Pages

Tuesday, September 23, 2014

அனந்த (ஆக்ரோச) மூர்த்தி


எழுதுவது, கடந்த காலத்தை விமர்சிப்பது, இலக்கிய நயம்பட பேசுவது மட்டுமல்ல; சமகால அரசியலில் குறுக்கீடு செய்வதும் இலக்கியப் பணிதான் என்று வாழ்ந்தவர் யு.ஆர்.அனந்தமூர்த்தி. மதவாதத்திற்கு எதிராக சமரசமின்றி உறுதியோடு போராடிய அவரின் இறப்பை மதவாத வானரங்கள் வெடிவெடித்து குதூகலமிட்டன; அம்மாநில அரசு, அனந்த மூர்த்தி மறைவுக்கு 3 நாள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது. இறுதிச் சடங்கு நாளன்று அரசு அலுவலகங் கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவில் எந்தவொரு எழுத்தாளருக்கும் கிடைக்காத மரியாதை இது.

1965களில் அவர் எழுதிய சமஸ்காரா நாவல் கன்னட இலக்கியத்தின் போக்கை மாற்றி அமைத்தது; திரைப்படமானபோது சமூகத்தில் அதீதமான அதிர்வலையை ஏற்படுத்தியது. வைதீக சனாதன சமூகத்தின் முரண்பாடுகள், மூடநம்பிக்கைகளை அந்நாவல் கேள்விக்குள்ளாக்கியதால் மத அடிப்படைவாதிகளின் வெறுப் புக்கு இலக்கானார். கன்னட நவீன இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவராக பரிணமித்தார். மதம், கடவுள், சாதிக் கட்டமைப்பைக் கடுமையாக சாடியதாலும், அறிவியல் பார்வையில் உண்மைகளை சொன்ன தாலும் தனது இறுதிக்காலம் வரை அவதூறு வழக்குகளுக்கு ஆளானார். ஆனாலும் இறுதி மூச்சுவரை மத வாத, சாதிய எதிர்ப்பில் உறுதியோடு நின்றார்.

கர்நாடக தலித் இயக்கத்துக்கு உத்வேகம் அளித்த மறைந்த டி.ஆர். நாகராஜ், அனந்தமூர்த்தியைத் தனது துரோணராகக் கருதினார். அந்த அளவிற்கு தலித் இலக்கிய, அறிவுச் செயல்பாடுகளுக்கு உத்வேகமும், ஊக்கமும் அளித்தவர் அனந்தமூர்த்தி. பேராசிரியர், துணைவேந்தர், மத்திய பல்கலைக் கழகவேந்தர் எனப் பல பதவி வகித்த போதும், இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீடம், பத்ம பூஷன் விருதுகள் பெற்றபோதும், மதமோதல்கள், தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் போன்றவற்றை எதிர்த்து நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னணியில் நின்றார்.

மறுபுறம், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் அக்கறை கொண்டிருந்தார். மலை நாட்டில் அரிதாகப்பூக்கும் சுரகி மலர்களில் நெஞ்சைப் பறிகொடுத்த அவர் தனது, சுய சரிதை நூலுக்கு சுரகி என்று பெயர் சூட்டி னார். பெங்களூரு வீட்டிலும், மைசூரில் இருந்த தனது அலுவலகத்திலும் மரம், செடி, கொடிகள் சூழ இயற்கையின் காதலனாகவும், பாதுகாவலனாகவும் இருந்தார். இயற்கையைச் சூறையாடும் சில திட்டங்க ளைத் தடுத்து நிறுத்தினார்.

முதுமை ஒருபுறமிருக்க மதவெறியர்கள், செல்போன், இ-மெயில் வாயிலாக கொடுத்த தொந்தரவுகள், மிரட்டல்களைக் கண்ட அரசு, அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது. மோடி தலைமையிலான புதிய ஆட்சி ஏற்படுத்திய மயக்கத்தால் மதவெறியர்களின் தொந்தரவுகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், 2014 ஆகட் 22 அன்று காலமானார். அவருக்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக்குழு சார்பில் செப்டம்பர் 4 அன்று புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய மொழிபெயர்ப்பாளர் மயிலைபாலு, சாதி கட்டமைப்பின் மேல் உள்ள ஒருவர் தனது சுயசாதியை மறுப்பது எளிதல்ல. இஎம்எஸ் போன்ற முன்னோடிகளின் வழியில் அனந்தமூர்த்தி சுயசாதியை மறுத்தார். நவீன கன்னட இலக்கிய போக்கிற்கு வித்திட்டார். கர்நாடக அரசின்  தாய்மொழி வழிக் கல்விச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்தபோது, சற்றும் தயங்காமல் விமர்சித்தார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்து கொண்டே, அந்த மொழி ஆதிக்க மொழியாக; ஆதிக்கம் செலுத்த பயன் படுகிற மொழியாக உள்ளது என  விமர்சனக் கணை தொடுத்தார். மனிதன் மரணமடைந்தாலும், வாழ் நாளில் அவன் செய்த செயல்கள் இற வாத பெரும் புகழைத் தரும். அதற் கொப்ப அனந்தமூர்த்தி வாழ்ந்தார் என்றார்.

