Pages

Saturday, December 26, 2009

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக பறிபோகும் பட்டா நிலங்கள்


அண்மையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் தலைமையில் மக்கள் தணிக்கைக்குழு, தமிழகத்தின் வட மாவட்டங்களில் 6 பகுதிகளில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மக்களை அச்சுறுத்தியும், நிலப்பதிவுகளை நிறுத்தியும், நிலம் கையகப்படுத்துவதில் சரியான செயல்முறைகளை பின்பற்றாமலும், முக்கியமான சாலைகளை மறித்தும், பூதான, பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி உள்ளதையும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சிப்காட், டிட்கோ நிறுவனங்கள் நடத்திய மோசடிகளையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் சென்னைக்கு அருகே சோழிங்கநல்லூர் - செம்மஞ்சேரி சாலையில் திடீரென இரவோடு இரவாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பட்டா உள்ள நான்கு மனைப்பகுதிகளுக்கு (லேஅவுட்) செல்ல முடியாத வகையில் சட்டத்திற்குப் புறம்பாக சுவர் எழுப்பப்பட்டுள்ளது.


தனது பட்டா நிலத்தில் வீடுகட்டச் சென்ற அலமேலுமங்காபுரம், கணபதி சிண்டிகேட், சோழிங்கநல்லூர் (கிராம சர்வே எண் 728, 730, 731, 732, 733, 734, 735, 737, 738, 739, 741 அடங்கிய) மனை உரிமையாளர்களை அங்கேயுள்ள காவலாளி தடுத்து, இது தமிழக அரசால் என்.எஸ்.எல். (NVZIVEEDI SEEDS LTD, HYDRABAD) சிறப்பு பொருளாதார மண்டலம் என அறிவிக்கப்பட்ட இடம். இந்த வழியே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறி தடுத்தார். இந்த நிலத்திற்கு பக்கத்தில் உள்ள தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கம் வைத்துள்ள இடத்தின் வழியாக செல்ல வேண்டும் என்று கூறியது அதிர்ச்சியளித்தது.


இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்க அலுவலகத்தில் சென்று கேட்ட போது, அங்கு அவர்கள் சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சி தந்தது. “அந்த இடம் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஒதுக்கியது. மறு நில அளவையின் போது இந்த பாதை என்.எஸ்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சென்றுவிட்டது. நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்றனர்.


இது குறித்து என்.எஸ்.எல். நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அதில் பேசியவர், “நீங்கள் வேண்டுமானால் அந்த இடத்தில் வீடுகட்ட ஹெலிகாப்டரில் செல்லுங்கள்” என்று கூறி இணைப்பை துண்டித்தார்.


1969ம் ஆண்டு ‘நரசுஸ் காப்பி’ நிறுவனர் நீலகண்ட ஐயர், அலமேலு மங்காபுரம் (3 லேஅவுட்), கணபதி சிண்டிகேட் என 4 மனைப் பிரிவுகளை விற்றார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனைகளை வாங்கி உள்ளனர். இந்த மனைகளுக்கு தாம்பரம் வட்டாட்சியரும் பட்டா வழங்கி உள்ளார்.


இந்த மனைப்பிரிவு களுக்கு, 1955ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வந்த வண்டிப்பாட்டை சாலையே பொதுப்பாதையாக மனைப்பிரிவு பிளானில் காட்டப்பட்டிருந்தது.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டா மனைகளை விழுங்கும் நோக்கத்தோடு, என்.எஸ்.எல். நிறுவனம் மேற்கண்ட பாதையை மறித்து சுவர் எழுப்பி உள்ளது.
ஆக்கிரமிப்பு, மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் என்.எஸ்.எல். நிறுவனம், 2007 ஏப்ரல் 6ம் தேதியன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், சுமார் ரூ.1500 கோடி திட்ட மதிப்பீட்டில் டிட்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.ராமசுந்தரம் மற்றும் என்.எஸ்.எல். நிர்வாக இயக்குநர் பிரபாகர்ராவ் (முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் பேரன்) இடையில் 66 ஏக்கருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டம் 24 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.


ஆக, அந்த ஒப்பந்தத்தின்படி 2009 ஏப்ரலில் திட்டப்பணிகள் முடிந்திருக்க வேண் டும். ஆனால் அந்த இடத்தில் ஒரு புல்லுக்கூட புடுங்காமல் நாலாபுறமும் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்நிறுவனம், அந்த இடத்தில் பெயர் பலகையை கூட வைக்காமல் உள்ளது. ஒதுக்கப்பட்ட 66 ஏக்கர் நிலத்தையும் தாண்டி சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவில் கான்கிரீட் சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள பூர்வீக மக்களை மாடு மேய்க்கக் கூட விடுவதில்லை. இதிலிருந்து தொழில் திட்டம் என்ற பெயரால் அந்நிறுவனம் ஏமாற்றி வருகிறது.


தொழில்நுட்ப நகரம், ஐ.டி. பார்க் என தமிழகத்தில் கவனிக்கத்தக்க பகுதியாக பழைய மகாபலிபுரம் சாலை உள்ளது. இந்த பகுதிகள் வழிகாட்டு மதிப்பை விட, பல மடங்கு விலை போவதால் பெரும் பணக்காரர்களும், ரியல் எஸ்டேட் தாதாக்களும், ஆளுங்கட்சியினரும், அரசு அதிகாரிகளும் நிலங்களை அபகரித்து வருகின்றனர்.


ஒவ்வொரு மனை உரிமையாளனும் தினமும் காலை எழுந்தவுடன், தனது மனை தனது பெயரில்தான் இருக்கிறதா என்பதை அறிய பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒதுங்க ஒரு மனை இல்லையே என ஏங்கும் மக்கள் ஒருபுறம்; காலத்திற்கும் உழைத்து சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய ஒரு மனையைக் கூட நிலக் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லையே என்று அல்லல்படும் மக்கள் மறுபுறம்.

சோழிங்கநல்லூர், அலுமேலுமங்காபுரம் மற்றும் கணபதி சிண்டிகேட் குடியிருப்பு மனை உரிமையாளர்கள் நலச்சங்கம் 22-08-08 அன்று வருவாய்த்துறை செயலாளர், காஞ்சி மாவட்ட ஆட்சியர், நிலநிர்வாக சிறப்பு அலுவலர், தாம்பரம் வட்டாட்சியர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயல் தலைவர், சோழிங்க நல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நில ஆக்கிரமிப்பில் என்.எஸ்.எல். நிறுவனத்திற்கும், டிட்கோவிற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இரண்டாண்டுகளுக்குள் முடிக்க வேண்டிய திட்டப்பணிகள் துவங்காத நிலையிலேயே உள்ளது. எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும். எல்லைக்கற்களை பிடுங்கிப் போடுபவர்கள், பெயர்ப் பலகையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


30 அடி வண்டிப்பாட்டை சாலையை மறித்து கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டு சோழிங்கநல்லூர் பஞ்சாயத்து 30அடி சாலையை அமைத்துத் தர வேண்டும். போலியான நில பத்திரப்பதிவுகளை நிறுத்த வேண்டும்.


மறு நிலஅளவை என்ற பெயரில் தனியாரிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்
கிக் கொண்டு 30 அடி சாலையை காணாமல் செய்த நில அளவையாளர், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மீது நடவடிக்கை வேண்டும்.


அலமேலுமங்காபுரம், கணபதி சிண்டிகேட் மனைபிரிவுகளைச் சுற்றி 2 சதுர கி.மீ பரப்பிற்கு என்.எஸ்.எல். நிறுவனம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கம் எழுப்பியிருக்கும் கான்கிரீட் சுவரை இடிக்க வேண்டும்.


அலமேலுமங்காபுரம், கணபதி சிண்டிகேட் மனைகள் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டல பகுதிகளில் நடைபெறும் மோசடிகள் தொடர்பாக மக்கள் முன்வைத்துள்ள இந்த கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றுவாரா?

4000பேரை கொன்ற மாவோயிஸ்டுகள்

மேற்கு வங்கத்தில் 1967ம் ஆண்டு சிபிஎம் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு 356சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்கப்பட்டது. 1969ல் 40 இடங்களை கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கட்சி 70ல் 80இடங்களையும், 1971ல் 110 இடங்களையும் கைப்பற்றியது.


1972 தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரை பாசிச வன்முறை கட்டவிழ்த்து விட்டது. 1973-76வரை சட்டமன்றத்தை மார்க்சிஸ்ட் கட்சி புறக்கணித்தது. இந்த காலக்கட்டத்தில் 1400 சிபிஎம் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 20ஆயிரம் குடும்பங்கள் சொந்த இடத்தை விரட்டப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்க அலுவலகங்களை கைப்பற்றப்பட்டன. 70ஆயிரம் வழக்குள் போடப்பட்டன.


1977ல் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையோடு ஆட்சி அதிகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி வந்தது. 7முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றும், 32ஆண்டுகால ஆட்சிக்கு பிறகும் ஏன் இத்தகைய கொடூரமான வன்முறை சம்பவங்கள் நிகழ்கிறது? இடது அதிதீவிரவாத குழுக்கள் முதல், வலதுசாரி குழுக்கள் வரை ஒன்று சேர்ந்து, சிபிஎம் ஊழியர்களை படுகொலை செய்வது ஏன்? அப்பாவி மக்களை கொன்று குவிப்பது ஏன்? மம்தா-மாவேயிஸ்ட்டு கூட்டணி அமைத்து சீர்குலைவு சக்திகள் செய்து வருவது எதற்காக? 2009 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு ஏன் இவ்வளவு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன?


இதற்கு விடைகாண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், அம்மாநில குடும்பம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சூர்ய காந்த் மிஸ்ராவுடன் பேசியதிலிருந்து (நாள் 2009 டிச.17)

1977ல் இடது முன்னணி ஆட்சியை கைப்பற்றிய முதலே, அந்த ஆட்சியை கலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 32வருட காலமாக பல்வேறு சதிகள் செய்தும் அவை பலனளிக்காததால், தற்சமயம் புதிய தந்திரத்தை கடைபிடிக்கிறார்கள்.


மாவோயிஸ்ட்-திரிணாமூல் வன்முறைக்கு 2009ம் ஆண்டு டிச.11 வரை 159தோழர்களை பலி கொடுத்துள்ளோம். 2009 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு 120தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 54தோழர்களை பலி கொடுத்துள்ளோம்.


2004ல் 61 இடதுசாரி எம்பிக்களின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தனியார்மய, தாரளமய கொள்கைகளையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் கடுமையாக மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தது.


மார்க்சிஸ்ட் கட்சி எம்பி, எம்எல்ஏ, மந்திரி பதவிக்காக உருவாக வில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் நம்புகிறோம். உழைக்கும் வர்க்க மக்களுக்காக, வர்க்கமற்ற சமூகத்தை படைக்க நாங்கள் போராடுகிறோம். அது தொடர்ந்து சமரசமின்றி நடைபெறும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய சக்திகளை எதிர்க்கும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தை செய்தாலும், தொய்வின்றி போராட்டம் தொடரும்.


திரிணாமூல் கட்சியினர் தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ள வலதுசாரி, இடதுசாரி சக்திகளை சேர்த்து ஒரு மகா கூட்டணி, அதாவது வானவில் கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள். வானவில் பார்க்க அழகாக இருக்கும்; பின்பு காணாமல் போய்விடும். அதேபோல், இந்த கூட்டணியும் நீடித்து இருக்காது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி ஏ முதல் இசட் வரையிலான பல கட்சிகளாக சிதறுண்டன. இவற்றில் எதுவும் தீர்மானிக்க கூடிய சக்தியாக இல்லை. இப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டு சேர்ந்துள்ளது. அறிவுஜீவிகளும் இவர்களோடு சேர்ந்துள்ளனர். மூன்று ‘எம்’ (மணி, மசில், மீடியா) துணையோடு, தற்போது நான்காவதாக ஒரு ‘எம்’ (மாவோயிட்டுகள்) சேர்த்துக் கொண்டு மார்க்சிஸ்ட் ஊழியர்களை தாக்குகிறார்கள்.


மாவோயிசம் என்று ஒன்று இல்லை. சீனாவில் கூட மாவோயிசம் என்ற கொள்கை கிடையாது. தேர்தல் பாதையை நம்பாத, தேர்தலை புறக்கணிக்க கூடிய மாவோயிட்டுகளின் தலைவர், முக்காடு போட்டுக் கொண்டு, “அந்த பெண்மணி (மம்தா பானர்ஜி) முதலமைச்சராக வர வேண்டும்” என்று பேட்டிக் கொடுகிறார்.
ஆனால், அந்த பெண்மணியோ, மாவோயிஸ்ட்டுகள் யார்? எங்கு இருக்கிறார்கள்? அவர்களை பார்க்க முடியவில்லையே என்று கபட நாடகம் ஆடுகிறார்.


ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை தடுத்து நிறுத்தியது யார்? ஒரிசா, ஜார்க்கண்ட் பகுதியில் ரயில் நிலையங்களை தகர்த்தது யார்? மேற்கு வங்க முதலமைச்சருக்கு கண்ணி வெடி வைத்தது யார்? லால்கர் பகுதியில் அரசு நிர்வாகத்தை செயல்பட விடாமல் தடுத்தது யார்?


