூட்டுறவு, பஞ்சாயத்துகளுக்கும் உள்ள அதிகாரங்களை துப்பாக்கி முனையில் பிடுங்க வேண்டும்: இதுதான் மாற்றம் என்கிறார்கள். இந்த மூடத்தனத்தை ஏற்க முடியுமா?
மத்திய அரசு கொள்கைகளுக்கும், முதலாளித்துவ கொள்கைகளுக்கும் மாற்றாக மாற்றுக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி கூறி வருகிறது. பொதுத்துறை விற்க, அமெரிக்க சார்பு கொள்கைகளை பின்பற்ற, காப்புரிமை சட்டத்தை திருத்த என அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகள் துணையோடு சிபிஎம் ஊழியர்கள் மீதும், அவர்களுக்கு பின்புலமாக உள்ள மேற்கு வங்க மக்கள் மீதும் தாக்குதல் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
அவர்கள் எத்தனை ‘எம்’களை கொண்டு தாக்கினாலும் எங்களிடம் உள்ள மார்க்சியம் என்ற ‘எம்’-மை கொண்டு எதிர்கொள்வோம். இந்த கொள்ளை எல்லாவற்றையும் வெல்லும். எந்த தியாகம் செய்தாலும், ரத்தம் சிந்தியாவது செங்கொடியை உயர்த்தி பிடிப்போம். தலைகள் வெட்டி உருட்டப்படலாம். ஒருபோதும் செங்கொடியை தாழாது என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment