Pages

Wednesday, May 28, 2008

பெட்ரோல்-பொருளாதாரம்



இடதுசாரிகள் விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல. பிரச்சனையை நன்கு ஆராய்ந்து மாற்று திட்டத்தை முன்வைப்பவர்கள் என்பதற்கு இந்த செய்தி ஓர் ஊதாரணம்;



பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்தால், பெட் ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.90 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். டீசல் விலையில் 1 ரூபாய் அதிகரித்தால் மாதம் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.360 கோடி கிடைக்கும். கேஸ், சிலிண்டர் விலையில் 10 ரூபாய் அதிகரித்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.58 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.


ஆனால், தற்போது அமலில் உள்ள கலால் வரியில் ஒரு சத வீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கப் போகும் வருமானம் ரூ.1380 கோடி என்பது கவனிக்கத்தக்கது. டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் 1 சதவீதத்தை குறைத்தால் ஓராண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 270 கோடி வருமானம் கிடைக்கும்.


கச்சா எண்ணெய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 699 கோடி வருமான இழப்பு மிச்சமாகும். இதே போல பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் சுங்க வரி தற்போது 7.5 சதவீதமாக உள்ளது. இதையும் குறைத்தால் மிகப்பெரும் அளவிற்கு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் இழப்பு தவிர்க்கப்படும்.


தற்போது விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.14.35-ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60-ம், கலால் வரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரியை குறைத்தாலே விலை உயர்வு தானாக தவிர்க்கப்பட்டு விடும்.

மக்களை மறந்த காங்கிர அரசு இதனை கண்டு கொள்ள மறுக்கிறது. மக்களை திரட்டுவோம். வெற்றி பெறுவோம்.

Thursday, May 22, 2008










சென்னை நகரின் வளர்ச்சி-விரிவாக்கம்- மக்களின் வாழ்வாதரம் கருத்தில் கொள்ளுமா? தினமணி




(சில தினங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயல் அராபத் ஏரி பகுதியில், பயன்படாத நிலத்தில் இருந்த குடியிருப்புகளை வருவாய்துறை அகற்றியது. இதனை அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாக எதிர்த்தது. இந்த பகுதியை தொடர்ந்து வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை அகற்ற வருவாய் துறை முயற்சித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாட்டால், நடத்திய போராட்டத்தினால், குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தினமணியில் வந்துள்ள செய்திக்கு விளக்கம் என்ற வகையில்.............)


மே-21 நாளிதழில் ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற கட்சிகள் எதிர்ப்பது ஏன்?’ என்று தலைப்பிட்ட செய்தி ஒன்றை தினமணி நாளேடு வெளியிட்டுள்ளது.


“நீர் நிலை புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு லாபம் பார்த்த அரசியல் பின்னணி கொண்ட ரியல் எ°டேட் அதிபர்களே, கட்சித் தலைவர்களை தங்களுக்கு ஆதரவாக போராட அழைத்து வருவதாக...” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எந்த ரியல் எ°டேட் அதிபர் எந்த தலைவரை அழைத்து வந்தார் என்பதை கூற வேண்டியதுதானே? அந்த இடங்களை வளைத்து, விற்ற ரியல் எ°டேட் அதிபர்கள், அதற்கு துணைபோன வருவாய், பத்திரப்பதிவு, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தினமணி வலியுறுத்த மறுப்பது ஏன்?


“மக்களுக்கும், அரசுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் சிலர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தங்கள் பணியை பாதிப்பதாக வருவாய் துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்” என்று கூறும் தினமணி, இவ்வளவு பாதிப்புக்கும் காரணம் இந்த வருவாய் துறையினர்தான் என்பதை எங்கும் குறிப்பிடாதது வர்க்கப் பாசத்தைதான் காட்டுகிறது.

மேலும் அந்த பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் கொடுத்து இடம் வாங்கியவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் விந்தை தினமணிக்கு தவிர வேறு எந்த பத்திரிகைக்கும் வராது.


ஆக்கிரமிப்பு என்று சொல்லக்கூடிய திருமுல்லைவாயல் அராபத் ஏரி, அம்பத்தூர் கொரட்டுர் ஏரி, திருவேற்காடு அயனம்பாக்கம் ஏரி, பல்லாவரம் ஏரி ஆகியவை இதுவரை குடிநீருக்காக பயன்படுத்தாத பகுதியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளை மண் பரிசோதனை செய்த அதிகாரிகள், இந்த நீர்நிலைகளை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது என்று கூறியதை எப்படி தினமணி மறந்ததோ தெரியவில்லை.


ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களில் நீர்நிலை என்று குறிப்பிட்டுள்ளவைகளில், பெரும்பாலானவை தனது பயன்பாட்டை இழந்துள்ளன பல காலங்கள் ஆகின்றன. அந்த இடங்களில் 30-40 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது. அவர்களிடமிருந்து அனைத்து வகையான வரிகளையும் வசூல் செய்து, அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போது சென்ற காலி செய் என்றால் எங்கு செல்வது? மாற்று இடம் என்ற பெயரில் இருக்கும் இடத்தை விட்டு 75 கிலோமீட்டர் தூரம் செல்லச் சொன்னால் வாழ்வாதரம் பாதிக்காதா?


சென்னை நகரில் சிஎம்டிஏ அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதில் உள்ள சிரமங்களை புரிந்து கொண்டு அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதேபோல் 5ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு குடியிருப்புகளை இடிப்பது மனிதாபிமான செயலா?


மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், சென்னை நகரின் வளர்ச்சி-விரிவாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டும், பயன்படாத நீர்நிலைப் பகுதிகளை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.


ஏதோ அரசுக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்) இடையே உள்ள பிரச்சனை என்பதுபோல் செய்தி உள்ளது. இது ஒரு அரசியல் கட்சியின் பிரச்சனையல்ல: மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதை தினமணி நாளேடு உணர வேண்டும்.



நம்மிடம் உள்ள நியாயத்தையும் ஆவேசத்தையும்


மக்களின் உணர்வுகளாக மாற்ற வேண்டும்



சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை குடியிருப்பு பகுதிகளில் செய்ய அரசு முற்பட்டபோது, அதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக போராடி வெற்றி பெற்றது. அந்த போராட்டக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவராக பரமேஸ்வரி கருப்பையாபிள்ளை பணியாற்றினார்.



சிலமாதங்களுக்கு முன்னாள் அவரும் அவரது மகள்கள் பூர்ணிமா, பிரியா ஆகிய மூவரும் அகால மரணமடைந்தனர். இதனையடுத்து கருப்பையா பிள்ளை, தனது வீட்டை மார்க்சிஸ்ட் கட்சிக்கு அளித்தார்.



இந்த கட்டிடத்திற்கு திருமதி பரமேஸ்வரி நினைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் என்று பெயரிடப்பட்து. இந்த அலுவலகம், கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி அன்மையில் பொழிச்சலூரில் நடைபெற்றது.



இந்த உணர்ச்சிமிகு விழாவில் கருப்பையா பிள்ளை பேசுகையில், " எனது வீடு மக்களுக்கு பயன்படும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தை நிறைவேற்றி உள்ளீர்கள். ரொம்ப நெகிழ்ச்சியாக உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சரியான வழிகாட்டியதோடு, எனது வீட்டில் நடந்த அசம்பாவிதத்தை எந்த பிரச்சனை இல்லாமல் கட்சி தோழர்கள் முடித்துக் கொடுத்தனர்" என்றார்.


"யார் நிர்ப்பந்தமும் இல்லாமல், எனது சுய முடிவின்படி இந்த வீட்டை கட்சிக்கு கொடுத்தேன். எல்லோருக்கும் பயன்படும் இடமாக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் இருக்கும். இதில் ஒரு பகுதியை மாணவர்கள் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும்." என்றார்.


கருப்பையாவிற்கு சால்வை அணிவித்து பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், "தனது சொத்துக்களை எல்லாம் கட்சிக்கு கொடுத்து பெருமை சேர்த்த தலைவர்களின் வரிசையில் கருப்பையாவும் இடம் பெறுகிறார். கருப்பையா தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.


"நம்மிடம் உள்ள நியாய உணர்வுகளையும், ஆவேசத்தையும் சமுதாயத்தின் உணர்வாக, ஆவேசமாக மாற்ற முயற்சிக்கிறோம். அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து அவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அந்த மக்களின் உணர் வுகளையும் உணர்ச்சிகளை யும் ஒருங்கிணைக்கின்ற பணி யை இந்த அலுவலகம் செய்யும்" என்றும் அவர் கூறினார்.

Sunday, May 18, 2008



மக்களைக் காக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு

வீடு வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்





ஊரை அடித்து உலையில் போடு என்ற போக்கில் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் புறம்போக்கு நிலத்தை மட்டுமின்றி, அடுத்தவர்கள் நிலத்தையும் சேர்த்து மடக்கி கொள்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சி என்பதற்கு இலக்கணமாக செயல்பட்டு வருகிற மார்க்சிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தனது சொந்த வீட்டை அக் கட்சிக்கு எழுதி வைத்துள்ளார். சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூரை சேர்ந்த சி.கருப்பையா பிள்ளை என்பவர்தான் அவர்.



திருச்சி துறையூர் அருகே உள்ள திருமணவூரைச் சேர்ந்தவர் சி.கருப்பையாபிள்ளை (வயது 61). இவர் 1965ல் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்து 1981ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின்னர் 1983ம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் பணிக்கு சேர்ந்து 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கும் பரமேஸ்வரி என்பவருக்கும் 1977ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பூர்ணிமா, பிரியா என இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர்.சென்னை விமான நிலையத்தை குடியிருப்பு பகுதிகளில் விரிவாக்கம் செய்ய ஆட்சியாளர்கள் முயன்றபோது, அதனை எதிர்த்து மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. இதற்காக அமைக்கப்பட்ட போராட்டக்குழுவில் பரமேஸ்வரி நிர்வாகியாக இருந்து செயல்பட்டார். 16மாத கால தொடர் போராட்டத்திற்கு பிறகு போராட்டம் வெற்றி பெற்றது.



இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அனுதாபியாக பரமேஸ்வரி மாறினார். கடந்த ஜனவரி 22ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக பரமேஸ்வரி, பூர்ணிமா, பிரியா ஆகியோர் அகால மரணமடைந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் 3பேரின் கண்களும் தானம் செய்யப்பட்டன.



எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்ட கருப்பையா, தனது வீட்டை கட்சிக்கு தருவதாக பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார். அதன்படி தனது வீட்டை மார்ச்.5 அன்று கட்சிக்கு அளித்தார்.



இதுகுறித்து கருப்பையா கூறுகையில், "1982ல் இந்த இடத்தை வாங்கி குடியேறினேன். விமான நிலைய விரிவாக்க பிரச்சனையில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல், தொடர் போராட் டத்தை நடத்தி, பம்மல், பொழிச்சலூர், அனகாபுத் தூர், கவுல்பஜார் பகுதி மக்களை காப்பாற்றியது மார்க்சிஸ்ட் கட்சி.



இந்தப் போராட்டம் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே எனது வீட்டில் ஜீரணிக்க முடியாத அசம்பாவிதம் நடந்து விட்டது. 3பேரும் இறந்த துக்கத்தில் நான் நிலைகுலைந்த போதும், அவர்களின் கண்கள் 6பேருக்கு பயன்படும் என்று கூறி கண்தானம் செய்யுமாறு தோழர்கள் கூறினார்கள். அதன்படி செய்தேன். இதையெல்லாம் யோசித்து நன்றி விசுவாசத்தோடு எனது வீட்டை கட்சிக்கு கொடுத்தேன்.



எதிர்காலத்தில் இந்த வீடு எனது மனைவி-குழந்தைகளின் நினைவு சின்னமாக, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது மனைவியின் விருப்பப்படி இறுதிக் காலம் வரை மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாடுபடுவேன். என் இறுதி சடங்குகளை கட்சி எப்படி விரும்புகிறதோ அப்படியே செய்யட்டும்" என்றார்.