அரசே தனது குடிமக்களைக் கொல்லக்கூடாது என்ற இயக்கம் உலகளவில் வலுப்பெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு முற்றிலும் மாறாக அரசு வன்முறை தலை விரித்தாடுகிறது.
காவல் துறையை சீர்திருத்துவதற்கு பதிலாக கொம்பு சீவி விடுகிற காரி யத்தை சட்டமன்றத்திலேயே முதல்வர் அரங்கேற்றினார். அதன் தொடர்விளைவாக காவல்துறை கடிவாளம் இல்லாத குதிரையாக ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது.
இதன் விளைவாக, அதிமுக அரசு பொறுப்பேற்ற 5 மாதங்களில் 8 காவல் நிலைய கொலைகள் நிகழ்ந்துள்ளன. இது மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் 8 காவல் நிலைய கொலைகள் நடந்தன. ஆனால், அதிமுக ஆட்சியில் 5 மாதத்தில் காவல் நிலையங்களில் 8 பேரை கொன்று சாதனை படைத்து விட்டார்கள்.
அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் காவல் துறையினர் தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற புகார் பரவலாக உள்ளது. அதிமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும்போதுதான் குற்றங்கள் குறைவாக உள்ளது என்று ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளன.
காவல்துறையினர் சுயமாக செயல்பட, அவர்களின் பணிகளில் யாரும் குறுக்கிட மாட்டோம். சுதந்திரமாக செயல்படலாம். கட்சிக்காரர்கள் யாரும் காவலர்களின் பணியில் குறுக்கிடக் கூடாது என்று முதலமைச்சர் கூறியது சரிதான்.
அதேநேரத்தில் காவல்துறை மனித உரிமைகளை பேணுவதிலும், மனித மதிப்பை பாதுகாப்பதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்த முதல்வர் தவறிவிட்டாரோ?
காவல் துறை எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனிதத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு இருப்பதை ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன.
சட்டத்தின் ஆட்சி என்று கூறிக்கொண்டு போலீசார் ஆங்காங்கே தடியடி நடத்தி வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக பரமக்குடியில் அநியாய மாக 6 பேரை சுட்டுக் கொன்றனர். சேலத்தில் மூடப்பட்ட பலநோக்கு சிறப்பு மருத்துவமனையை திறக்கக் கோரியதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது காவலர்கள் தடியடி நடத்தினர்.
ஆங்காங்கே காவல் துறையினர் வரம்பு மீறி அடிப்பது, நடுரோட்டில் நிறுத்தி வைத்து அடிப்பது போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்று கடந்த 5 மாதங்களில் இப்படி ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும்.
தற்போது, மனித உரிமையாளர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் கடந்த 5 மாதங்களில் 8 காவல் நிலையச் சாவுகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தைப் போன்றே இந்தியா முழுவதும் நடைபெற்ற காவல் நிலையச் சாவுகள், என் கவுன்டர்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்த, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, காவல் நிலைய சாவுகள், எண் கவுன்டர்கள் ஆகியவற்றில் தொடர்புடைய காவலர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் நடைபெறுவதை காவல் நிலையச் சாவு என்று கூறு வதை விட, காவல்நிலைய கொலை என்றும், என்கவுன்டர் இறப்பை மோதல் சாவு என்று கூறாமல் போலி மோதல் கொலை என்றே சொல்ல வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.
இது வெறும் வார்த்தைப் பிரச்சனை அல்ல. இப்படித்தான் பிரச்சனைகளை அணுக வேண்டும் என்பதற்கான வழிமுறையாகும்.