தமிழ்த்தென்றலுக்கு மணிமண்டபம்
மக்கள் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா?
தமிழகத்தின் தொழிற்சங்க முன்னோடியும், தமிழறிஞருமான திரு.வி.க.-வுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழறிஞர்கள், தொழிற்சங்கவாதிகளின் எதிர்பார்ப்பு.
எளிய தமிழில், பொருள் பொதிந்த நூல்களை எழுதியதாலும், அபாரமான மேடைப் பேச்சாலும், தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுவர் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்கிற திரு.வி.க. மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் அருகே துண்டலம் என்ற துள்ளம் கிராமத்தில் 1883 ஆகஸ்ட் 26ல் விருதாசலம் - சின்னம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் திரு.வி.க. 1906ல் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கிலேயர் நிறுவனத்தில் கணக்கராகப் பணிக்குச் சேர்ந்த திரு.வி.க. பால கங்காதர திலகர் போன்றோர் தலைமையில் நடைபெற்ற விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டு பணியில் இருந்து வெளியேறினார்.
எளிய தமிழில், பொருள் பொதிந்த நூல்களை எழுதியதாலும், அபாரமான மேடைப் பேச்சாலும், தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுவர் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்கிற திரு.வி.க. மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் அருகே துண்டலம் என்ற துள்ளம் கிராமத்தில் 1883 ஆகஸ்ட் 26ல் விருதாசலம் - சின்னம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் திரு.வி.க. 1906ல் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கிலேயர் நிறுவனத்தில் கணக்கராகப் பணிக்குச் சேர்ந்த திரு.வி.க. பால கங்காதர திலகர் போன்றோர் தலைமையில் நடைபெற்ற விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டு பணியில் இருந்து வெளியேறினார்.
1909ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது, பொதுத் தொண்டில் ஈடுபடும் நோக்கத்துடன் அங்கிருந்து விலகினார். தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார். திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றி நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
தமிழார்வம் மிக்கவராக இருந்த அவர், மொழி வளர்ச்சிக்கான சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். வாழ்க்கை வரலாறுகள் அரசியல நூல்கள், சமய நூல்கள், பாடல் தொகுப்புகள், பயண நூல்கள் என 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் வாடியா உள்ளிட்டோர் முயற்சியால் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்தின் தலைவராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார். 1947ல் நடந்த பக்கிங்காம் கர்நாடிக் மில் (பி அண்டு சி மில்) தொழிலாளர் போராட்டத்தை நடத்தியதற்காக காங்கிரஸ் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. தனது புரட்சிமிகு தொழிற்சங்க இயக்கப் பணி பற்றிக் குறிப்பிடுகையில், 1918 ஆம் ஆண்டு முதல் என்னால் இயன்ற அளவு யான் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டு சேவை செய்து வருகிறேன். என் வாழ்க்கை எத்தனையோ கதவடைப்புகளை, வேலை நிறுத்தங்களை, வழக்குகளை, காவல் துறையினரின் தடியடிகளை, துப்பாக்கிச் சூடுகளைக் கண்டது. நெருக்கடியான நேரங்களில் எனக்கு ஊக்கம் அதிகமாகும். தொண்டின் வேகமே ஊக்கமாகும். அயராத சேவையே களைப்பைப் போக்கும் அருமருந்தாகும், என்றார்.
இவ்வாறு மொழி, தொழிற்சங்கம் என இரு தளங்களிலும் தடம் பதித்த திரு.வி.க. 1955 செப்டம்பர் 17ல் மறைவுற்றார்.
மணிமண்டபம்
இத்தகைய சிறப்பு மிக்க திரு.வி.க. பிறந்த ஊர் போரூரை அடுத்த காரம்பாக்கம் ஊராட்சியில் இருந்தது. தற்போது சென்னை மாநகராட்சியின் 150 வட்டத்திற்குள் வருகிறது. துண்டலம் பகுதியில் திரு.வி.க. சிறப்பைப் போற்றும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, அவரது உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அந்த நூலகம் உள்ள இடத்தில், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், எழுத்தாளர்களும் கோரி வருகின்றனர்.
தோழரை தந்த கொடையாளர்தோழர் என்ற வார்த்தையை தமிழுக்கு கொடுத்த கொடையாளர் திரு.வி.க. இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் தொழிலாளர் இயக்கத்தின் அழைப்பின் பேரில் சென்ற வாடியா, அங்குள்ளவர்களுக்கு இந்தியாவில், குறிப்பாக சென்னை ஆலைத் தொழிலாளர்களின் அவல நிலைகளை எடுத்துக் கூறினார். அங்கிருந்து சென்னை திரும்பிய, அவருக்கு சென்னை தொழிலாளர் சங்கம் உற்சாக வரவேற்பளித்தது. அக்கூட்டத்தில் வாடியா நிகழ்த்திய ஆங்கில உரையை, திரு.வி.க. மொழி பெயர்த்தார். வாடியா காம்ரேட்ஸ்' என்று தொடங்கியதும், திரு.வி.க. அதனை "தோழர்களே' என மொழி பெயர்த்தார். தொழிலாளர்களின் கரவொலி, விண்ணை முட்டியது. அந்த நிமிடத்திலிருந்து காம்ரேட் என்பதற்கு தோழர் என்ற சொல் வழக்கில் உள்ளது.
சிபிஎம் வலியுறுத்தல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ், தமிழக முதலமைச்சருக்கு இவ்வாண்டு மார்ச் 7 அன்று ஒரு கடிதம்எழுதியுள்ளார். அதில், தமிழ்த்தென்றல் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவரும், தமிழகத்தின் முதல் தொழிற்சங்கத்தை தோற்றுவித்தவருமான திரு.வி.க. அவர்களுக்கு, அவர் பிறந்த ஊரில், அவரை நினைவுகூர்ந்திடும் வகையில் மணிமண்டபம் அமைத்து, அனைத்து தமிழ் ஆர்வலர்கள், தொழிற்சங்க வாதிகளின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத்திலும் இது குறித்து பீம்ராவ் பேசியுள்ளார்.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?