நீ குடித்து முடித்த
டீ கிளாசை
இரு கையாலும்
ஏந்திக் கொண்ட தோழன்
உன் நாற்காலிக்காக
தன் நரம்புகளை
பின்னக் கொடுத்த தோழன்...
பட்டினி கிடந்தாலும்
உன் பசியாற்றி,
பயணப்படியோடு
வழியனுப்பிய தோழன்
உலகைக் குலுக்கும்
செங்கொடி உயர்த்தி,
உண்டியல் குலுக்கி உனை
வேட்பாளராக்கிய தோழன்....
கோடிகளை சுருட்டும்
கோமான்களை எதிர்க்க
உன்னை கோட்டைக்கு
அனுப்பிய தோழன்
எல்லாம் மறந்த
என் முன்னாள் தோழா!
முதலாளித்துவத்திற்கு
பரிவட்டம் கட்டி
பல்லக்குத் தூக்க
முதுகு காட்டிவிட்டாய்!
இட்ட பெயர் உனக்கு
எதுவாகவும் இருக்கலாம்!
தொழிலாளி வர்க்கத்திற்கு
துரோகம் இழைத்த உன்னை
வரலாறு பதிவு செய்யும்
'துரோகசாமி'
என்றே!
-க.பாலபாரதி
Thursday, July 15, 2010
கிழிந்த காலணிதானா இவர்களின் வாழ்க்கை?
காலணிகள் கால்களுக்கு அழகூட்டும் நாகரிகம் மட்டுமல்ல, கால்களுக்குப் பாதுகாப்பும் கூட. ஆனால், அந்த காலணிகளைத் தைத்து வழங்கும் எளிய உழைப்பாளிகளின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கிறதா?
பளபளக்கும் கண்ணாடி அறைகளில் எவ்வளவு விலை உயர்ந்த காலணிகள் விற்கப்பட்டாலும், அவை அறுந்து போனால் சரிசெய்கிறவர்கள் இவர்களே. அறுந்த வாராய்க் கிடக்கும் இந்த தொழிலாளர்களைக் கண்டுகொள்ளத்தான் எவருமில்லை.
ஒரு சாக்குப் பையும் குடையும் இணைந்த கூடாரமே இவர்களது தொழில் செய்யும் பட்டரை. இவர்களை ஒருபடி உயர்த்துவதற்காக பங்க் எனப்படும் ஒரு தகரக் கூண்டும், உதவித்தொகையும் வழங்கப்பட்டதுண்டு, உலக வேட்டை நிறுவனங்களுக்கு சாதகமான நிலை மாற்றங்களாலும், சமூகநலத்திட்டங்களை வெட்டிச்சுருக்கும் கொள்கையாலும் பின்னர் அந்த உதவிகளை அரசு நிறுத்திக் கொண்டது. மத்திய-மாநில அரசுகளின் இந்தக் கொள்கை மாற்றம் உள்ளாட்சிகளையும் விட்டுவைக்கவில்லை. காலணித் தொழிலாளர்களுக்கென்று தொழில் செய்ய சாலையோரமாகவும், மார்கெட்டிலும் இடம் ஒதுக்கிக் கொடுத்த உள்ளாட்சி அமைப்புகளே இன்று அவர்களை அந்த இடங்களிலிருந்தும் அப்புறப்படுத்துவது இன்னும் வேதனை.
சமூகத்தில் தீயைக் காட்டிலும் கொடுமையான தீண்டாமைக்கு உள்ளான இவர்களை, அரசு எந்திரமும் அப்படியே நடத்துகிறது. சென்னை போன்ற நகரங்களில் ஆங்காங்கே குடிசைகளில் வாழ்ந்தாலும், பெரும்பாலானோரின் வாழ்க்கை என்னவோ அதுவும் இல்லாததாக, ஒற்றைச்சுவர்களிலும், ஒதுக்குப்புறங்களிலும் ஒண்டியதாகவே இருக்கிறது.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சாலையோரம், மார்க்கெட் வாயில், தெரு முனைகள் என வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் கண்ணியமாக தொழில் செய்கிற இவர்களை, நகரத்தை அழகுபடுத்துவது என்ற பெயரால் அடித்து விரட்டுவது என்ன நியாயம்? எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு பங்க்கும், 2500 ரூபாய் பணமும் கொடுத்தாங்க. அந்த பங்க்கை வைத்துக் கொள்ள முனிசிபாலிட்டியே இடம் கொடுத்துச்சி. ஆனா, இப்போ அரசாங்கமும் எங்களுக்கு பங்க் கொடுக்கிறத நிறுத்திக்கிடுச்சி. முனிசிபாலிட்டியும் வெரட்டுது. ஒரு நாள் முழுசும் உழைச்சா 50லிருந்து 100ரூபா கையில நிக்கும். இந்த நிலையிலும் தொழில் செய்ய விடாம வெரட்டுறாங்க, என்கிறார் டி. சுகுமார். தாம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் 30 ஆண்டுகளாக தொழில் செய்து வருபவர் இவர்.
உலகமயம், நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கத்தை நேரடியாக அனுபவிக்கும் சுகுமார், முன்னாடியெல்லாம் புதுசா செருப்பு தைக்க சொல்லிக் கேப்பாங்க, நாங்களும் தைச்சித் தருவோம். ஏதோ கொஞ்சம் காசு கிடைக்கும். பெரிசு பெரிசா கம்பெனிங்க வந்து கடை போட்டுட்டாங்க. அதனால செருப்பு தைக்க சொல்லி யாரும் கேக்கிறது இல்ல. செருப்பு அறுந்தா கூட தைக்க வர்றதில்லை. பழைய ஆளுங்க மட்டும்தான் புதுசா செருப்பு தைக்க சொல்லி கேக்கிறாங்க, என்றார்.
கேம்ப் ரோட்டில் கடை வைத்திருக்கும் சின்னத்தம்பி, சாலையை அகலப்படுத்துறாங்களாம், எம்ஜிஆர் காலத்தில் கொடுத்த பங்க்கை பயன்படுத்தி தொழில் செய்ய முடியவில்லை. கதர் தொழிலை வாழவைக்க எல்லோரும் கதர் வாங்குங்கனு சொல்லுறாங்க, ஆனா எங்களை வாழ வைக்க யார் என்ன செய்கிறார்கள், என்கிறார் ஆதங்கத்தோடு.
குடையையும், அறுந்துபோன காலணிகளையும் சீர்செய்யும் இவர்களின் வாழ்க்கையை சீர் செய்யும் பணியினை சிஐடியு இயக்கம் தொடங்கியுள்ளது. அதற்காக காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் தைக்கும் தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளது.
அருந்ததியர், சக்கிலியர், தோட்டி என பல்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், வாழ்க்கையில் என அனைத்துத் தளங்களில் ஒடுங்கிக் கிடக்கும் இந்த மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற வேண்டும். சமூகத்தில் சம அந்ததோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களை அணிதிரட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறோம். அதற்காக காலணி தைக்கும் தொழிலாளர்களையும், தோல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் திரட்டுகிறோம், என்கிறார் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் எ.அப்பனு.
பெரிய நிறுவனங்கள் கூட ஷூ பாட்டம், அப்பர், டாப் தயாரிக்கும் பணிகளை அவுட்சோர்சிங் விடுகிறார்கள். இந்த நிலையில், சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த, நலவாரிய உறுப்பினர்களிடமே பள்ளி மாணவர்களுக்கான செருப்புத் தைக்கும் பணியை ஒப்படைக்கலாமே என்பது போன்ற ஆலோசனைகளையும் சிஐடியு முன்வைத்திருப்பதை அப்பனு சுட்டிக்காட்டினார்.
நைந்த செருப்பாக உள்ளம் நொந்து கிடக்கும் இவர்களது வாழ்க்கையைத் தைத்து சீராக்க வேண்டியது தனது கடமை என்பதை ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் உணர்வார்களா?
அரசும் உள்ளாட்சியும் செய்ய வேண்டியது
வேலை செய்யும் இடங்களை அடையாளப்படுத்தி பங்க் மற்றும் கடைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்
வேலை செய்யும் உபகரணங்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு இலவசமாக குடியிருப்புகள் அமைத்து கொடுக்க வேண்டும்.
இத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச தேவையை உறுதிசெய்ய அரசுத் துறைகளில் தைத்து அனுப்பப்படும் காலணிகள் மற்றும் தோல் பொருட்களை செய்யும் பணியை, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப அட்டை, சாதிச்சான்று உள்ளிட்ட சமூக நலத் தேவைகளை தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இவர்கள் ஏற்கெனவே சாலையோரம் பங்க் அமைத்துத் தொழில் செய்து வந்த நிலையில் சாலையை அழகுபடுத்துவதாகக்கூறி பங்க்குகள் எடுத்து செல்லப்பட்டன. அந்த பங்க்குகளை உயர்நீதிமன்ற ஆணைப்படி அவர்களிடமே திரும்பவும் வழங்க வேண்டும்.
தாட்கோ பலன்கள் கிடைக்கவும், சுயதொழில் செய்ய வங்கி கடன்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)