நாடகங்களை மழை அடித்துச் சென்றுவிட்டது
சிறுகதைகள் மனங்களை கனக்கச் செய்பவை. சில நேரங்களில் நெருடல்களை, சஞ்சலங்களை சர்வசாதாரண நிகழ்வாகப் பாவிக்கச் செய்பவை. சிறுகதைகள் வாசிக்கும் போது மனம் விம்மும். அதனை நாடகமாக மாற்றி பார்த்தால் அந்த அனுபவம் எப்படியாக இருக்கும்.
மனம் விம்மினால் பாரம் குறைகிறது; வானம் தனது பாரத்தை குறைக்க அவ்வப்போது விம்முகிறது. கோடை தணிந்த அந்த குளிர்காற்று வீசும் இனிய மாலையில், பெசன்ட் நகர் கடற்கரையோரம் ஸ்பேசஸ் அரங்கம் நிறைந்திருந்தது. சிறந்த ஆளுமைகளின் சிறுகதைகள் நாடக வடிவங்களாக உருமாறின. கடவுளை பிச்சைக்காரனாக சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.
எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த சிறந்த 100 சிறுகதைகளில் இருந்து 15 கதைகளை தேர்வு செய்து, நாடகமாக உருமாற்றி இருந்தனர். தியேட்டர் லேப் தனது 10 வது ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
குழந்தை திருமணத்தால் இளம் வயதிலேயே விதவையாகி, சாஸ்திர சம்பிரதாயங்களால் சுயத்தை இழந்த ஒரு பெண்ணின் கதை சொல்லும் ந.முத்துச்சாமியின் நீர்மை, புறக்கணிக்கப்படுவது தோல்வியா? என கேள்வி எழுப்பும் எஸ்.ராமகிருஷ்ணனின் மீதமிருக்கும் சொற்கள், குழந்தைகளின் உலகத்தைப் பற்றி பேசும் பி.எஸ்.ராமையாவின் நட்சத்திரக் குழந்தைகள், வறுமையிலும் நேர்மையை பேசும் சுந்தர ராமசாமியின் சீதை மார்க் சீயக்காய்த்தூள்,
கடவுளை பிச்சைக்காரனாக்கிய ஜெயகாந்தனின் குருபீடம்; கடவுளை சக மனிதாக மாற்றிய புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமியும், பூப்பெய்தியதால் தனிமைபடுத்தப்படும், மன உளைச்சலுக்கு உள்ளாகும், உள்ளாக்கப்படும் இளம்பெண்ணின் மன உளைச்சலை கூறும் அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் வறுமையை பேசும் ஜெயகாந்தனின் பொம்மை, பார்வையற்றவர்களின் உலகத்தைப் பேசிய லா.ச.ராமாமிருதத்தின் பச்சைகனவு என ஒன்பது கதைகள் நாடகமாக்கப்பட்டிருந்தன. மற்ற ஆறு கதைகளுக்கான நாடகங்களை மழை அடித்துச் சென்றுவிட்டது. கெடுப்பதூஉம் மழை என்பதற்கேற்ப கலை இலக்கிய ரசிகர்களின் ஆர்வத்தைக் மழை கெடுத்துவிட்டது என்றே சொல்லாம்.
இருப்பினும், ஜெயராவ் சேவூரியின் இயக்கத்தில் சிறுகதைகளைப் போன்றே நாடகங்களும் கனகச்சிதமாக நிகழ்த்தப்பட்டன. மழையால் அரங்க வடிவமைப்பின்றி, குறைந்தபட்ச ஒளி அமைப்போடு, இளங்கலைஞர்களின் தங்கள் அபாரமான நடிப்பாற்றலால் பார்வையாளர்களை நகரவிடாமல் செய்தனர். படித்த போது ஏற்பட்ட மன உணர்வைப் போலவே நாடகமாக பார்க்கும் போதும் வலியும், வேதனையும், சிரிப்பும், எகத்தாளமும் பீறிட்டன.
ஒவ்வொரு கதையின் தலைப்பையும், எழுத்தாளரின் பெயரையும் அறிவித்தபடியே இருட்டில் தொடங்கும் நாடகம், இருளிலேயே முடிந்தது. அடுத்த கதைக்கான நாடகம் என்பது விளக்கை அணைதது எரிய விடுவது என்பதே அடையாளமாக இருந்தது. ஒன்றிரண்டு இடங்களைத் தவிர மற்ற நேரங்களில் இசைக்கருவிகளைப் பயன்படுத்தாமல், குரலின் மூலமே உணர்வுகளைப் பிரதிபலித்தனர்.
திரைச்சீலைகள், அரங்கப் பயன்பாட்டுப் பொருட்கள் இன்னும் பிற பிற வடிவமைப்பின்றி நாடகங்கள் அரங்கேறின. ஒன்றிரண்டு நாடகங்களை குழுவாகவும், மற்றவற்றவை ஓரங்க நாடகமாகவும் நிகழ்த்தினர். பெரும்பாலும் ஒப்பனைகளை தவிர்த்த மனிதர்கள் சாதாரண கதை சொல்லிகளாகவும் கதாப்பாத்திரங்களாகவும் உருமாறிக் கொண்டே பர்வையாளர்களை கவர்ந்திழுத்தனர். நாடக நிகழ்வு நேரம் 5 முதல் 15 நிமிடங்கள் வரை இருந்தது.
ஏற்கெனவே படித்தவர்களை மீண்டும் படிக்கவும், படிக்காதவர்களை அந்தக் கதைகளைத் தேடிப் படிக்கவும் தூண்டும் வகையிலும் நாடகங்கள் இருந்தன என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும், கதைகளில் இல்லாத சில வசனங்கள், சில உணர்வுகள் நாடகத்தில் வெளிப்பட்டன. அவை கதைக்கு பொருந்துவதாகவே இருந்தன என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனும் கூறியது வெறும் புகழ்ச்சியல்ல.