Pages

Tuesday, September 23, 2014

தமிழ்த்தென்றலுக்கு மணிமண்டபம்
மக்கள் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா?


தமிழகத்தின் தொழிற்சங்க முன்னோடியும், தமிழறிஞருமான திரு.வி.க.-வுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழறிஞர்கள், தொழிற்சங்கவாதிகளின் எதிர்பார்ப்பு.

எளிய தமிழில், பொருள் பொதிந்த நூல்களை எழுதியதாலும், அபாரமான மேடைப் பேச்சாலும், தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுவர் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்கிற திரு.வி.க. மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் அருகே துண்டலம் என்ற துள்ளம் கிராமத்தில் 1883 ஆகஸ்ட்  26ல் விருதாசலம் - சின்னம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் திரு.வி.க. 1906ல் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கிலேயர் நிறுவனத்தில் கணக்கராகப் பணிக்குச் சேர்ந்த திரு.வி.க. பால கங்காதர திலகர் போன்றோர் தலைமையில் நடைபெற்ற விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டு பணியில் இருந்து வெளியேறினார்.

1909ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது, பொதுத் தொண்டில் ஈடுபடும் நோக்கத்துடன் அங்கிருந்து விலகினார். தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார். திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றி நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.

தமிழார்வம் மிக்கவராக இருந்த அவர், மொழி வளர்ச்சிக்கான சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.  வாழ்க்கை வரலாறுகள் அரசியல நூல்கள், சமய நூல்கள், பாடல் தொகுப்புகள், பயண நூல்கள்  என 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் வாடியா உள்ளிட்டோர் முயற்சியால் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்தின் தலைவராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார்.  1947ல் நடந்த பக்கிங்காம் கர்நாடிக் மில் (பி அண்டு சி மில்) தொழிலாளர் போராட்டத்தை நடத்தியதற்காக காங்கிரஸ் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. தனது புரட்சிமிகு தொழிற்சங்க இயக்கப் பணி பற்றிக் குறிப்பிடுகையில், 1918 ஆம் ஆண்டு முதல் என்னால் இயன்ற அளவு யான் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டு சேவை செய்து வருகிறேன். என் வாழ்க்கை எத்தனையோ கதவடைப்புகளை, வேலை நிறுத்தங்களை, வழக்குகளை, காவல் துறையினரின் தடியடிகளை, துப்பாக்கிச் சூடுகளைக் கண்டது.  நெருக்கடியான நேரங்களில் எனக்கு ஊக்கம் அதிகமாகும். தொண்டின் வேகமே ஊக்கமாகும். அயராத சேவையே களைப்பைப் போக்கும் அருமருந்தாகும், என்றார்.

இவ்வாறு மொழி, தொழிற்சங்கம் என இரு தளங்களிலும் தடம் பதித்த திரு.வி.க. 1955 செப்டம்பர்  17ல் மறைவுற்றார்.


மணிமண்டபம்

இத்தகைய சிறப்பு மிக்க திரு.வி.க. பிறந்த ஊர் போரூரை அடுத்த காரம்பாக்கம் ஊராட்சியில் இருந்தது. தற்போது சென்னை மாநகராட்சியின் 150 வட்டத்திற்குள் வருகிறது. துண்டலம் பகுதியில் திரு.வி.க. சிறப்பைப் போற்றும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, அவரது உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அந்த நூலகம் உள்ள இடத்தில், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், எழுத்தாளர்களும் கோரி வருகின்றனர்.

தோழரை தந்த கொடையாளர்
தோழர் என்ற வார்த்தையை தமிழுக்கு கொடுத்த கொடையாளர் திரு.வி.க. இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் தொழிலாளர் இயக்கத்தின் அழைப்பின் பேரில் சென்ற வாடியா, அங்குள்ளவர்களுக்கு இந்தியாவில், குறிப்பாக சென்னை ஆலைத் தொழிலாளர்களின் அவல நிலைகளை எடுத்துக் கூறினார். அங்கிருந்து சென்னை திரும்பிய, அவருக்கு சென்னை தொழிலாளர் சங்கம் உற்சாக வரவேற்பளித்தது. அக்கூட்டத்தில் வாடியா நிகழ்த்திய ஆங்கில உரையை, திரு.வி.க. மொழி பெயர்த்தார். வாடியா காம்ரேட்ஸ்' என்று தொடங்கியதும், திரு.வி.க. அதனை "தோழர்களே' என மொழி பெயர்த்தார். தொழிலாளர்களின் கரவொலி, விண்ணை முட்டியது. அந்த நிமிடத்திலிருந்து காம்ரேட் என்பதற்கு தோழர் என்ற சொல் வழக்கில் உள்ளது.

