மக்களைக் காக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு
வீடு வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்
ஊரை அடித்து உலையில் போடு என்ற போக்கில் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் புறம்போக்கு நிலத்தை மட்டுமின்றி, அடுத்தவர்கள் நிலத்தையும் சேர்த்து மடக்கி கொள்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சி என்பதற்கு இலக்கணமாக செயல்பட்டு வருகிற மார்க்சிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தனது சொந்த வீட்டை அக் கட்சிக்கு எழுதி வைத்துள்ளார். சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூரை சேர்ந்த சி.கருப்பையா பிள்ளை என்பவர்தான் அவர்.
திருச்சி துறையூர் அருகே உள்ள திருமணவூரைச் சேர்ந்தவர் சி.கருப்பையாபிள்ளை (வயது 61). இவர் 1965ல் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்து 1981ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின்னர் 1983ம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் பணிக்கு சேர்ந்து 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கும் பரமேஸ்வரி என்பவருக்கும் 1977ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பூர்ணிமா, பிரியா என இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர்.சென்னை விமான நிலையத்தை குடியிருப்பு பகுதிகளில் விரிவாக்கம் செய்ய ஆட்சியாளர்கள் முயன்றபோது, அதனை எதிர்த்து மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. இதற்காக அமைக்கப்பட்ட போராட்டக்குழுவில் பரமேஸ்வரி நிர்வாகியாக இருந்து செயல்பட்டார். 16மாத கால தொடர் போராட்டத்திற்கு பிறகு போராட்டம் வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அனுதாபியாக பரமேஸ்வரி மாறினார். கடந்த ஜனவரி 22ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக பரமேஸ்வரி, பூர்ணிமா, பிரியா ஆகியோர் அகால மரணமடைந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் 3பேரின் கண்களும் தானம் செய்யப்பட்டன.
எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்ட கருப்பையா, தனது வீட்டை கட்சிக்கு தருவதாக பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார். அதன்படி தனது வீட்டை மார்ச்.5 அன்று கட்சிக்கு அளித்தார்.
இதுகுறித்து கருப்பையா கூறுகையில், "1982ல் இந்த இடத்தை வாங்கி குடியேறினேன். விமான நிலைய விரிவாக்க பிரச்சனையில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல், தொடர் போராட் டத்தை நடத்தி, பம்மல், பொழிச்சலூர், அனகாபுத் தூர், கவுல்பஜார் பகுதி மக்களை காப்பாற்றியது மார்க்சிஸ்ட் கட்சி.
இந்தப் போராட்டம் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே எனது வீட்டில் ஜீரணிக்க முடியாத அசம்பாவிதம் நடந்து விட்டது. 3பேரும் இறந்த துக்கத்தில் நான் நிலைகுலைந்த போதும், அவர்களின் கண்கள் 6பேருக்கு பயன்படும் என்று கூறி கண்தானம் செய்யுமாறு தோழர்கள் கூறினார்கள். அதன்படி செய்தேன். இதையெல்லாம் யோசித்து நன்றி விசுவாசத்தோடு எனது வீட்டை கட்சிக்கு கொடுத்தேன்.
எதிர்காலத்தில் இந்த வீடு எனது மனைவி-குழந்தைகளின் நினைவு சின்னமாக, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது மனைவியின் விருப்பப்படி இறுதிக் காலம் வரை மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாடுபடுவேன். என் இறுதி சடங்குகளை கட்சி எப்படி விரும்புகிறதோ அப்படியே செய்யட்டும்" என்றார்.
No comments:
Post a Comment