மாவோயிஸ்ட்களின் வன்முறையால் 2000ம் ஆண்டுக்கு பிறகு 4ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரதமரும், உள்துறை அமைச்சரும், மாவோயிஸ்ட்டுகள்தான் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து என்று கூறுகின்றனர். ஆனால், அந்த அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக உள்ள அந்த அம்மையார், அவர்களுக்கு பாதுகாவலாக உள்ளார்.


மாவோயிஸ்ட்டுகளுடன் அவர் வைத்திருந்த ரகசிய கூட்டணி வெட்ட வெளிச்சமாகி விட்டது. இந்த ரகசிய கூட்டணி நந்திகிராமத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. சிங்கூரில் சீர்குலைவு செய்தது. லார்கர் பகுதியில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகிறது. இடதுசாரிகளை வீழ்த்த வேண்டுமென்பது ஒன்றுதான் அவர்களது நோக்கமாக உள்ளது.


“மாற்றம் தேவை” என்கிறார்கள். நாமும் மாற்றம் தேவை என்கிறோம். மாற்றம் முற்போக்கானதாக இருக்க வேண்டும், பிற்போக்காக இருக்க கூடாது.


32வருட கால இடதுமுன்னணி ஆட்சியில் 84சதவீத நிலங்களை விளிம்பு நிலை மனிதர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம். இந்த நிலங்களை மீண்டும் நிலப்பிரபுக்களுக்கு பிடுங்கி கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?


மேற்கு வங்கத்தில் மொத்த நில விநியோகத்தில் 54சதவீத இடத்தை 28சதவீதம் உள்ள மலைவாழ், தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உதாரணத்தை வேறு எந்த மாநிலத்திலாவது காட்ட முடியுமா? பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மலைவாழ் மக்களுக்கும், தலித் மக்களுக்கும் மேற்கு வங்கத்தில்தான் அதிக அளவில் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி துறை கூறுகிறது.


இவற்றையெல்லாம் மறுத்து, குறிப்பாக மேற்கு மிட்னாப்பூர், புருலியா, பஞ்ச்குரா ஆகிய மாவட்டங்களில் தாக்குதல் நடத்துகின்றனர். ஜார்க்கண்ட் எல்லையை யொட்டி உள்ள மலைப் பகுதியான இந்த மாவட்டங்களில் ‘தாக்கி விட்டு ஓடுவது’ என்ற முறையை பின்பற்றுக்கிறார்கள்.


இந்த 3மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி மிகப்பெரிய சக்தியாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் 59சதவீத வாக்குகளை பெற்று 3லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் சிபிஎம் வெற்றி பெற்றது. லால்கர் பகுதியில் 18ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சிபிஎம் ஊழியர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது. ஆகவே தாக்குகிறார்கள். மலைவாழ் மக்களுக்கும், பெண்களுக்கும், கூட்டுறவு, பஞ்சாயத்துகளுக்கும் உள்ள அதிகாரங்களை துப்பாக்கி முனையில் பிடுங்க வேண்டும்: இதுதான் மாற்றம் என்கிறார்கள். இந்த மூடத்தனத்தை ஏற்க முடியுமா?



மத்திய அரசு கொள்கைகளுக்கும், முதலாளித்துவ கொள்கைகளுக்கும் மாற்றாக மாற்றுக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி கூறி வருகிறது. பொதுத்துறை விற்க, அமெரிக்க சார்பு கொள்கைகளை பின்பற்ற, காப்புரிமை சட்டத்தை திருத்த என அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகள் துணையோடு சிபிஎம் ஊழியர்கள் மீதும், அவர்களுக்கு பின்புலமாக உள்ள மேற்கு வங்க மக்கள் மீதும் தாக்குதல் கட்டவிழ்த்து விட்டுள்ளது.


அவர்கள் எத்தனை ‘எம்’களை கொண்டு தாக்கினாலும் எங்களிடம் உள்ள மார்க்சியம் என்ற ‘எம்’-மை கொண்டு எதிர்கொள்வோம். இந்த கொள்ளை எல்லாவற்றையும் வெல்லும். எந்த தியாகம் செய்தாலும், ரத்தம் சிந்தியாவது செங்கொடியை உயர்த்தி பிடிப்போம். தலைகள் வெட்டி உருட்டப்படலாம். ஒருபோதும் செங்கொடியை தாழாது என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

மக்களுக்காக பட்டை நாமம் போட்ட சிபிஎம் கவுன்சிலர்


1.50லட்சம் மக்கள் வசிக்கும் நெற்குன்றம் முதல்நிலை ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தாமல் தமிழகஅரசு மக்க(ளுக்கு)ளை ஏமாற்றி (பட்டை நாமம் போட்டு ) வருகிறது. என்று நெற்குன்றம் முதல் நிலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் 3வது வார்டு கவுன்சிலர் எஸ்.வெள்ளைசாமி கூறுகிறார்.



