பண்பாடு, இனம், மொழி, கலாச்சாரம் என சகலமும் வளர்ச்சியின் வேகத்தில் எப்போதும் தாக்குதலுக்கு உள்ளாகும்.தகுதியுடையதே நிலைத்து நிற்கும். பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல்களை சமாளித்து, தன்னை தகவமைத்துக் கொண்டு தொன்மையோடும், இளமையோடும் தமிழ் இருக்கிறது. தமிழ்மொழியின் தொன்மையை பாதுகாப்பது, வளர்ச்சியை விரைவுபடுத்துவது என இருகால் பாய்ச்சலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பயணிக்கிறது. இதற்கு சான்றாக சென்னையில் ஜூலை 19 அன்று ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கலை இலக்கிய படைப்புகளுக்கென்று தமுஎகச ஒவ்வோராண்டும் 15க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்குகிறது. அதற்கு மகுடமாக தொன்மைசார் ஆய்வு நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இலக்கியத்தில் ஊடாடி நிற்கும் வர்க்கத்தை எப்படிப் பார்ப்பது என்று கற்றுக் கொடுத்த ஆசானும், தமுஎகச நிறுவனர்களில் ஒருவருமான கே.முத்தையா நினைவாக வழங்கப்பட்டது அதிலும் தனிச்சிறப்பு.
இவ்விருதுக்கு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த முனைவர் சிலம்பு ந.செல்வராசு எழுதிய கண்ணகி தொன்மம் நூல் தேர்வு செய்யப்பட்டு, கேடயம், பட்டயம், 20ஆயிரம் ரூபாய் விருது தொகை வழங்கப்பட்டது.
விழாவிற்கு தலைமை தாங்கிய அருணன், தோழர் கே.முத்தையா உள்ளிட்ட தலைவர்களால் துவக்கப்பட்ட தமுஎகச அமைப்புக்கு 40வது ஆண்டு இது என்ற தகவல் பதிவோடு பேச்சை துவக்கி, தமிழர் பண்பாட்டு அடையாளங்கள திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. மஞ்சுவிரட்டு, சேவல் சண்டை போன்ற அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் நிகழ்ச்சிக்கு செல்ல வேட்டிக்கு அனுமதியில்லை என்பதை நினைவு கூர்ந்து உடையில் மட்டும் தமிழ்பண்பாட்டை பார்க்கவில்லை. அது மனித வளர்ச்சி வசதிக்கேற்ப மாற்றம் கொள்ளும். மனமகிழ் மன்ற நிகழ்ச்சிகளில் எந்த உடை உடுத்த வேண்டும் என்று கூறுவது பண்பாட்டு அடக்குமுறையே. பாரம்பரிய உடையை தடுப்பது மனித உரிமை மீறலே என்றார்.
ஆங்கில ஆதிக்கம், இந்தி திணிப்பு, சமஸ்கிருதமயம் என மும்முனைத் தாக்குதலுக்கு தமிழ் ஆளாகி உள்ளது. அதில் ஒன்று 15ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது, 1958ம் ஆண்டு மார்ச் மாதம் ஆர்எஸ்எஸ் சமஸ்கிருதத்தை கற்றுக் கொடுங்கள், வளர்த்தெடுங்கள், பரப்புங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அதனை இப்போது மத்திய அரசு செய்கிறது. என்று வரலாற்று விளக்கம் அளித்தார் அருணன்.
செம்மொழியை வளர்ப்பதென்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா மொழிகளையும் வளர்க்க வேண்டுமல்லவா? ஏனெனில் திராவிட மொழிகளையும், இந்தோ-ஆரிய மொழியான ஒரியாவும் அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில்தான் தொன்மையை காக்க ஒரு விருதும், மொழியை காக்க ஆக.24 அன்று மதுரையில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் போராட்டத்தையும் தமுஎகச நடத்துகிறது என்றும் அருணன் கூறினார்.
விருதினை வழங்கிப் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல், நாட்டுப்புறவியல், மானுடவியல் குறித்த ஆய்வுகள் தமிழ்ச்சமூகத்தில் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆள்கிறவர்களால் திட்டமிட்டு தமிழ் மொழியின் தொன்மைகள் புறக்கணிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. எனவேதான் கண்டுபிடிக்கப்பட்ட 70ஆயிரம் கல்வெட்டுகளில் 50 ஆயிரம் இன்னும் பதிப்பிக்கப்படாமலேயே இருக்கின்றன என்றார்.
விருது பெறும் இந்நூல், சிலப்பதிகாரத்திற்கு முன்பிருந்தே கண்ணகி தொன்மம் (புழக்கத்தில்) இருந்ததை நிறுவுகிறது. தமிழ்ச்சமூகம் இனக்குழு சமூகமாக இருந்து தந்தை வழிச்சமூகமாக மாறுகிற வரை ஒவ்வொரு கட்டத்தையும் நூல் பேசுகிறது. செவ்வியல் இலக்கியங்கள் கண்ணகியையும், நாட்டுபுற இலக்கியங்கள் கோவலனையும் கொண்டாடுகின்றன என்பதற்கு பதில் தேட வேண்டியிருக்கிறது என்றும் வெங்கடேசன் கூறினார்.
ஒரு மாநில அரசு அதிகாரி உங்கள் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. யாரிடமும் கூறாதீர்கள். ஒரு வாரத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் வழங்கப்படும் என்றார். சில மாதம் கழித்து அஞ்சலில் பட்டயமும், பரிசுத்தொகையும் வந்தது. மற்றொரு மாநில அரசு நிகழ்ச்சியில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கு விருது கொடுக்கிறார்கள் என்பதை தெரியாமலே பேசி விட்டு சென்ற பிறகு அதிகாரிகள் விருது கொடுத்தார்கள்.அப்போதெல்லாம் ஏற்படாத நெகிழ்ச்சி தமுஎகச விருது பெறும்போது உருவாகிறது. சிறந்த நூல் என்று 6 நூலுக்கு பரிசு வாங்கி இருக்கிறேன். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக இப்போதெல்லாம் பரிசுக்கு நூல் அனுப்புவதில்லை. ஆனாலும், தமுஎகச தேடிப் பிடித்து எனது நூலுக்கு விருது வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஏற்புரையாற்றிய முனைவர் சிலம்பு நா.செல்வராசு.
தோழர் கே.முத்தையா அர்ப்பணிப்பின் மறுபெயர் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. வணிக சமூகத்திற்கும், வேளாண் சமூகத்திற்கும் நடைபெற்ற வர்க்கப்போராட்டம் சிலப்பதிகாரம் என்றார் கே.முத்தையா. அவரின் பெயரால் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வேட்டிக் கட்டிக்கொண்டு வரக்கூடாது என்றால் கட்டிக் கொண்டுதான் வருவோம் என்று செல்ல நம்மிடம் ரௌத்திரம் இல்லை என்று எதார்த்தத்தை எடுத்துரைத்தார்.
கண்ணகி வழிபாடு இலங்கையிலும், கேரளத்திலும் இருக்கிறது. இடையில் உள்ள தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்விழாவில் அமைப்பின் பொருளாளர் சு.ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் கி.அன்பரசன், பொருளாளர் நா.பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேசினர்.
நன்றி:
தீக்கதிர்-இலக்கியசோலை
21-07-2014