Pages

Saturday, December 26, 2009

மக்களுக்காக பட்டை நாமம் போட்ட சிபிஎம் கவுன்சிலர்


1.50லட்சம் மக்கள் வசிக்கும் நெற்குன்றம் முதல்நிலை ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தாமல் தமிழகஅரசு மக்க(ளுக்கு)ளை ஏமாற்றி (பட்டை நாமம் போட்டு ) வருகிறது. என்று நெற்குன்றம் முதல் நிலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் 3வது வார்டு கவுன்சிலர் எஸ்.வெள்ளைசாமி கூறுகிறார்.



நெற்குன்றம் ஊராட்சி கூட்டம் 2008 டிச 24 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வெள்ளைசாமி பட்டை நாமத்துடன் கையில் கோரிக்கை அட்டையையும், திருவோட்டையும் ஏந்நி வந்தார்.


அப்போது அவர் கூறியது வருமாறு:


சென்னை மாநகர எல்லையையொட்டி உள்ள நெற்குன்றம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்று 2007 ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.


நெற்குன்றம் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 21கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 45லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால்தான் அந்த பணத்தை செலவிட முடியும் என்று சிஎம்டிஏ அத்திட்டத்தை துவக்க அனுமதி மறுக்கிறது.


2008ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1.25 கோடி ரூபாய் அளவிற்கு சாலைகள், கால்வாய்கள் பழுதடைந்தன. அவற்றை சரிசெய்ய இதுவரை அரசு நிதி ஒதுக்காமல் உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு பொட்டலங்கள் வழங்க கூட அரசு பணம் தரவில்லை. அதிகாரிகளின் அறிவுரையோடு மளிகை கடைகளில் 48ஆயிரம் ரூபாய்க்கு கடனாக பொருட்கள் வாங்கினோம். அந்த பணத்தை கூட தராமல் உள்ளனர்.


பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், ஆற்காடு சாலையையும் இணைக்கும் என்டி பட்டேல் சாலையை வில்லிவாக்கம் ஒன்றியத்தின் பராமரிப்பில் உள்ளது. பல ஆண்டுகாலமாக பராமரிக்கப்படாமல், குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பணிட, பல லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் பதிவேடுகளில் கணக்கு காட்டியுள்ளனர்.


இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கடையடைப்பு உள்ளிட்ட பல போராட்டம் நடத்தப்பட்டன. துணை முதல்வர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் சாலை அப்படியேதான் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அனைத்து சாலைகளும், கால்வாய்களும் மேலும் பழுதடைந்துள்ளது.


ஊராட்சிக்கு நிதி ஒதுக்குவதில் தமிழக அரசு மாற்றந்தாய் மனப்போக்கோடு நடந்து கொள்கிறது. ஊராட்சிக்கு உரிய நிதி ஒதுக்குவதோடு, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். நகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து தகுதி இருந்தும் ஏமாற்றி வருகிறது.


அரசின் இந்த பாராபட்சத்தை விமர்சிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே அம்பலப்படுத்தும் வகையிலும் பட்டை நாமம்போட்டு, திருவோடு ஏந்தி கூட்டத்திற்கு வந்துள்ளேன் என்றார்.


ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?

No comments: