கிண்டி-மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகம் கே.கே.நகரில் செயல்பட்ட வருகிறது.
இதன் கீழ் வேளச்சேரி, அடையார், கிண்டி, காணகம், ஈக்காடுதாங்கல், மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, நெசப்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.
இந்த அலுவலகத்தில் வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, வாரிசு சான்று ஆகியவற்றை பெறுவது குதிரைக்கொம்பாகிவிட்டது என்று அப்பகுதி மக்கள் வெதும்புகின்றனர்.
15 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழும்,7நாட்களுக்குள் இதர சான்றிதழ்களும் வழங்கப்படும் என்ற அரசாங்க அறிவிப்பு பலகையில் உள்ளது. ஆனால், அந்த அறிவிப்பை அங்குள்ள அதிகாரிகள் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை.
சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் வாரத்திற்கு 3நாட்கள் வீதம் பல மாதங்களுக்கு அலைகழிக்கின்றனர். மனு தொலைந்து விட்டது என்று கூறி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கச் சொல்கின்றனர். (தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோரும்போது மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடாம்!) அப்போதும் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
புரோக்கர்கள் மூலமாக சென்றால் 3நாட்களில் அனைத்து விதமான சான்றிதழ்களும் கிடைக்கின்றன. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை விட புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கியதற்காக நிலஅளவையர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி 9வது மண்டலம் 131வது வட்டத்தில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதி உள்ளது. இங்கு ஜஹவர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட் வீடுகளாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக முதற்கட்டமாக 29 பயனாளிகளையும், இரண்டாம் கட்டமாக 42பயனாளிகளையும் மாநகராட்சி தேர்வுசெய்துள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள பயனாளிகள் வாரிசு, வருமான சான்றிதழ் ஆகியவற்றை மாநகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக விண்ணப்பித்தவர்களை வட்டாட்சியரும், வருவாய் ஆய்வாளரும் அலைகழித்து வருகின்றார்களாம்.
அன்னை சத்யா நகரில் குடியிருக்கும் வி.சிவபூசணம் (வயது 65) பூ விற்பவர். வாரிசு சான்றிதழ் கோரி 9-11-09அன்று விண்ணப்பித்த அவருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. “ஒரு நாள் முழுக்க பூ விற்றால் 50ரூபாய் கிடைக்கும். என்கிட்டப்போய் 2ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். என்னோட மொத்த மாச வருமான ரூ.1500தான். அவ்வளவு பணத்தை எப்படி நான் கொடுக்க முடியும்?” என்கிறார் அவர்.
3வருடமாக அலைந்தும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்காத விஜயா, 2ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ஓய்வூதியம் பெற்று வருகிறார். தனது மகளின் திருமணத்திற்கு அரசு உதவி பெறுவதற்காக 3 மாதங்களுக்கு முன்பு வருமானச்சான்று கோரி விண்ணப்பித்தார். அங்குள்ளவர்கள் 1500 ரூபாய் லஞ்சம் கேட்டார்களாம். அதனை கொடுக்காததால் அவரும் சான்றிதழ் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.
இதேபகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரும் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். 10மாத போராட்டம், பேச்சுவார்த்தைக்கு பிறகு 1500ரூபாய் லஞ்சம் கொடுத்துதான் சான்றிதழ் பெற்றுள்ளார்.
இவர்களைப் போன்று நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சான்றிதழுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். சட்டப்படி தந்தாகவேண்டிய சான்றிதழ், இப்படி வியாபாரச் சரக்காக மாற்றப்பட்டிருப்பது தொடர்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நீங்கள் சொல்வதைக் கேட்டபின் ஏற்படுவது அதிர்ச்சி.
நம்மிடம் இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு- வரும் ஏப்ரல் 13 இல் உபயோக்கிகப்படும்.
துருப்புச்சீட்டு என்பது என்ன?
இதே நிலைமைதான் ( கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ) இங்கும் நடக்கிறது. வீட்டிற்கு வீடு வாசற்படி போல மாவட்டங்கள் தோறும் இதே நிலைதான். முதலில் அனைத்து சான்றிதழ்களையும் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ள அரசு வழிவகை செய்யவேண்டும்.
Post a Comment