சிபிஎம் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ், தமிழக முதலமைச்சருக்கு இவ்வாண்டு மார்ச் 7 அன்று ஒரு கடிதம்எழுதியுள்ளார். அதில், தமிழ்த்தென்றல் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவரும், தமிழகத்தின் முதல் தொழிற்சங்கத்தை தோற்றுவித்தவருமான திரு.வி.க. அவர்களுக்கு, அவர் பிறந்த ஊரில், அவரை நினைவுகூர்ந்திடும் வகையில் மணிமண்டபம் அமைத்து,  அனைத்து தமிழ் ஆர்வலர்கள், தொழிற்சங்க வாதிகளின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத்திலும் இது குறித்து பீம்ராவ் பேசியுள்ளார்.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

அனந்த (ஆக்ரோச) மூர்த்தி


எழுதுவது, கடந்த காலத்தை விமர்சிப்பது, இலக்கிய நயம்பட பேசுவது மட்டுமல்ல; சமகால அரசியலில் குறுக்கீடு செய்வதும் இலக்கியப் பணிதான் என்று வாழ்ந்தவர் யு.ஆர்.அனந்தமூர்த்தி. மதவாதத்திற்கு எதிராக சமரசமின்றி உறுதியோடு போராடிய அவரின் இறப்பை மதவாத வானரங்கள் வெடிவெடித்து குதூகலமிட்டன; அம்மாநில அரசு, அனந்த மூர்த்தி மறைவுக்கு 3 நாள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது. இறுதிச் சடங்கு நாளன்று அரசு அலுவலகங் கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவில் எந்தவொரு எழுத்தாளருக்கும் கிடைக்காத மரியாதை இது.

1965களில் அவர் எழுதிய சமஸ்காரா நாவல் கன்னட இலக்கியத்தின் போக்கை மாற்றி அமைத்தது; திரைப்படமானபோது சமூகத்தில் அதீதமான அதிர்வலையை ஏற்படுத்தியது. வைதீக சனாதன சமூகத்தின் முரண்பாடுகள், மூடநம்பிக்கைகளை அந்நாவல் கேள்விக்குள்ளாக்கியதால் மத அடிப்படைவாதிகளின் வெறுப் புக்கு இலக்கானார். கன்னட நவீன இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவராக பரிணமித்தார். மதம், கடவுள், சாதிக் கட்டமைப்பைக் கடுமையாக சாடியதாலும், அறிவியல் பார்வையில் உண்மைகளை சொன்ன தாலும் தனது இறுதிக்காலம் வரை அவதூறு வழக்குகளுக்கு ஆளானார். ஆனாலும் இறுதி மூச்சுவரை மத வாத, சாதிய எதிர்ப்பில் உறுதியோடு நின்றார்.

கர்நாடக தலித் இயக்கத்துக்கு உத்வேகம் அளித்த மறைந்த டி.ஆர். நாகராஜ், அனந்தமூர்த்தியைத் தனது துரோணராகக் கருதினார். அந்த அளவிற்கு தலித் இலக்கிய, அறிவுச் செயல்பாடுகளுக்கு உத்வேகமும், ஊக்கமும் அளித்தவர் அனந்தமூர்த்தி. பேராசிரியர், துணைவேந்தர், மத்திய பல்கலைக் கழகவேந்தர் எனப் பல பதவி வகித்த போதும், இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீடம், பத்ம பூஷன் விருதுகள் பெற்றபோதும், மதமோதல்கள், தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் போன்றவற்றை எதிர்த்து நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னணியில் நின்றார்.

மறுபுறம், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் அக்கறை கொண்டிருந்தார். மலை நாட்டில் அரிதாகப்பூக்கும் சுரகி மலர்களில் நெஞ்சைப் பறிகொடுத்த அவர் தனது, சுய சரிதை நூலுக்கு சுரகி என்று பெயர் சூட்டி னார். பெங்களூரு வீட்டிலும், மைசூரில் இருந்த தனது அலுவலகத்திலும் மரம், செடி, கொடிகள் சூழ இயற்கையின் காதலனாகவும், பாதுகாவலனாகவும் இருந்தார். இயற்கையைச் சூறையாடும் சில திட்டங்க ளைத் தடுத்து நிறுத்தினார்.

முதுமை ஒருபுறமிருக்க மதவெறியர்கள், செல்போன், இ-மெயில் வாயிலாக கொடுத்த தொந்தரவுகள், மிரட்டல்களைக் கண்ட அரசு, அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது. மோடி தலைமையிலான புதிய ஆட்சி ஏற்படுத்திய மயக்கத்தால் மதவெறியர்களின் தொந்தரவுகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், 2014 ஆகட் 22 அன்று காலமானார். அவருக்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக்குழு சார்பில் செப்டம்பர் 4 அன்று புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய மொழிபெயர்ப்பாளர் மயிலைபாலு, சாதி கட்டமைப்பின் மேல் உள்ள ஒருவர் தனது சுயசாதியை மறுப்பது எளிதல்ல. இஎம்எஸ் போன்ற முன்னோடிகளின் வழியில் அனந்தமூர்த்தி சுயசாதியை மறுத்தார். நவீன கன்னட இலக்கிய போக்கிற்கு வித்திட்டார். கர்நாடக அரசின்  தாய்மொழி வழிக் கல்விச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்தபோது, சற்றும் தயங்காமல் விமர்சித்தார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்து கொண்டே, அந்த மொழி ஆதிக்க மொழியாக; ஆதிக்கம் செலுத்த பயன் படுகிற மொழியாக உள்ளது என  விமர்சனக் கணை தொடுத்தார். மனிதன் மரணமடைந்தாலும், வாழ் நாளில் அவன் செய்த செயல்கள் இற வாத பெரும் புகழைத் தரும். அதற் கொப்ப அனந்தமூர்த்தி வாழ்ந்தார் என்றார்.

அனந்தமூர்த்தியுடனான தனது சந்திப்பு, விவாத அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் ஞாநி, 1950க்குப் பிந்தைய காலகட்டம் எழுத்துக்களின் மறுமலர்ச்சி காலம். எழுத்து ஜனநாயகப்பட தொடங்கியது. வைக்கம் முகமது பஷீர், ஜெயகாந்தன் போன்று அனந்தமூர்த்தி கன்னட இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். சொந்த சாதி, மதத்தை விமர்சிக்காமல் அவற்றை எதிர்க்க முடியாது என்ற பார்வை கொண்டிருந்த அனந்தமூர்த்தி, கிறிஸ்துவ பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதனால் வாடகை வீடு கிடைக்காமல் அவதிப்பட்டார். தமிழ்ச்சூழலில் சொந்தசாதி, மதத்தை விமர்சிக்கும் பாரம்பரியம் பாரதி, பாரதிதாசன், மாதவய்யா என தொடர்ந்தது. இந்தக் கண்ணி அறுபட்டது. நீண்ட இடை வெளிக்குப் பிறகு இடதுசாரி எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத் , பாமா போன்றவர்கள் அந்தப் பணியைத் தொடர்கின்றனர் என்றார்.

தாய்மொழியே மரபுகளைப் பாதுகாக்கிறது என்று கூறும் அனந்த மூர்த்தியிடம், ஏன் தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்று கேட்போது, என்னை விட சிறப்பாக இளம் எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். அவர்கள் எழுதுவதைப் படித்தால் போதாதா? என சக படைப்பாளிகளை மனந்திறந்து பாராட்டினார். அத்தகைய மேன்மையானவர் அவர் என்றும் புகழஞ்சலி செலுத்தினார் ஞாநி.

கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான அவதூறு வழக்குகளை சந்தித்த அனந்தமூர்த்தியின் இறப்பை மத வெறியர்கள் வெடிவெடித்து கொண் டாடினார்கள். இதைவிட மிகச்சிறப்பான அஞ்சலி வேறு எந்த எழுத்தாள னுக்கும் கிடைக்காத ஒன்று என்று கூறிய நாடகவியலாளர் பிரளயன், ராமஜென்ம பூமிக்கான அமைப்பை தோற்றுவித்த கிரிராஜ்கிஷோர் அண்மையில் மறைந்தார். அவரது உடல் மருத்துவமனைக்கு ஒப்படைக் கப்பட்டது; வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கை, சாஸ்திர சம்பிரதாயங்களை எதிர்த்த அனந்தமூர்த்தியின் உடலை அவரது குடும்பத்தினர் சாஸ்திர சம்பிரதாயங்களோடு அடக்கம் செய்தனர் என்ற முரண்பாட்டையும் பார்க்க வேண்டும் என்றார்.

தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்கள் வேறுவேறு தன்மை கொண்டவை. கன்னடம், துளு, தெலுங்கு, உருது, மராத்தி பேசும் மக்களைக் கொண்டு திணித்து உருவாக்கப்பட்ட மாநிலம் கர்நாடகம். அம்மாநிலத்தில் ஒரு பகுதி மக்களிடம் நிர்வாண பூஜை முறை உள்ளது. அது நம்பிக்கை மரபு சார்ந்தது. நிர்வாண பூஜை ஏன் கூடாது? என்று கேட்டதற்காக 2 மாதங்களுக்கு முன்பு அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. கடவுள் மறுப்பையும், நாத்திகத்தை யும் வைத்து வகுப்புவாதத்தை எதிர்க்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் கன்னட சமுதாயத்
தில் அவர் குரல் ஓங்கி ஒலித்தது. மதவெறியர்கள் எரிச்சலடைந்தனர்.