அனந்தமூர்த்தியுடனான தனது சந்திப்பு, விவாத அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் ஞாநி, 1950க்குப் பிந்தைய காலகட்டம் எழுத்துக்களின் மறுமலர்ச்சி காலம். எழுத்து ஜனநாயகப்பட தொடங்கியது. வைக்கம் முகமது பஷீர், ஜெயகாந்தன் போன்று அனந்தமூர்த்தி கன்னட இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். சொந்த சாதி, மதத்தை விமர்சிக்காமல் அவற்றை எதிர்க்க முடியாது என்ற பார்வை கொண்டிருந்த அனந்தமூர்த்தி, கிறிஸ்துவ பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதனால் வாடகை வீடு கிடைக்காமல் அவதிப்பட்டார். தமிழ்ச்சூழலில் சொந்தசாதி, மதத்தை விமர்சிக்கும் பாரம்பரியம் பாரதி, பாரதிதாசன், மாதவய்யா என தொடர்ந்தது. இந்தக் கண்ணி அறுபட்டது. நீண்ட இடை வெளிக்குப் பிறகு இடதுசாரி எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத் , பாமா போன்றவர்கள் அந்தப் பணியைத் தொடர்கின்றனர் என்றார்.

தாய்மொழியே மரபுகளைப் பாதுகாக்கிறது என்று கூறும் அனந்த மூர்த்தியிடம், ஏன் தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்று கேட்போது, என்னை விட சிறப்பாக இளம் எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். அவர்கள் எழுதுவதைப் படித்தால் போதாதா? என சக படைப்பாளிகளை மனந்திறந்து பாராட்டினார். அத்தகைய மேன்மையானவர் அவர் என்றும் புகழஞ்சலி செலுத்தினார் ஞாநி.

கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான அவதூறு வழக்குகளை சந்தித்த அனந்தமூர்த்தியின் இறப்பை மத வெறியர்கள் வெடிவெடித்து கொண் டாடினார்கள். இதைவிட மிகச்சிறப்பான அஞ்சலி வேறு எந்த எழுத்தாள னுக்கும் கிடைக்காத ஒன்று என்று கூறிய நாடகவியலாளர் பிரளயன், ராமஜென்ம பூமிக்கான அமைப்பை தோற்றுவித்த கிரிராஜ்கிஷோர் அண்மையில் மறைந்தார். அவரது உடல் மருத்துவமனைக்கு ஒப்படைக் கப்பட்டது; வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கை, சாஸ்திர சம்பிரதாயங்களை எதிர்த்த அனந்தமூர்த்தியின் உடலை அவரது குடும்பத்தினர் சாஸ்திர சம்பிரதாயங்களோடு அடக்கம் செய்தனர் என்ற முரண்பாட்டையும் பார்க்க வேண்டும் என்றார்.

தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்கள் வேறுவேறு தன்மை கொண்டவை. கன்னடம், துளு, தெலுங்கு, உருது, மராத்தி பேசும் மக்களைக் கொண்டு திணித்து உருவாக்கப்பட்ட மாநிலம் கர்நாடகம். அம்மாநிலத்தில் ஒரு பகுதி மக்களிடம் நிர்வாண பூஜை முறை உள்ளது. அது நம்பிக்கை மரபு சார்ந்தது. நிர்வாண பூஜை ஏன் கூடாது? என்று கேட்டதற்காக 2 மாதங்களுக்கு முன்பு அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. கடவுள் மறுப்பையும், நாத்திகத்தை யும் வைத்து வகுப்புவாதத்தை எதிர்க்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் கன்னட சமுதாயத்
தில் அவர் குரல் ஓங்கி ஒலித்தது. மதவெறியர்கள் எரிச்சலடைந்தனர்.

எடியூரப்பா முதலமைச்சரானதும் பாடத்திட்டங்களில் இந்துத்துவா முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. எழுத்தாளர்களைத் திரட்டி அதனை தேசிய விவாதமாக மாற்றினார். சாகித்திய அகாதமி உள்ளிட்ட அமைப்புகளில் பொறுப்பு வகித்து அவற்றில் மாற்றம் கொண்டு வந்தார். தேசிய நாடகப் பள்ளியில் பொறுப்பு வகித்தபோது, தேசிய நாடகப்பள்ளி இந்தி நாடகப் பள்ளி யாகவே உள்ளது என்று விமர்சித்தார். அதன் விருதுகளையும், அதற்கான விதிகளையும் மாற்றி அமைத்தார். கர்நாடகத்தில் அதன் கிளையைக் கொண்டு வந்தார். பண்பாட்டுதளத்தில் அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் பிரளயன் கூறினார்.

அனந்தமூர்த்தியின் படைப்புகள் வாயிலாக அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார் மொழிபெயர்ப்பாளர் ராமானுஜம். தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் கி. அன்பரசன் புகழஞ்சலி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

15-09-2014
தீக்கதிர்-இலக்கியசோலை

No comments: