பட்டுக்கோட்டையின் இடம் காலியாகவே உள்ளது
பாமர தமிழில் ஏழைகளின் அரசியலைப் பேசியவன். ‘மக்கள் கவிஞர்’ என கொண்டாடப்பட்டவன். எளிய மொழிநடைக்கு சொந்தக்காரன் ப(பா)ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.29 வயதே வாழ்ந்தாலும் என்றைக்கும் வியக்க வைக்கும் படைப்பாளி. திரைப்பாடல்களை பாமர மொழியில் ‘ஜெட்’ வேகத்தில் மக்கள் மொழி நடைக்கு கொண்டு வந்த மாபெரும் கலைஞன்.
‘சின்னப்பயலே, சின்னப் பயலே’ என அழைத்து பண்டிதர்களுக்குப் பாடம் சொன்ன பட்டுக்கோட்டை, திரை உலகில் புதிய தடத்தை உருவாக்கியவர். இருக்கிற குறைகளையும், வர வேண்டிய நிறைகளையும் சுட்டிக்காட்டிய அவர், பாட்டாளிகளின் தேவைகளை, ஆசைகளை எதிர்பார்ப்புகளைப் பாடல்களாக வடித்தார்; உணர்வுகளைத் தட்டி எழுப்பினார்.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், சக பாடலாசிரியர்கள் என அனைவரும் புருவம் உயர்த்தி வியக்கும் வகையில் மெட்டுக்கட்டினார். அவரது குருதியில் தோய்ந்த உணர்வுகளுக்குப் பொருத்தமாக 1959ல் கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ பட்டத்தை வழங்கியது.அந்த மகத்தான கலைஞனின் ஆவணப் படத்தை முனைவர் பு.சாரோன் உருவாக்கி உள்ளார். அண்மையில் சென்னையில் நடை பெற்ற விழாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அதனை வெளியிட, இசைஞானி இளையராஜா பெற்றுக் கொண்டார்.
பட்டுக்கோட்டையின் பெருமை, ஆளுமை, சுயமரியாதை போன்றவற்றை பெருமையோடு கூறிய இளையராஜா, “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மொழி, சிந்தனை, சொல்லோட்டம், தெளிந்த நீரோடையைப் போன்ற நடை இருக்கிறதே, அந்த இடம் இன்றும் திரைத்துறையில் காலி யாகத்தான் இருக்கிறது. உடுமலை நாராயண கவி, பாபனாசம் சிவன், தஞ்சை ராமையா தாஸ், கே.டி.சந்தானம் போன்றோர் பாடல்கள் எழுத, கவியரசராய் கண்ணதாசன் வலம் வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டையார் தன் எளிய சொற்களால் பாமர மொழிநடையில் தமிழ் மக்களை மகிழ்வித்தார். பரத நாட்டியத்திற்கு அவர் எழுதிய பாடல்களும் வளம்மிக்கதாக இருந்தன” என்ற அனுபவத்தை மொழிந்தார்.\
“சின்னப் பயலே... சின்னப் பயலே... சேதி கேளடா,” “தூங்காதே தம்பி தூங்காதே...” என எளிய நடையில் அவர் எழுதிய பல பாடல்களை ரசித்திருக்கிறேன். எம்.எஸ்.விஸ் வநாதன் இசையில் பாண்டித்தேவன் படத்தில் வரும், “தேனாறும் பாயுது... செங்கதிரும் சாயுது... ஆனாலும் மக்கள் வயிறு காயுது...” என்ற பாடலை நான் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். பட்டுக்கோட்டையின் ரசிகனாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்ற அவரின் பேச்சு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
2ம் வகுப்பு வரை மட்டுமே படித்த பட்டுக் கோட்டை, ‘பள்ளிகூடம் இல்லாத ஊருக்கு படிக்கப் போறேண்டா; அங்கே படிக்க வேண்டியது நிறைய இருக்குது படிச்சிட்டு வாறேண்டா’ என்று எழுதினார். பாட்டாளி படைப்பாளியாக மாறி, படைப்புக்கேற்ப வாழ்ந்தார்.
பாரதியின் அக்னி குஞ்சாக காதல் பாடல்களிலும் கம்யூனிசத்தை புகுத்திய அசாதாரண படைப்பாளி பட்டுக்கோட்டை.“திராவிட இயக்கத்திலிருந்து புறப்பட்ட அவரைக் கம்யூனிச இயக்கம் வரித்துக் கொண்டது” என்று மன்னர்மன்னன் பாரதி தாசன் குறிப்பிட்டார். நதி கடலை நோக்கிப் பாயும், பாட்டாளியும் அப்படித்தானே! பாரதியையும், பாரதிதாசனையும், பட்டுக்கோட்டையையும் முப்பெரும் கவிஞர்களாக அங்கீகரித்து, அவர்களை இன்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருப்பது தமுஎகச-தானே என்ற பொருத்தப்பாடு நினைவுக்கு வந்தது.
“வால்மீகி ராமாயணத்தை எழுதி முடித்ததும், அனுமன் ஒரு ராமாயணத்தை எழுதி இருக்கிற தகவல் கிடைக்கிறது. உடன டியாகக் கிளம்பி சென்று அனுமனை சந்திக்கிறார் வால்மீகி. அனுமனும் வாழை இலையில், தான் எழுதி வைத்திருந்த ராமாயணத்தை காட்டுகிறான். அதனைப் படித்துப் பார்த்து வியந்துபோன வால்மீகி, உன் ராமாயணம் வெளியானால் நான் எப்படி உலகிற்குத் தெரிவேன் என வினவுகிறார். உடனே அனுமன், ராமாயணத்தை எழுதி வைத்திருந்த வாழை இலையைக் கசக்கி வாயில் போட்டுக் கொள்கிறான். என்ன காரியம் செய்கிறீர்கள் என்று வால்மீகி பதறுகிறார். உடனே அனுமன் கூறுகிறான், உங்களை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ராமாயணத்தை எழுதினீர்கள். நான் ராமனின் பெருமைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதினேன் என்றார். உலகத்தைத் தெரிந்து கொள்ள பட்டுக்கோட்டை பாட்டு எழுதினார். பட்டுக்கோட்டையின் உலகத்தை தெரிந்து கொள்ள இந்த ஆவணப் படம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார் இறையன்பு ஐஏஎஸ்.
“காய்ந்த பயிர்கள் எல்லாம் கதிர்களைக் கக்கின’ என்ற புலமை வேறு யாருக்கு இருக்கு? இருக்கமுடியும்? பாட்டாளிகளிடம் இருந்துதான் பாடல்கள் உருவாகின. அது இயற்கையாகவே பட்டுக்கோட்டையிடம் இருந்தது. சூழ்நிலைக்குப் பாட்டு எழுதியவர்களுக்கு மத்தியில் சூழ்நிலையை மாற்றப்பாட்டு எழுதியவர் பட்டுக் கோட்டை” என்று இறையன்பு கூறினார்.
“கவிஞன் புதிதாக சொல்ல வேண்டும். இருட்டு என்பதை குறைந்த வெளிச்சம் என்றான் பாரதி. குவிந்து, பருத்து, அவசர மாய் சுருங்கி என சங்(கு)கை வர்ணித்தான் ஒரு கவிஞன். அதேபோன்றுதான் பட்டுக்கோட்டையும். காவிரி ஆற்றில் கால்நனையும் அளவிற்கு தண்ணீர் ஓடுகிறது. அதனை ‘கால் பதுங்கும் ஈரத்திலே’ என்று வர்ணித்தான். அதுதான் பட்டுக்கோட்டை” என்று எழுத்தாளர் பிரபஞ்சனும்,
“பட்டுக்கோட்டை எழுதிய பாடல்கள் தமிழ் உலகிற்கு வழிகாட்டும் கவிதைகள்” என்று கவிஞர் பொன்னடியானும், “வாழ்க்கை வழக்காறுகளை இலக் கியத்தில் புகுத்தியவர்” என கஜேந்திரனும் பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறத்தை சிலாகித்தனர்.
29 ஆண்டுகால வாழ்க்கையை ஆழமாகவும், அகலமாகவும் உழுதுவிட்டுச் சென்ற பட்டுக்கோட்டையைப் பற்றி 55 ஆண்டுக ளுக்குப் பிறகும் பேசிக் கொண்டிருக்கிறோம். மக்கள் கவிஞர் என்பதற்கு அவரின் பாடல்கள் எப்போதும் உயிர்ப்போடு இருப்பதே சாட்சி.
பட்டுக்கோட்டையின் பாட்டு என்றைக் குமே பதினெட்டு சுவைக் கூட்டுதான்.
நன்றி தீக்கதிர்
19/05/2014
நன்றி தீக்கதிர்
19/05/2014
No comments:
Post a Comment