நெற்குன்றம் ஊராட்சி கூட்டம் 2008 டிச 24 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வெள்ளைசாமி பட்டை நாமத்துடன் கையில் கோரிக்கை அட்டையையும், திருவோட்டையும் ஏந்நி வந்தார்.


அப்போது அவர் கூறியது வருமாறு:


சென்னை மாநகர எல்லையையொட்டி உள்ள நெற்குன்றம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்று 2007 ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.


நெற்குன்றம் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 21கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 45லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால்தான் அந்த பணத்தை செலவிட முடியும் என்று சிஎம்டிஏ அத்திட்டத்தை துவக்க அனுமதி மறுக்கிறது.


2008ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1.25 கோடி ரூபாய் அளவிற்கு சாலைகள், கால்வாய்கள் பழுதடைந்தன. அவற்றை சரிசெய்ய இதுவரை அரசு நிதி ஒதுக்காமல் உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு பொட்டலங்கள் வழங்க கூட அரசு பணம் தரவில்லை. அதிகாரிகளின் அறிவுரையோடு மளிகை கடைகளில் 48ஆயிரம் ரூபாய்க்கு கடனாக பொருட்கள் வாங்கினோம். அந்த பணத்தை கூட தராமல் உள்ளனர்.


பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், ஆற்காடு சாலையையும் இணைக்கும் என்டி பட்டேல் சாலையை வில்லிவாக்கம் ஒன்றியத்தின் பராமரிப்பில் உள்ளது. பல ஆண்டுகாலமாக பராமரிக்கப்படாமல், குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பணிட, பல லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் பதிவேடுகளில் கணக்கு காட்டியுள்ளனர்.


இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கடையடைப்பு உள்ளிட்ட பல போராட்டம் நடத்தப்பட்டன. துணை முதல்வர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் சாலை அப்படியேதான் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அனைத்து சாலைகளும், கால்வாய்களும் மேலும் பழுதடைந்துள்ளது.


ஊராட்சிக்கு நிதி ஒதுக்குவதில் தமிழக அரசு மாற்றந்தாய் மனப்போக்கோடு நடந்து கொள்கிறது. ஊராட்சிக்கு உரிய நிதி ஒதுக்குவதோடு, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். நகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து தகுதி இருந்தும் ஏமாற்றி வருகிறது.


அரசின் இந்த பாராபட்சத்தை விமர்சிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே அம்பலப்படுத்தும் வகையிலும் பட்டை நாமம்போட்டு, திருவோடு ஏந்தி கூட்டத்திற்கு வந்துள்ளேன் என்றார்.


ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?

அலட்சியம் செய்யப்படும் ஆதிதிராவிட மாணவர்கள் -தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வில் அம்பலம்



53வருடங்களாக இயங்கி வரும் பள்ளியை விற்க முயற்சி நடைபெறுவதால், அப்பள்ளியை ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்க வேண்டுமென்று ஆதம்பாக்கம் பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.



ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்டது ஆதம்பாக்கம். இங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ளது திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளி. இந்த பள்ளி 1956ம் ஆண்டு நடராஜன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கிராம நத்தம் ஊர் புறம்போக்கில், சுமார் 40கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளி முறையாக பராமரிக்கப்படாததால் பாழடைந்து கிடக்கிறது.



1200 மாணவர்கள், 32ஆசிரியர்களுடன் செயல்பட்டு வந்த இந்தப் பள்ளியில் தற்போது 133 மாணவர்களும், 6ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் ஆதிதிராவிடர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை ஆசிரியருக்கு கூட தனியாக ஒரு அறை இல்லை.



இந்த பள்ளி தொடங்கப்பட்டது முதல் அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 20வருடங்கள் வரை பள்ளியை பராமரித்து வந்த நடராஜன், 1977ம் ஆண்டு பெரம்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு பள்ளி நிர்வாகத்தை மாற்றிக் கொடுத்தார். 15வருடங்கள் பள்ளியை நடத்தி வந்த ஜார்ஜ் மறைந்தார். இதன்பின்னர் அந்த பள்ளி உதவி கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.



இந்நிலையில் 1995ம் ஆண்டு கே.பி.வித்யாதரன்-பழனிமுத்து ஆகியோர் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பள்ளியை நடத்தும் உரிமையை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.



“இந்த பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் வித்தியாதரன் மேற்கொள்ளவில்லை. 2004ம் ஆண்டு பள்ளியில் கட்டிடம் கட்ட ஆலந்தூர் நகராட்சி 15லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதனை வித்யாதரன் ஏற்க மறுத்துவிட்டார்.



பள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தை விற்பதற்கு வித்யாதரன் மறைமுகமாக முயற்சி மேற்கொண்டார். அதற்காக சில கட்டிடங்களை புதிதாக கட்டப்போவதாக கூறி இடித்தனர். ஆனால் கட்டிடம் எதுவும் கட்டவில்லை. வேறு சில முறைகேடுகளிலும் வித்யாதரன் ஈடுபட்டார். அவர் மீது பொதுமக்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முயற்சித்தனர்.



இந்நிலையில், 2007 ஏப்ரல் 11ம் தேதி பள்ளி நிர்வாகம் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எத்திராசனிடம் சென்றது. இவரும் பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் எடுக்காத நிலைதான் உள்ளது என்று சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே.பாலச்சந்தர் கூறினார்.



இந்தச்சூழ்நிலையில் அந்தப் பள்ளியை செவ்வாயன்று (டிச.22) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் ஆய்வு செய்தார். இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை, அவரிடம் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கொடுத்தனர்.



“எத்திராஜன் பொறுப்பேற்ற பிறகும் புதிதாக கட்டிடம் கட்ட வில்லை. தற்போது உள்ள ஓடு போட்ட ஷெட்டுகளும் மழை பெய்தால் ஒழுகுகிறது. தலைமை ஆசியருக்கு கூட தனி அறை இல்லை. சத்துணவு சாப்பாடு செய்யவோ, அரிசி பருப்புகளை வைக்கவோ தனித்தனி அறைகள் கிடையாது. ஆசிரியர்கள் உட்கார ஊர் மக்கள் சார்பில் நாற்காலிகள் வாங்கி கொடுத்தோம்.



சிறு மழை பெய்தால கூட பள்ளிக்குள் வெள்ளம் வந்துவிடும்; அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் பள்ளிக்குள் வந்துவிடுகிறது. மழைக்காலங்களில் குட்டையாக காட்சி அளிக்கும் பள்ளிக்கூட மைதானத்திற்கு ஊர்மக்கள் சேர்ந்து, அவ்வப்போது மண் கொட்டி சிறிது மேடாக்கி வைத்திருக்கிறோம். பள்ளிக்கென்று ஒரு காவலாளி கூட கிடையாது.



இரண்டு வருடங்களுக்கு முன்பு கையூட்டு பெற்றுக் கொண்டு புதிதாக இரண்டு ஆசிரியர்களை எத்திராஜன் நியமித்தார். அதனை மாவட்ட கல்வி அதிகாரி ஏற்கவில்லை. ஆகையால், பள்ளியில் உள்ள 6 ஆசிரியர்களின் சம்பளத்தில் தலா 5ஆயிரம் ரூபாய் பிடித்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்.



இந்த பள்ளியின் எல்லைக்கு உட்பட்டு 9ஆயிரம் மக்களை கொண்ட 2371 குடும்பங்கள் உள்ளன. இவர்களில் குறைந்தது 2ஆயிரம் பேராவது மாணவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள் நன்றாக கற்பித்தாலும், குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள்.



கடந்த 25வருடமாகவே பள்ளி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள்; ஆய்வு செய்கிறார்கள். இந்த மாதம் 18ம் தேதி கூட ஆண்டு ஆய்வு நடந்தது. ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பள்ளி இருக்க இருக்க தரம் தாழ்ந்துகொண்டேதான் செல்கிறது.



இந்த பள்ளியை அரசு ஏற்க வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இறையன்பு அப்போது பரிந்துரைத்தார். ஆனால் அரசு மெத்தனமாக உள்ளது. இந்த பள்ளி உருப்பட ஒரே தீர்வு அரசு ஏற்க வேண்டும்.
பள்ளியை சூறையாட மறைமுக முயற்சிகள் நடைபெறுகிறது. அதிகாரிகளும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”


இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Friday, December 25, 2009