Pages

Wednesday, June 30, 2010

கல்லூரிக் கனவு கலையுமோ?

சாதிச்சான்றிதழ் என்பதே பழங்குடியின மக்களின் கல்வி, முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காகத்தான். ஆனால், அதை வழங்க மறுப்பதன் மூலம் அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது அதிகார வர்க்கம். பழங்குடியின பெண்ணான தீபாவுக்கு ஏற்பட்டுள்ள அனுபவம் இதைத்தான் காட்டுகிறது.

பெண்கல்வியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் ஒருசில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விண்ணப்பித்த உடனேயே ஆய்வு செய்து விரைந்து சாதிச்சான்றிதழ் வழங்குவதாக அரசு அவ்வப்போது கூறி வருகிறது. பழங்குடியின சமுதாயத்தில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வருகின்ற மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவது ஊரறிந்த உண்மை.

தாம்பரம் வட்டத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூரை சேர்ந்தவர் கே.ஏழுமலை. இருளர் பிரிவைச் சேர்ந்த இவரது மகள் தீபா. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 773 மதிப்பெண் பெற்றுள்ள அவருக்கு, மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் பி.காம் படிக்க இடம் கிடைத்து. ஆனால், சாதிச்சான்றிதழ் இல்லாததால் இடம் கிடைத்தும் தற்போது கல்லூரியில் சேர முடியாமல் ஏக்கத்தில் வாடி நிற்கிறார் தீபா.

“2009 செப்டம்பர் 16ம் தேதியன்று சாதிச்சான்றிதழ் கேட்டு அன்றைய செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். அது தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டாட்சியரை கேட்டால் வட்டாட்சியரை பார்க்கச் சொல்கிறார். வட்டாட்சியரை கேட்டால் கிராம நிர்வாக அலுவலரிடம் (விஏஓ) விண்ணப்பிக்க சொல்கிறார். விஏஓ-வை கேட்டால் கலெக்டரை சந்திக்க சொல்கிறார். இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவர் இழுத்தடிக்கிறார்கள்,” என்றார்.

தன் கல்லூரிக் கனவு கலைந்து விடுமோ என்று கலங்கும் தீபா “எங்க குடும்பத்திலேயே முதல்முறையாக கல்லூரி போகிறேன் என்ற பெருமிதத்தோடு இருந்தேன். கல்லூரியில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கம் சென்றிருந்தேன். சாதிச்சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்கள். மாணவர் சேர்ககை முடிய போகிறது. இப்போதும் சாதிச்சான்றிதழ் தர மறுக்கிறார்கள். எப்படியும் சாதிச்சான்றிதழ் கிடைத்துவிடும் என்று காத்திருக்கிறேன்.” என்று கண்ணில் நீர் மல்கக் கூறினார்.

இவரின் கண்ணீர் துடைக்க தமிழக அரசு கரம் நீட்டுமா?

No comments: