Pages

Tuesday, December 10, 2013

பல்லுபோனாலும் சொல்லுபோனதில்லை





அவரது பெண்வேடம் ஊரெல்லாம் பிரபலமானது. முதன்முறை யாக அவரைப் பார்ப்பவர்கள் கிராமத்துக் கிழவியென்றே நினைப்பார்கள். அவர் மேடையேறினால் எள்ளலும், துள்ளலும் மழையாய் பொழியும். பொக்கை வாயிலிருந்து விழும் வார்த்தைகள் சிந்தனை மிக்க சிரிப்பு குண்டுகளாக விழும். குரல் வளத்தில் வாலிபனும் தோற்றுப்போக வேண்டும். பள்ளிப்படிப்பு ஓரளவுதான் என்றாலும் பாட்டு கட்டி பாடுவதும், கதைகளாக வர்ணிப்பதும், இளசுகளையும் சுண்டி இழுத்து உசுப்புவதிலும்  என்றும் அவர் இளைஞராக இருந்தார்.

கலை சிந்தனையைத் தூண்ட வேண்டும், கருத்தைப் பரப்ப வேண்டும், நீதி கேட்க வேண்டும் அதுதான் கலை என்பதை உள்வாங்கிக் கொண்ட பாவலர் ஓம்முத்துமாரி கூத்துக்கலையில் நவீன உத்திகளைக் கையாண்டார். மேடைகளில் தனது கரகரத்த குரலால் பொதுவுடைமை கருத்துக்களை கந்தகத் துகள்களாக வீசினார். 70 ஆண்டுகள் சுழன்று ஆடிய பாவலர் ஓம் முத்துமாரியின் கால்கள்  2013 நவ 14 அன்று 80 ஆவது வயதில் ஆட்டத்தை நிறுத்திக்  கொண்டன. அவரின் கரகரத்த குரலும் காற்றில் கரைந்து போனது...

தமிழக அரசின் கலைமாமணி விருது, நவரசக் கலைஞர், இசை நாடக நகைச்சுவைக் கலைஞர், கிராமியக் கலைச்சக்ரவர்த்தி, கலை முதுமணி, மரகதமணி தமுஎகச-வின் நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது என பல விருதுகளைப் பெற்றபோதும் தனது அரசியல் களத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை.

கிராமிய கலைகளில் நவீனம்...

மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான கலைச்சொத்தான பாவலர் ஓம் முத்து மாரிக்கு அக்கட்சியின் தென்சென்னை மாவட்ட விசேஷ கிளை-4ன் சார்பில் டிச.4 அன்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சிராஜூதின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் அருணன் ஓம் முத்துமாரியிடம் பற்கள் போனாலும் சொற்கள் தெளிவாக வந்தன. நாட்டுப் புறக்கலைகளை சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் பயன்படுத்தினார்கள். வர்க்கப் போராட்டத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்தியது. அதனை முழுமையாக அடையாளம் காணத் தவறிவிட்டோம் என்று பாராட்டு முன்னோட்டம் விமர்சனம் என மாறிய கோணங்களுடன் பேச்சைத் தொடங்கினார்.

கிராமியக் கலைகளை பாதுகாப்பது என்பது ஏதோ, அதன் வடிவத்தை பாதுகாப்பது மட்டுமல்ல. வடிவத்தினூடாக செய்தியையும் சொல்ல வேண்டும். கிராமியக் கலைகளுக்குள் நவீன சிந்தனைகளைப் புகுத்த வேண்டும். அப்போதுதான் கலைகள் பாதுகாக்கப்படும். எந்தக் கலையாக இருந்தாலும் அது மக்களை ஈர்க்கும் செய்திகளைச் சொல்ல வேண்டும். விஞ்ஞான சாதனங்களைக் கொண்டு, விஞ்ஞான சிந்தனைகளை மழுங்க டிக்கும் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சியைப் போன்றதாக இருக்கக்கூடாது.

கூத்தில் பேயாட்டம் என்ற வகை உள்ளது. அந்தக் கூத்தில், விலைவாசிப் பேயை எப்படி விரட்டுவது என்று கூறி, பார்ப்பவர்களிடம் ஓம் முத்து மாரி அரசியலைப் பேசுவார். ஒவ்வொரு கூத்திலும் ஒவ்வொரு ஸ்டெப் உள்ளது. ஸ்டெப்பை மாற்ற விசில் ஊதுகிறார்கள். அதற்கு பதிலாக நல்ல சொற்களை பயன்படுத் தலாமே! பாட்டின் பின்புலத்தோடு தப்பாட்டத்தை இணைக்கலாமே! மரபுக் கலைகளில் புதிய சிந்தனையைப் புகுத்த வேண்டும். மகாபாரதம், ராமாயணத்தை மறுவாசிப்பு செய்து கூத்தாக மாற்றினால், மரபுக் கலைகள் உயிர்பெறும்; பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் கூலி வேலைக்கு செல்கிற நிலை தடுக்கப்படும் என்ற அவரின் மாற்றுயோசனைகள் பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்தன.

தமுஎகச-வில் நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது உருவாக்கப்பட்டது. மாநிலக் குழுவில் வந்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அந்த விருது வாழ்க்கை முழுவதும் நாட்டுப்புறக் கலைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஓம் முத்துமாரிக்கு வழங்கப்பட்டது என நாட்டுப்புறக் கலைஞர்கள் மீதான தமுஎகச-வின் அக்கறையையும் அருணன் பதிவு செய்து உரையை நிறைவு செய்தார்.

அகடவிகடமாக அரசியல்...

கோயில் திருவிழாவையொட்டி நடைபெறும் கூத்தில் மாரியம்மனையும், முருகனையும் சண்டைக்கு இழுப்பதோடு, பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் வேண்டும் என்று பாடிய மகோன்னதமான படைப்பாளி ஓம் முத்துமாரி. மேடையில் மட்டுமல்ல, இக்கட்டான நிலையிலும் எள்ளலோடு பேசி, உற்சாக மூட்டி தன்னம்பிக்கையத் தருவார்.  கோவில் மேடையிலும் அரசியல் கருத்துக்களை அகடவிகடமாகக் கூறிவிடுவார். அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் குறியீடுகளை  பாவலர் பதிவு செய்வார் என  ஓம்முத்துமாரியின் உள்ளக்கிடக்கையை உணர்த்தினார் போராசிரியர் காளீஸ்வரன்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தலித் கலைவிழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகளில் ஒருவர், உங்களில் எத்தனை பேர் தலித் என்று கேட்டுவிட்டார். கோபம் கொண்ட ஓம்முத்துமாரி, "கலைஞனுக்கு ஏதடா சாதி..." என்ற பாடலை பாடிவிட்டு, அப்படின்னு உடுமலைகவி பாடியுள்ளார் என்று பழியை தூக்கி அவர் மீது போட்டுவிட்டார். மேடையில் மட்டுமல்ல, களத்திலும் தைரியத்தோடு, கனபரிமாணத்தோடு பேசுவார் என்கிற கள அனுபவத்தையும் அவர் முன் வைத்தார்.

தமிழக அரசின் கலைமணி, கலைச்சுடர் விருதுகளைப் பெறாமலே நேரடியாக கலைமாமணி விருது பெற்ற ஒரே கலைஞர் ஓம் முத்துமாரி. காந்தியை சுட்டு கொன்றது இஸ்லாமியர் என்று சங்பரிவாரம் புரளி கிளப்பி கலவரத்தைத் தூண்டியது. அப்போது சமூக அமைதி ஏற்படுத்த திருச்சி வானொலியில் பெரியாரைப் பேச அழைத்திருந்தனர். அதற்கு முன்பாக சமூக அமைதியை வலியுறுத்தி ஓம் முத்துமாரி நடத்திய நிகழ்ச்சி 20 நிமிடம் நேரடியாக ஒலிபரப்பானது.  காந்தியைக் கொன்றது இஸ்லாமியர் அல்ல என்று முதன் முதலில் பதிவு செய்தார் ஓம் முத்துமாரி. அந்த நிகழ்ச்சி முழுவதையும் கேட்ட பெரியார், ஓம் முத்துமாரியை வியந்து பாராட்டினார் என்ற தகவலையும் காளீஸ்வரன் தனது உரையில் பதிவு செய் தார்.

நாமக்கல்லை சேர்ந்த ஒரு நாடகக்கலைஞரின் 2 குழந்தைகள் பொறியியல் பட்டம் படித்து வருகின்றனர். அவர்களுக்குக் கடந்த மூன்றரை ஆண்டுகளாக, கூத்து நடத்தி கல்விக் கட்டணம் செலுத்தி வந்தார். அத்தகைய மனித நேயமிக்க ஓம் முத்துமாரி நேசித்த நாட்டுப்புறக் கலைகள் மீது நம்பிக்கை வையுங்கள். பிரச்சனைகளை வீரியமாகப் பதிவு செய்ய நாட்டுப்புற கலைகளால்தான் முடியும் என்றும் காளீஸ்வரன் கூறினார்.

வறுமை நமக்கு மாமன் முறை
சிறுமை நமக்குத் தம்பி முறை
பொறுமை நமக்கு அண்ணன் முறை
பசியும் பட்டினியும் பிள்ளைகள் முறை
எத்தனை சொந்தங்கள் நமக்கிருக்கு பாத்தீகளா ....

என்று ஓம் முத்துமாரி பாடுவது போலவே அவரின் நினைவேந்தல் கூட்டமும் அமைந்திருந்தது...

தீக்கதிர் 9-12-2013

3 comments:

Unknown said...

miga nalla pathivu gavas, nice writeup

Unknown said...

superb

Maha said...

Arumaiyana Pathivu Gava