எடியூரப்பா முதலமைச்சரானதும் பாடத்திட்டங்களில் இந்துத்துவா முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. எழுத்தாளர்களைத் திரட்டி அதனை தேசிய விவாதமாக மாற்றினார். சாகித்திய அகாதமி உள்ளிட்ட அமைப்புகளில் பொறுப்பு வகித்து அவற்றில் மாற்றம் கொண்டு வந்தார். தேசிய நாடகப் பள்ளியில் பொறுப்பு வகித்தபோது, தேசிய நாடகப்பள்ளி இந்தி நாடகப் பள்ளி யாகவே உள்ளது என்று விமர்சித்தார். அதன் விருதுகளையும், அதற்கான விதிகளையும் மாற்றி அமைத்தார். கர்நாடகத்தில் அதன் கிளையைக் கொண்டு வந்தார். பண்பாட்டுதளத்தில் அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் பிரளயன் கூறினார்.

அனந்தமூர்த்தியின் படைப்புகள் வாயிலாக அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார் மொழிபெயர்ப்பாளர் ராமானுஜம். தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் கி. அன்பரசன் புகழஞ்சலி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

15-09-2014
தீக்கதிர்-இலக்கியசோலை

Monday, July 21, 2014

கண்ணகி வழிபாடு எங்கே? எவ்வாறு?


பண்பாடு, இனம், மொழி, கலாச்சாரம் என சகலமும் வளர்ச்சியின் வேகத்தில் எப்போதும் தாக்குதலுக்கு உள்ளாகும்.தகுதியுடையதே நிலைத்து நிற்கும். பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல்களை சமாளித்து, தன்னை தகவமைத்துக் கொண்டு தொன்மையோடும், இளமையோடும் தமிழ் இருக்கிறது. தமிழ்மொழியின் தொன்மையை பாதுகாப்பது, வளர்ச்சியை விரைவுபடுத்துவது என இருகால் பாய்ச்சலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பயணிக்கிறது. இதற்கு சான்றாக சென்னையில் ஜூலை 19 அன்று ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கலை இலக்கிய படைப்புகளுக்கென்று தமுஎகச ஒவ்வோராண்டும் 15க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்குகிறது. அதற்கு மகுடமாக தொன்மைசார் ஆய்வு நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இலக்கியத்தில் ஊடாடி நிற்கும் வர்க்கத்தை எப்படிப் பார்ப்பது என்று கற்றுக் கொடுத்த ஆசானும், தமுஎகச நிறுவனர்களில் ஒருவருமான கே.முத்தையா நினைவாக வழங்கப்பட்டது அதிலும் தனிச்சிறப்பு.

இவ்விருதுக்கு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த முனைவர் சிலம்பு ந.செல்வராசு எழுதிய கண்ணகி தொன்மம் நூல் தேர்வு செய்யப்பட்டு, கேடயம், பட்டயம், 20ஆயிரம் ரூபாய் விருது தொகை வழங்கப்பட்டது.

விழாவிற்கு தலைமை தாங்கிய அருணன், தோழர் கே.முத்தையா உள்ளிட்ட தலைவர்களால் துவக்கப்பட்ட தமுஎகச அமைப்புக்கு 40வது ஆண்டு இது என்ற தகவல் பதிவோடு பேச்சை துவக்கி, தமிழர் பண்பாட்டு அடையாளங்கள திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. மஞ்சுவிரட்டு, சேவல் சண்டை போன்ற அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் நிகழ்ச்சிக்கு செல்ல வேட்டிக்கு அனுமதியில்லை என்பதை நினைவு கூர்ந்து உடையில் மட்டும் தமிழ்பண்பாட்டை பார்க்கவில்லை. அது மனித வளர்ச்சி வசதிக்கேற்ப மாற்றம் கொள்ளும். மனமகிழ் மன்ற நிகழ்ச்சிகளில் எந்த உடை உடுத்த வேண்டும் என்று கூறுவது பண்பாட்டு அடக்குமுறையே. பாரம்பரிய உடையை தடுப்பது மனித உரிமை மீறலே என்றார். 
ஆங்கில ஆதிக்கம், இந்தி திணிப்பு, சமஸ்கிருதமயம் என மும்முனைத் தாக்குதலுக்கு தமிழ் ஆளாகி உள்ளது. அதில் ஒன்று 15ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது, 1958ம் ஆண்டு மார்ச் மாதம் ஆர்எஸ்எஸ் சமஸ்கிருதத்தை கற்றுக் கொடுங்கள், வளர்த்தெடுங்கள், பரப்புங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அதனை இப்போது மத்திய அரசு செய்கிறது. என்று வரலாற்று விளக்கம் அளித்தார் அருணன். 
செம்மொழியை வளர்ப்பதென்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா மொழிகளையும் வளர்க்க வேண்டுமல்லவா? ஏனெனில் திராவிட மொழிகளையும், இந்தோ-ஆரிய மொழியான ஒரியாவும் அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில்தான் தொன்மையை காக்க ஒரு விருதும், மொழியை காக்க ஆக.24 அன்று மதுரையில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் போராட்டத்தையும் தமுஎகச நடத்துகிறது என்றும் அருணன் கூறினார்.
விருதினை வழங்கிப் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல், நாட்டுப்புறவியல், மானுடவியல் குறித்த ஆய்வுகள் தமிழ்ச்சமூகத்தில் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆள்கிறவர்களால் திட்டமிட்டு தமிழ் மொழியின் தொன்மைகள் புறக்கணிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. எனவேதான் கண்டுபிடிக்கப்பட்ட 70ஆயிரம் கல்வெட்டுகளில் 50 ஆயிரம் இன்னும் பதிப்பிக்கப்படாமலேயே இருக்கின்றன என்றார். 
விருது பெறும் இந்நூல், சிலப்பதிகாரத்திற்கு முன்பிருந்தே கண்ணகி தொன்மம் (புழக்கத்தில்) இருந்ததை நிறுவுகிறது. தமிழ்ச்சமூகம் இனக்குழு சமூகமாக இருந்து தந்தை வழிச்சமூகமாக மாறுகிற வரை ஒவ்வொரு கட்டத்தையும் நூல் பேசுகிறது. செவ்வியல் இலக்கியங்கள் கண்ணகியையும், நாட்டுபுற இலக்கியங்கள் கோவலனையும் கொண்டாடுகின்றன என்பதற்கு பதில் தேட வேண்டியிருக்கிறது என்றும் வெங்கடேசன் கூறினார். 
ஒரு மாநில அரசு அதிகாரி உங்கள் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. யாரிடமும் கூறாதீர்கள். ஒரு வாரத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் வழங்கப்படும் என்றார். சில மாதம் கழித்து அஞ்சலில் பட்டயமும், பரிசுத்தொகையும் வந்தது. மற்றொரு மாநில அரசு நிகழ்ச்சியில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கு விருது கொடுக்கிறார்கள் என்பதை தெரியாமலே பேசி விட்டு சென்ற பிறகு அதிகாரிகள் விருது கொடுத்தார்கள்.அப்போதெல்லாம் ஏற்படாத நெகிழ்ச்சி தமுஎகச விருது பெறும்போது உருவாகிறது. சிறந்த நூல் என்று 6 நூலுக்கு பரிசு வாங்கி இருக்கிறேன். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக இப்போதெல்லாம் பரிசுக்கு நூல் அனுப்புவதில்லை. ஆனாலும், தமுஎகச தேடிப் பிடித்து எனது நூலுக்கு விருது வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஏற்புரையாற்றிய முனைவர் சிலம்பு நா.செல்வராசு. 
தோழர் கே.முத்தையா அர்ப்பணிப்பின் மறுபெயர் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. வணிக சமூகத்திற்கும், வேளாண் சமூகத்திற்கும் நடைபெற்ற வர்க்கப்போராட்டம் சிலப்பதிகாரம் என்றார் கே.முத்தையா. அவரின் பெயரால் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வேட்டிக் கட்டிக்கொண்டு வரக்கூடாது என்றால் கட்டிக் கொண்டுதான் வருவோம் என்று செல்ல நம்மிடம் ரௌத்திரம் இல்லை என்று எதார்த்தத்தை எடுத்துரைத்தார். 
கண்ணகி வழிபாடு இலங்கையிலும், கேரளத்திலும் இருக்கிறது. இடையில் உள்ள தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்விழாவில் அமைப்பின் பொருளாளர் சு.ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் கி.அன்பரசன், பொருளாளர் நா.பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேசினர்.

நன்றி:
தீக்கதிர்-இலக்கியசோலை
21-07-2014

Monday, June 23, 2014


நாடகங்களை  மழை அடித்துச் சென்றுவிட்டது


சிறுகதைகள் மனங்களை கனக்கச் செய்பவை. சில நேரங்களில் நெருடல்களை, சஞ்சலங்களை சர்வசாதாரண நிகழ்வாகப் பாவிக்கச் செய்பவை. சிறுகதைகள் வாசிக்கும் போது மனம் விம்மும். அதனை நாடகமாக மாற்றி பார்த்தால் அந்த அனுபவம் எப்படியாக இருக்கும்.

மனம் விம்மினால் பாரம் குறைகிறது; வானம் தனது பாரத்தை குறைக்க அவ்வப்போது விம்முகிறது. கோடை தணிந்த அந்த குளிர்காற்று வீசும் இனிய மாலையில், பெசன்ட் நகர் கடற்கரையோரம் ஸ்பேசஸ் அரங்கம் நிறைந்திருந்தது. சிறந்த ஆளுமைகளின் சிறுகதைகள் நாடக வடிவங்களாக உருமாறின. கடவுளை பிச்சைக்காரனாக சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த சிறந்த 100 சிறுகதைகளில் இருந்து 15 கதைகளை தேர்வு செய்து, நாடகமாக உருமாற்றி இருந்தனர். தியேட்டர் லேப் தனது 10 வது ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

குழந்தை திருமணத்தால் இளம் வயதிலேயே விதவையாகி, சாஸ்திர சம்பிரதாயங்களால் சுயத்தை இழந்த ஒரு பெண்ணின் கதை சொல்லும் ந.முத்துச்சாமியின் நீர்மை, புறக்கணிக்கப்படுவது தோல்வியா? என கேள்வி எழுப்பும் எஸ்.ராமகிருஷ்ணனின் மீதமிருக்கும் சொற்கள், குழந்தைகளின் உலகத்தைப் பற்றி பேசும் பி.எஸ்.ராமையாவின் நட்சத்திரக் குழந்தைகள், வறுமையிலும் நேர்மையை பேசும் சுந்தர ராமசாமியின் சீதை மார்க் சீயக்காய்த்தூள்,

கடவுளை பிச்சைக்காரனாக்கிய ஜெயகாந்தனின் குருபீடம்; கடவுளை சக மனிதாக மாற்றிய புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமியும், பூப்பெய்தியதால் தனிமைபடுத்தப்படும், மன உளைச்சலுக்கு உள்ளாகும், உள்ளாக்கப்படும்  இளம்பெண்ணின் மன உளைச்சலை கூறும் அம்பையின்  அம்மா ஒரு கொலை செய்தாள் வறுமையை பேசும் ஜெயகாந்தனின் பொம்மை, பார்வையற்றவர்களின் உலகத்தைப் பேசிய லா.ச.ராமாமிருதத்தின் பச்சைகனவு என ஒன்பது கதைகள் நாடகமாக்கப்பட்டிருந்தன. மற்ற ஆறு கதைகளுக்கான நாடகங்களை மழை அடித்துச் சென்றுவிட்டது. கெடுப்பதூஉம் மழை என்பதற்கேற்ப கலை இலக்கிய ரசிகர்களின் ஆர்வத்தைக் மழை கெடுத்துவிட்டது என்றே சொல்லாம்.

இருப்பினும், ஜெயராவ் சேவூரியின் இயக்கத்தில் சிறுகதைகளைப் போன்றே நாடகங்களும் கனகச்சிதமாக நிகழ்த்தப்பட்டன. மழையால் அரங்க வடிவமைப்பின்றி, குறைந்தபட்ச ஒளி அமைப்போடு, இளங்கலைஞர்களின் தங்கள் அபாரமான நடிப்பாற்றலால் பார்வையாளர்களை நகரவிடாமல் செய்தனர். படித்த போது ஏற்பட்ட மன உணர்வைப் போலவே நாடகமாக பார்க்கும் போதும் வலியும், வேதனையும், சிரிப்பும், எகத்தாளமும் பீறிட்டன.

ஒவ்வொரு கதையின் தலைப்பையும், எழுத்தாளரின் பெயரையும் அறிவித்தபடியே இருட்டில் தொடங்கும் நாடகம், இருளிலேயே முடிந்தது. அடுத்த கதைக்கான நாடகம் என்பது விளக்கை அணைதது எரிய விடுவது என்பதே அடையாளமாக இருந்தது. ஒன்றிரண்டு இடங்களைத் தவிர மற்ற நேரங்களில் இசைக்கருவிகளைப் பயன்படுத்தாமல், குரலின் மூலமே உணர்வுகளைப் பிரதிபலித்தனர்.

திரைச்சீலைகள், அரங்கப் பயன்பாட்டுப் பொருட்கள் இன்னும் பிற பிற வடிவமைப்பின்றி  நாடகங்கள்  அரங்கேறின. ஒன்றிரண்டு நாடகங்களை குழுவாகவும், மற்றவற்றவை ஓரங்க நாடகமாகவும் நிகழ்த்தினர். பெரும்பாலும் ஒப்பனைகளை தவிர்த்த மனிதர்கள் சாதாரண கதை சொல்லிகளாகவும் கதாப்பாத்திரங்களாகவும் உருமாறிக் கொண்டே பர்வையாளர்களை கவர்ந்திழுத்தனர். நாடக நிகழ்வு நேரம் 5 முதல் 15 நிமிடங்கள் வரை இருந்தது.

ஏற்கெனவே படித்தவர்களை மீண்டும் படிக்கவும், படிக்காதவர்களை அந்தக் கதைகளைத் தேடிப் படிக்கவும் தூண்டும் வகையிலும் நாடகங்கள் இருந்தன என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும்,  கதைகளில் இல்லாத சில வசனங்கள், சில உணர்வுகள் நாடகத்தில் வெளிப்பட்டன. அவை கதைக்கு பொருந்துவதாகவே இருந்தன என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனும் கூறியது வெறும் புகழ்ச்சியல்ல.

Monday, May 19, 2014

பட்டுக்கோட்டையின் இடம் காலியாகவே உள்ளது

பாமர தமிழில் ஏழைகளின் அரசியலைப் பேசியவன். ‘மக்கள் கவிஞர்’ என கொண்டாடப்பட்டவன். எளிய மொழிநடைக்கு சொந்தக்காரன் ப(பா)ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.29 வயதே வாழ்ந்தாலும் என்றைக்கும் வியக்க வைக்கும் படைப்பாளி. திரைப்பாடல்களை பாமர மொழியில் ‘ஜெட்’ வேகத்தில் மக்கள் மொழி நடைக்கு கொண்டு வந்த மாபெரும் கலைஞன். 

‘சின்னப்பயலே, சின்னப் பயலே’ என அழைத்து பண்டிதர்களுக்குப் பாடம் சொன்ன பட்டுக்கோட்டை, திரை உலகில் புதிய தடத்தை உருவாக்கியவர். இருக்கிற குறைகளையும், வர வேண்டிய நிறைகளையும் சுட்டிக்காட்டிய அவர், பாட்டாளிகளின் தேவைகளை, ஆசைகளை எதிர்பார்ப்புகளைப் பாடல்களாக வடித்தார்; உணர்வுகளைத் தட்டி எழுப்பினார்.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், சக பாடலாசிரியர்கள் என அனைவரும் புருவம் உயர்த்தி வியக்கும் வகையில் மெட்டுக்கட்டினார். அவரது குருதியில் தோய்ந்த உணர்வுகளுக்குப் பொருத்தமாக 1959ல் கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ பட்டத்தை வழங்கியது.அந்த மகத்தான கலைஞனின் ஆவணப் படத்தை முனைவர் பு.சாரோன் உருவாக்கி உள்ளார். அண்மையில் சென்னையில் நடை பெற்ற விழாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அதனை வெளியிட, இசைஞானி இளையராஜா பெற்றுக் கொண்டார்.

பட்டுக்கோட்டையின் பெருமை, ஆளுமை, சுயமரியாதை போன்றவற்றை பெருமையோடு கூறிய இளையராஜா, “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மொழி, சிந்தனை, சொல்லோட்டம், தெளிந்த நீரோடையைப் போன்ற நடை இருக்கிறதே, அந்த இடம் இன்றும் திரைத்துறையில் காலி யாகத்தான் இருக்கிறது. உடுமலை நாராயண கவி, பாபனாசம் சிவன், தஞ்சை ராமையா தாஸ், கே.டி.சந்தானம் போன்றோர் பாடல்கள் எழுத, கவியரசராய் கண்ணதாசன் வலம் வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டையார் தன் எளிய சொற்களால் பாமர மொழிநடையில் தமிழ் மக்களை மகிழ்வித்தார். பரத நாட்டியத்திற்கு அவர் எழுதிய பாடல்களும் வளம்மிக்கதாக இருந்தன” என்ற அனுபவத்தை மொழிந்தார்.\

“சின்னப் பயலே... சின்னப் பயலே... சேதி கேளடா,” “தூங்காதே தம்பி தூங்காதே...” என எளிய நடையில் அவர் எழுதிய பல பாடல்களை ரசித்திருக்கிறேன். எம்.எஸ்.விஸ் வநாதன் இசையில் பாண்டித்தேவன் படத்தில் வரும், “தேனாறும் பாயுது... செங்கதிரும் சாயுது... ஆனாலும் மக்கள் வயிறு காயுது...” என்ற பாடலை நான் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். பட்டுக்கோட்டையின் ரசிகனாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்ற அவரின் பேச்சு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2ம் வகுப்பு வரை மட்டுமே படித்த பட்டுக் கோட்டை, ‘பள்ளிகூடம் இல்லாத ஊருக்கு படிக்கப் போறேண்டா; அங்கே படிக்க வேண்டியது நிறைய இருக்குது படிச்சிட்டு வாறேண்டா’ என்று எழுதினார். பாட்டாளி படைப்பாளியாக மாறி, படைப்புக்கேற்ப வாழ்ந்தார்.

பாரதியின் அக்னி குஞ்சாக காதல் பாடல்களிலும் கம்யூனிசத்தை புகுத்திய அசாதாரண படைப்பாளி பட்டுக்கோட்டை.“திராவிட இயக்கத்திலிருந்து புறப்பட்ட அவரைக் கம்யூனிச இயக்கம் வரித்துக் கொண்டது” என்று மன்னர்மன்னன் பாரதி தாசன் குறிப்பிட்டார். நதி கடலை நோக்கிப் பாயும், பாட்டாளியும் அப்படித்தானே! பாரதியையும், பாரதிதாசனையும், பட்டுக்கோட்டையையும் முப்பெரும் கவிஞர்களாக அங்கீகரித்து, அவர்களை இன்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருப்பது தமுஎகச-தானே என்ற பொருத்தப்பாடு நினைவுக்கு வந்தது.

“வால்மீகி ராமாயணத்தை எழுதி முடித்ததும், அனுமன் ஒரு ராமாயணத்தை எழுதி இருக்கிற தகவல் கிடைக்கிறது. உடன டியாகக் கிளம்பி சென்று அனுமனை சந்திக்கிறார் வால்மீகி. அனுமனும் வாழை இலையில், தான் எழுதி வைத்திருந்த ராமாயணத்தை காட்டுகிறான். அதனைப் படித்துப் பார்த்து வியந்துபோன வால்மீகி, உன் ராமாயணம் வெளியானால் நான் எப்படி உலகிற்குத் தெரிவேன் என வினவுகிறார். உடனே அனுமன், ராமாயணத்தை எழுதி வைத்திருந்த வாழை இலையைக் கசக்கி வாயில் போட்டுக் கொள்கிறான். என்ன காரியம் செய்கிறீர்கள் என்று வால்மீகி பதறுகிறார். உடனே அனுமன் கூறுகிறான், உங்களை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ராமாயணத்தை எழுதினீர்கள். நான் ராமனின் பெருமைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதினேன் என்றார். உலகத்தைத் தெரிந்து கொள்ள பட்டுக்கோட்டை பாட்டு எழுதினார். பட்டுக்கோட்டையின் உலகத்தை தெரிந்து கொள்ள இந்த ஆவணப் படம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார் இறையன்பு ஐஏஎஸ்.

“காய்ந்த பயிர்கள் எல்லாம் கதிர்களைக் கக்கின’ என்ற புலமை வேறு யாருக்கு இருக்கு? இருக்கமுடியும்? பாட்டாளிகளிடம் இருந்துதான் பாடல்கள் உருவாகின. அது இயற்கையாகவே பட்டுக்கோட்டையிடம் இருந்தது. சூழ்நிலைக்குப் பாட்டு எழுதியவர்களுக்கு மத்தியில் சூழ்நிலையை மாற்றப்பாட்டு எழுதியவர் பட்டுக் கோட்டை” என்று இறையன்பு கூறினார்.

“கவிஞன் புதிதாக சொல்ல வேண்டும். இருட்டு என்பதை குறைந்த வெளிச்சம் என்றான் பாரதி. குவிந்து, பருத்து, அவசர மாய் சுருங்கி என சங்(கு)கை வர்ணித்தான் ஒரு கவிஞன். அதேபோன்றுதான் பட்டுக்கோட்டையும். காவிரி ஆற்றில் கால்நனையும் அளவிற்கு தண்ணீர் ஓடுகிறது. அதனை ‘கால் பதுங்கும் ஈரத்திலே’ என்று வர்ணித்தான். அதுதான் பட்டுக்கோட்டை” என்று எழுத்தாளர் பிரபஞ்சனும்,

“பட்டுக்கோட்டை எழுதிய பாடல்கள் தமிழ் உலகிற்கு வழிகாட்டும் கவிதைகள்” என்று கவிஞர் பொன்னடியானும், “வாழ்க்கை வழக்காறுகளை இலக் கியத்தில் புகுத்தியவர்” என கஜேந்திரனும் பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறத்தை சிலாகித்தனர்.

29 ஆண்டுகால வாழ்க்கையை ஆழமாகவும், அகலமாகவும் உழுதுவிட்டுச் சென்ற பட்டுக்கோட்டையைப் பற்றி 55 ஆண்டுக ளுக்குப் பிறகும் பேசிக் கொண்டிருக்கிறோம். மக்கள் கவிஞர் என்பதற்கு அவரின் பாடல்கள் எப்போதும் உயிர்ப்போடு இருப்பதே சாட்சி.

பட்டுக்கோட்டையின் பாட்டு என்றைக் குமே பதினெட்டு சுவைக் கூட்டுதான்.

நன்றி தீக்கதிர்
19/05/2014