Pages

Monday, May 31, 2010

நாராய் கிழியும் நார் நெசவாளர் வாழ்க்கை


நெசவுத் தொழிலில் தமிழகத்திற்கு ஒரு தனி இடத்தை உருவாக்கி வரும் அனகாபுத்தூர் நெசவாளர் களுக்கு தனியாக ஒரு இடம் கொடுப்பதாக மத்திய மாநில அமைச்சர், அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டது. இதனால் இயற்கை நார் நெசவுத் தொழில் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சென்னை புறநகர் பகுதியில் உள்ள அனாகபுத்தூர் நகராட்சியில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகள் செயல்பட்டு வந்தன. இடநெருக்கடி, போதுமான வருமானம் இல்லாததால் பலர் வெளியேறியது போன்ற காரணங்களால் தற்போது 350 தறிகள் மட்டுமே செயல்படுகின்றன.

இந்த தறிகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். தறிகளால் எழும் சத்தத்தாலும், நூல்களை பதப்படுத்த வாசல்களை ஆக்கிரமித்துக் கொள்வதாலும் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை காலி செய்ய சொல்கின்றனர்.


இத்தகைய நெருக்கடிகளையும் மீறி கற்றாழை, சணல், வாழை, மூங்கில், பைனாப்பிள் உள்ளிட்ட 25வகையான இயற்கை நார்களைக் கொண்டு நெசவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் கீழ் 50குடும்பங்கள் இப்பணிகளை மேற்கொண்டுள்ளன. புடவை, சட்டை, சுடிதார் வகைகள், திரைச்சீலைகள் என நெசவு செய்கின்றனர்.


இத்தகைய துணி வகைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வெளிநாடுகள், பிரபலமான ஜவுளி நிறுவனங்களில் இருந்தும் கேட்கின்றனர். இருப்பினும், போதிய இடவசதி, புதிய உபகரணங்கள் வாங்க வசதியின்மை காரணமாக குறிப்பிட்ட அளவுக்குமேல் இவர்களால் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளனர்.


இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மதுரை முன்னாள் மக்களவை உறுப்பினர் மறைந்த பி.மோகன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பிரபலமானது. 2007ம் ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய ஜவுளித்துறை அதிகாரிகளை அனகாபுத்தூருக்கே அழைத்து வந்து இத்தொழிலை ஊக்குவிக்க கோரினார். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் அப்போது இத்தொழிலை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

இத்தகைய சூழ்நிலையில் நெசவுத் தொழில் தொடர்ந்து இயங்க முதலமைச்சர் இலவச நிலம் வழங்க கோரி தனிப்பிரிவுக்கு நெசவாளர்கள் மனு அளித்தனர். அதன்பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதீப் யாதவ், கைத்தறித் துறை செயலாளராக இருந்த விஸ்நாத் செகாவத் ஆகியோர் இயற்கை நார் நெசவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலவச நிலம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.பாலபாரதி, அன்றைய கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவிடம் மனு அளித்தார். அதனை பரிசீலித்து வருவதாக செய்தியாளர்களிடம் ராஜா கூறினார். ஆனால், 3ஆண்டுகளாகியும் நெசவாளர்களுக்கு இலவச இடம் கிடைக்கவில்லை. அவர் முன்னாள் அமைச்சராகி விட்டதால் வாக்குறுதியும் முன்னாளாகி விட்டதோ?

இது தொடர்பாக அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவர் சேகர் கூறுகையில், “2007ம் ஆண்டு அனகாபுத்தூருக்கு வருகை தந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் இயற்கை நார் நெசவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலவசமாக வீடுகட்டி வழங்கப்படும் என்றார். மிகுந்த நம்பிக்கையோடு இருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது” என்றார்.


“தற்சமயம் வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை காலிசெய்ய சொல்கின்றனர். புதிதாக வீடுகளை வாடகைக்கு தர மறுக்கின்றனர். ஆகவே, இயற்கை நார் தொழில் தொடர்ந்து நடைபெற முதலமைச்சர் இலவசமாக நிலம் வழங்க வேண்டும். தமிழக அரசு இலவசமாக நிலம் வழங்கும் பட்சத்தில் ஒரு கிளஸ்டர் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.” என்றும் அவர் கூறினார்.


“கற்றாழையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்று இந்திய தொழில்நுட்ப கழகம் சான்றளித்து உள்ளது. இயற்கை நார்களை கொண்டு கேரளாவில் உற்பத்தி செய்கிறவர்களுக்கு அந்த மாநில அரசு 50விழுக்காடு மானியம் வழங்குகிறது. அதேபோன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

“கனடா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், சென்னை நகரின் பிரபலமான ஜவுளி கடைகளில் இருந்தும் ஆர்டர் கொடுக்கிறார்கள். போதிய வசதி இல்லாததால் அவர்களுக்கு துணிகளை வழங்க முடியவில்லை. இலவச நிலம், அரசின் உதவி, மானியம் கிடைத்தால் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தி மேலும் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அன்னிய செலாவணி ஈட்டவும் வாய்ப்பு உள்ளது.” என்கிறார் சேகர்

நெசவு தொழில் பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் புதுப்புது உத்திகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் இயற்கை நார் நெசவாளர்களின் பக்கம் அரசின் கவனம் திரும்புமா?

3 comments:

ஜோதிஜி said...

இடுகையில் எதை எதையோப் பற்றி எழுதுகிறார்கள். குத்தி கௌங்கு எடுக்கிறார்கள். உங்கள் அக்கறைக்கு நன்றி.

நீங்கள் குறுகிய வருமானமும், அதற்கேற்றாற்போல் உருவான பிரச்சனைகளுடனும் வாழ்ந்து கொண்டுருப்பவர்களைப் பற்றி எழுது உள்ளீர்கள். ஆனால் திருப்பூர் மற்றும் அதன் சார்ந்து உள்ள தொழில் அத்தனையும் இன்னும் எத்தனை வருடங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்பதே தினந்தோறும் கேள்விக்குறியாக இருக்கிறது.

ஈழம் புணரமைப்பு என்று கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கும் கேடி ஜனநாயகவாதிகள் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கும் இது போன்ற அடிப்படை ஜீவதார பிரச்சனைகளை கண்டு காணாமல் போவதால் எதிர்காலத்திற்கான கேள்விக்குறிகள் இன்று நம்மைப் பார்த்து நம் வாழ்க்கையை மௌனமாக சிரிக்கத் தொடங்கி உள்ளது.

ஆண்டு வரவு செலவு கணக்கு நூறு கோடி இருக்கும் கடன் 150 கோடி. நம்ப கடினமாக இருக்கிறதா?

இன்றைய உண்மையான திருப்பூர் நிலவரம் இது தான்.
கூடிய சீக்கீரம் எழுதுவேன். சந்திப்போம். இது போன்ற விசயங்களை நிறைய எழுதுங்கள் தோழரே.

நட்புடன் ரமேஷ் said...

kavas very good
welcome to bloger world

உங்களுடன் said...

ஜோதிஜி உங்கள் ஆதங்கம் புரிகிறது, நாம்மை சுற்றியுள்ளவர்களின் வலியை எழுதுவதுதான் எனக்கு மகிச்சி அளிக்கிறது, அதில் சமூக பொறுப்பும் இருக்கிறது என்று கருதுகிறேன், நீங்களும் எழுதுங்கள்