மாட மாளிகைகளைக் கட்டி வளர்ச்சி வளர்ச்சி என்று ஒருபுறம் ஆட்சியாளர்கள் கூவினாலும், அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்காமல் இருக்கும் கையாலாகாத் தனத்தை மறைக்க முடியவில்லை. விளைவு: கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் பாலம் கட்டியுள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை ஊராட்சியின் தலைவராக இருப்பவர் வி.எட்டியப்பன். இவர் திமுக காஞ்சி மாவட்ட துணைச் செயலாளராகவும் இருப்பவர். கடந்த 15 வருடங்களாக இவர்தான் ஊராட்சி தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது தொழில் முறை ரவுடிகளைக் கொண்டே அதிகாரத்தை கைப்பற்றியவராம்.
இந்த ஊராட்சியின் வழியாக செல்லும் பக்கிங்காம் கால்வாயின் மேல் பாண்டியன் சாலை அருகே ஒரு நடை பாலம் உள்ளது. இது இருச்சக்கர வாகனங்கள் சென்று வரவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பாலத்திற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் கரையின் இருபுறத்திலும் அண்ணாநகர் என்ற பகுதி உள்ளது.
கால்வாயின் ஒரு புறத்தில் முதல் தெருவையும், மறுபுறத்தில் இரண்டாவது தெருவையும் இணைக்கும் வகையில் 20வருடங்களுக்கு முன்பு ஒரு பாலம் இருந்தது. அப்போது பெய்த மழையில் அது அடித்துச் செல்லப்பட்டது. அந்த பாலத்தை கட்டித்தரக் கோரி ஊராட்சியிடம் முறையிட்டும் பலன் இல்லை.
ஆகையால், அப்பகுதி மக்களே தங்கள் சொந்த செலவில் மரப்பாலம் அமைப்பதும், அது வெள்ளத்தில் அடித்துச் சென்று விடுவதும் தொடர்கதையாகியது. பின்னர் சிமெண்ட் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு தற்காலிகப் பாலம் அமைத்தனர். அதுவும் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்கவில்லை.
ராஜீவ்காந்தி சாலை, பெருங்குடி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர், ரசாயன கழிவுகள் கால்வாயில் விடப்படுகின்றன. இதனால் கால்வாயில் வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி ஓடுகிறது. அந்த நுரை பாலத்தையே மூடிக் கொள்கிறது. இதனால் பலர் கால் வழுக்கி கால்வாயில் விழுந்துவிடுவது அன்றாட நிகழ்ச்சி. இதன்பின்னரும் ஊராட்சி நிர்வாகம் அங்கு பாலம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த குலாம், சதிஷ், ரவிச்சந்திரன், அப்பு, பிரகாஷ், வெல்டர் வேலு 1வது வார்டு உறுப்பினர்கள் ஆதிநாராயணன், பெருமாள் போன்றோர் ஒன்று சேர்ந்து 30ஆயிரம் ரூபாய் நிதி வசூலித்து ஒரு இரும்பு நடை பாலத்தை அமைத்துள்ளனர்.
வாலிபர் சங்கத்தினரின் உழைப்பு தானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாலத்தின் பணிகளை முடிக்க கூடுதலாக நிதி தேவைப்பட்டது. ஆதிநாராயணன் தனது மனைவியின் தாலியை அடகுவைத்து 9ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். தற்போது நடந்து செல்ல அந்த பாலம் பயன்படுத்தப்படுகிறது.
இப்பாலத்தை முழுமையாக கட்டி முடிக்க இன்னும் 20ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.
இப்பகுதி வாலிபர் சங்க தலைவர் குலாம் கூறுகையில், “முதல் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து போல், இரண்டாவது தெருவில் செய்ய மறுக்கிறார்கள். முறைகேடுகளைத் தட்டிக் கேட்பதால், 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. மக்களை பழிவாங்குகிறார்கள்; மிரட்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
கால்வாயில் சுத்திகரிக்கப்படாத வேதிப்பொருள் கழிவுகள் கலப்பதால் வெள்ளை நிற நுரை பொங்குவதுடன் காற்றில் பறந்து பரவவும் செய்கிறது. அந்த நுரை உடலில் பட்டால் அரிப்பு ஏற்படுகிறது. துணிகளில் கரைபிடித்துக் கொள்கிறது. குடிநீரில் விழுந்தால் அதனை பயன்படுத்த முடியாமல் போகிறது என்றும் அவர் கூறினார்.
சாலையை அமைத்து கொடுக்க வலியுறுத்தி பல முறை தலைவரிடம் கூறியும் அவர் கண்டு கொள்ளாமலே இருக்கிறார் என்று ஆதிநாராயணன் கூறினார்.
பேரு பெத்த பேரு, தாக நீலு லேது என்பது போல, வளமான வருவாய் கொண்ட ஊராட்சியில், தலைவரின் பாரபட்சத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இனியாவது இதில் அரசு நிர்வாகம் தலையிடுமா? அல்லது, நல்லதாகப் போயிற்று இனி எல்லாத் தேவைகளையும் இப்படியே மக்கள் தங்கள் செலவிலேயே செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுமா?