Pages

Wednesday, July 11, 2007

ஆட்டோ யோசித்தது உண்டா?

`காசு கொடுத்தா வேலை நடக்குது'


பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கொள்ளையடிக்கிறார்களா? அரசு இவர்களிடம் தேவைகளை பூர்த்தி செய்கிறதா? நடைமுறை சிக்கல் என்ன? வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) என்று சொல்லக்கூடிய இடங்களில் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்குமா? இதனை தடுக்க ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுவதென்ன? இப்படிப்பல சந்தேகங்களுடன் ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்தபோது:

கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தவில்லை. கட்டுபடியான கட்டணத்தை வைத்து எப்படி எங்களால் எங்கள் குடும்பம் நடத்த முடியும். குழந்தைகளை படிக்க வைக்க முடியும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும். எங்களின் வாழ்க்கை தேவைக்கான பணத்தை ஆட்டோ ஓட்டிதான் சம்பாதிக்கிறோம். குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் கொஞ்சம் அக்கம்பக்கம் கடன் வாங்குகிறோம். கடன் கிடைக்காவிட்டால் பயணிகளிடம் கொஞ்சம் அதிகமாக கேட்கிறோம். எங்கும் சென்று திருடவில்லை.

அதேசமயம் எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் சில நபர்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை வைத்து ஆட்டோக்காரர்களே மோசம் என்பதுபோல் சித்தரிக்கப்படுகிறோம். சம்பாதிக்கும் பணம் வாயிக்கும், வயிற்றுக்கும் பத்தாமல் போகவேதான் அடித்துபிடித்து ஆட்டோ ஓட்டுகிறோம். ஆனால் ஆர்டிஓ அலுவலகம் போனால் லட்சம் கேட்கிறார்கள். காவல்துறையினர் லஞ்சம் கேட்கிறார்கள். டிராபிக் போலிஸ் லஞ்சம் கேட்கிறார்கள். இப்படி லஞ்சம் லஞ்சம் என்று அலைபவர்களை கண்டால் மக்கள் பயந்து நடுங்குகிறார்கள். அப்பாவிகளாக, வாழ வழியில்லாமல் வாடகையாகவோ, சொந்தமாகவோ வாங்கிக் கொண்டு ஆட்டோ எடுத்து வந்தால் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள்.

வாடகை ஆட்டோ என்றால், காலை 6மணிக்கு எடுத்து மாலை 6மணி வரை ஓட்டினால் 200 ரூபாயோ அல்லது 400 ரூபாயோ கிடைக்கும். வாடகை ஆட்டோ கட்டணமாக 150 ரூபாய் கொடுக்க வேண்டும். அத்துடன் 2லிட்டர் பெட்ரோலுடன் ஆட்டோவை ஒப்படைக்க வேண்டும். இப்படியே 250 ரூபாய் செலவாகிறது. காலையில் இருந்து ஆட்டோ ஓட்டுகையில் எங்ளுடைய டீ செலவு, பஞ்சர் போடுவது, சாப்பிடுவது என 50 ரூபாய் வரை செலவாகி விடும். இதெல்லாம் போக கையில் நிற்பது வெறும் 100 ரூபாய். இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். சொந்த ஆட்டோவாக இருந்தால் சேட்டுவிடம் வாங்கிய கடன், அல்லது கந்து வட்டி என 200 ரூபாய் போய்விடும். பெட்ரோலுக்கு 100 ரூபாய்குக் மேல் செலவாகும்.
சிலர் மீட்டர் போடாமல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். டிஜிட்டல் மீட்டர் என எந்த மீட்டர் பொருத்தினாலும் 3ஆயிரம் முதல் 5ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே குத்துமதிப்பாக தொகை கேட்கிறோம். இத்தகைய சூழலில் எங்களின் வாழ்க்கை நரகமாக போய்விட்டது. சில நேரங்களில் மன உளைச்சலில் உள்ள நாங்கள் சில நேரங்களில் பயணிகளிடம் தவறுதலாக வார்த்தைகளை உபயோகிக்கிறோம்.

தமிழக அரசு கடந்த 10ஆண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாமல் இருந்து விட்டது. இப்போது முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு 14 ரூபாய், அடுத்து வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 6 ரூபாய் என உயர்த்தி உள்ளது. இது கட்டுபடியாகது. இந்த மீட்டர் கட்டணத்தை மீட்டர் கட்டணத்தை முதல் 1.5கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 என்றும், அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ரூ.7 என்றும் மாற்ற வேண்டும்.
டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற அரசு ஆணை பிறப்பித்துள்ளது அதனை விளக்கி கொண்டு, கட்டணம் சரியாக, நியாயமாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து விருப்பப்பட்ட மீட்டரை பொருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

ஆர்டிஓ அலுவலகங்களில் அனைத்து தகவல்களும், விண்ணப்பங்களும் ஆங்கில மொழியில் உள்ளது. ஆங்கில மொழி தெரியாக ஆட்டோ ஓட்டுநர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்கப்படும் படிவங்கள், தகவல் பறிமாற்றங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் மாற்றினால் உபயோகமாக இருக்கும்.
வாகனப் பதிவு, தகுதிச் சான்று, அனுமதி சான்று பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட எந்த பணியாக இருந்தாலும் நாங்கள் நேரடியாக சென்றால் காலம்தாழ்த்துவதோடு, மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அதிகாரிகள் நடந்து கொள்வதோடு, தரக்குறைவாக பேசுகின்றனர். ஆனால் அதே வேலைக்கு புரோக்கரை அழைத்து சென்றால் உடனடியாக வேலைகளை முடித்து தருகின்றனர். காசு கொடுத்தால் ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ளவர்கள் நைசாக வேலை முடித்துக் கொடுக்கின்றனர்.
இப்போது சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு ஆட்டோக்களில் கேஸ்கிட் பொருத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். கேஸ்கிட் பொருத்த 20ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சுற்றுச்சூழல் மீது எங்களுக்கும் அக்கரை உள்ளது. அதேநேரத்தில் நாங்கள் பணக்கஷ்டத்தில் உள்ளோம் எனவே அரசு சில ஆயிரம் ரூபாய்களை மானியமாக வழங்க வேண்டும். மீதம் உள்ள தொகையை வங்கிகள் கடன் வழங்க முன்வர வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கத்தான் ஆட்டோக்களில் கேஸ்கிட் பொருத்த சொல்கிறார்கள். ஒருசிலர் பொருத்தியுள்ளனர். அவர்களின் ஆட்டோக்களுக்கும் 200 ரூபாய் பசுமை வரி வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

No comments: